WTC Lose: இனிமே கஷ்டம்தான்... முடிவுக்கு வரப்போகும் சீனியர் வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கை..?
WTC இறுதிப்போட்டியில் இடம்பெற்ற சிலரை மாற்றிவிட்டு புதிய முகங்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று தெரிகிறது. அவர்கள் யார் என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் போது, ஆஸ்திரேலிய அணியின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் இந்தியா 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இது WTC இறுதிப் போட்டியில் இந்தியாவின் இரண்டாவது தொடர்ச்சியான தோல்வியாகும். 2013 சாம்பியன்ஸ் டிராபிக்குப் பிறகு எந்த ஐசிசி கோப்பையையும் வெல்லாத இந்திய அணியின் காத்திருப்பு இன்னும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோல்வி:
இந்தியா முதலில் பந்து வீசுவதைத் தேர்ந்தெடுத்த பிறகு தொடக்க நாளில் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே எடுக்க முடிந்த நிலையில், அதன் பின் ஆஸ்திரேலிய அணி நல்ல நிலைக்கு முன்னேறி சென்றது. தொடர்ந்து ஆடிய இந்திய அணியும் 296 ரண்களுக்கு ஆல் அவுட் ஆக, இந்திய அணி மீளமுடியாத இடத்தை அடைந்து இறுதியில் பரிதாபகரமாக தோல்வி அடைந்தது. இரண்டு WTC இறுதிப் போட்டியிலும் நுழைந்த ஒரே அணியாக உள்ள இந்திய அணி, இன்னும் கோப்பையை வெல்லாமல் தவித்து வருகிறது.
லோ ஸ்கோரிங் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட 2021 போட்டியில் நியூசிலாந்திடம் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியா தனது அடுத்த WTC சுழற்சியின் தொடக்க ஆட்டத்தில், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டு வெளிநாட்டு டெஸ்ட்களுடன் தொடங்கும். அதில் WTC இறுதிப்போட்டியில் இடம்பெற்ற சிலரை மாற்றிவிட்டு புதிய முகங்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று தெரிகிறது. அவர்கள் யார் என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
- சேதேஷ்வர் புஜாரா
இந்தியாவின் நீண்டகாலமாக நம்பர் 3 வீரராக இருக்கும் சேட்டேஷ்வர் புஜாரா மீண்டும் ஒரு முக்கியமான ஆட்டத்தில், மற்றொரு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இந்தியாவுக்கு தலைவலியாக அமைந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் அதிகமாக ரன் குவிக்காமல் இருந்த அவர், தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்குப் பிறகு கடந்த ஆண்டு கைவிடப்பட்டார்.
இருப்பினும், கவுண்டி தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், தேர்வாளர்கள் அவரை இங்கிலாந்தில் நடந்த ஒரே ஒரு டெஸ்ட் போட்டிக்கு திரும்ப அழைத்தார். ஆனால் அந்த போட்டியில் புஜாரா போதுமான அளவு சீராக ரன் குவிக்கவில்லை. WTC பைனலில் அவர் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அவுட் ஆன விதம் பலரை அதிருப்தி அடைய செய்தது. எனவே இந்திய டெஸ்ட் அணியில் புஜாரா மீண்டும் தனது இடத்தை இழப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- கே.எஸ்.பாரத்
ரிஷப் பந்த் காயம் அடைந்ததன் காரணமாக, WTC இறுதிப் போட்டியில் கேஎஸ் பாரத் வரலாற்றை எழுதுவதற்கான சிறந்த வாய்ப்பைப் பெற்றார். இந்தியன் பிரீமியர் லீக்கிற்கு (ஐபிஎல்) முன்னதாக பார்டர் கவாஸ்கர் டிராபியிலும் பாரத் விளையாடினார். அவரது விக்கெட் கீப்பிங் மற்றும் டிஆர்எஸ் முடிவுகள் சிறந்ததாக இருந்தாலும் அவரது பேட்டிங் திருப்திகரமாக இல்லை என்பது இந்திய அணிக்கு பின்னடைவாக இருந்தது.
பலரும் அவரது டிஆர்எஸ் முடிவையும், வேகமாக செயல்படும் விக்கெட் கீப்பிங் திறனையும் பாராட்டினாலும், அவரது பேட்டிங் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை என்பது தான் உண்மை. பாரத் 8 டெஸ்ட் போட்டிகளில் வெறும் 129 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதுவரை டெஸ்டில் அவரது இன்னிங்ஸ் சராசரியாக 18.4 மட்டுமே உள்ளது. பின்னால் இஷான் கிஷன் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்கள் காத்திருப்பதால் அவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைப்பது கடினம்தான்.
- உமேஷ் யாதவ்
WTC இறுதிப் போட்டி, உமேஷ் யாதவின் கிரிக்கெட் வாழ்க்கையின் 57 வது டெஸ்ட் ஆகும். ஆனால் இந்த போட்டியில் அவரது செயல்திறன் முழுமையாக இருக்கவில்லை. அவர் முதல் நாள் புதிய பந்தில் கூட விக்கெட்டுகள் எடுக்கவில்லை, அதோடு ஆட்டம் முழுவதும் எதிர்பார்த்தபடி பந்து வீசவில்லை. இரண்டாவது இன்னிங்ஸில் அவர் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தாலும், இந்தியாவுக்கு அது மிகவும் தாமதமாகதான் கிடைத்தது. உமேஷின் செயல்திறன் குறிப்பாக ஓவர்சீஸ் போட்டிகளில் சுமாராகவே இருந்துள்ளது. இதனால் அவர் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்திற்கான தனது இடத்தை இழக்கலாம் என்று தெரிகிறது.