Rohit Sharma: வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு பிறகு புதிய கேப்டன்..! ரோகித்தை தூக்க பி.சி.சி.ஐ. பிளான்..?
WTC தொடரின் இறுதி முடிவு ரோஹித்தின் டெஸ்ட் கேப்டன்ஷிப் எதிர்காலத்தில் ஒரு பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது. பிசிசிஐயின் தேர்வுக் குழு இந்த ஆண்டு இது குறித்து மிகப்பெரிய முடிவை எடுக்கும் என்று தெரிகிறது.
ஐபிஎல் தொடரில் சிறப்பாக கேப்டன்சி செய்து கோப்பைகளை வென்ற ரோஹித் சர்மாவை இந்திய அணிக்கும் நன்றாக கேப்டன்சி செய்வார் என்று எல்லா வகையான கிரிக்கெட்டிற்கும் கேப்டன் ஆக்கிய நிலையில், டி20 உலகக்கோப்பை தோல்விக்கு பிறகு அந்த ஃபார்மட்டில் இருந்து அவருக்கு பதிலாக, ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக மாற்றினார்கள்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோல்வி:
இந்த நிலையில் டெஸ்ட் கேப்டனாக தனது மிகப்பெரிய பணிக்காக லண்டனுக்குச் சென்ற அவர், வெளிநாட்டு மண்ணில் முதல் டெஸ்ட் போட்டியை கேப்டன்சி செய்யவும் சென்றார். ஆனால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் போது, ஆஸ்திரேலிய அணியின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் இந்தியா 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இது WTC இறுதிப் போட்டியில் இந்தியாவின் இரண்டாவது தொடர்ச்சியான தோல்வியாகும். இந்த WTC தொடரின் இறுதி முடிவு இப்போது ரோஹித்தின் டெஸ்ட் கேப்டன்ஷிப் எதிர்காலத்தில் ஒரு பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது. பிசிசிஐயின் தேர்வுக் குழு இந்த ஆண்டு இது குறித்து மிகப்பெரிய முடிவை எடுக்கும் என்று தெரிகிறது.
மேற்கிந்திய தீவுகள் தொடரே கடைசி வாய்ப்பு
ஒரு PTI அறிக்கையின்படி, WTC 2023/25 சுழற்சிக்கான தொடக்க ஆட்டத்தில் இந்திய அணியை ரோஹித் வழிநடத்த வாய்ப்புள்ளது என்று தெரிகிறது. அதில் அவர்கள் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் மேற்கிந்திய தீவுகளை எதிர்கொள்கிறார்கள். அந்த இரண்டு போட்டிகளிலும் ரோஹித் ஷர்மா கேப்டன்சி தவிர்த்து, பேட்ஸ்மேனாக சிறப்பாக செயல்பட தவறும் பட்சத்தில், தேர்வாளர்கள் மிகப்பெரிய முடிவை எடுக்க வாய்ப்புள்ளது என்று தெரிகிறது.
'ரோஹித் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்பது ஆதாரமற்ற விஷயம்தான், ஆனால் 2025 ஆம் ஆண்டில் WTC மூன்றாவது சீசன் முடிவடையும் போது அவருக்கு கிட்டத்தட்ட 38 வயது இருக்கும் என்பதால், அவர் இரண்டு வருட WTC சுழற்சியில் முழுவதுமாக நீடிப்பாரா என்பது ஒரு பெரிய கேள்வி' என்று பி.சி.சி.ஐ. மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முடிவெடுக்க நிறைய நேரம் உள்ளது
மேற்கிந்தியத் தீவுகள் டெஸ்ட் தொடருக்குப் பிறகு இந்தியா ODI உலகக் கோப்பைக்கு தங்கள் கவனத்தை திருப்பும். "வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்குப் பிறகு, டிசம்பர் இறுதியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்குச் செல்லும் வரை வேறு எந்த டெஸ்ட் போட்டியும் இல்லை. எனவே தேர்வாளர்கள் ஆலோசித்து முடிவெடுக்க போதுமான நேரம் உள்ளது. அதற்குள் ஐந்தாவது தேர்வாளரான, புதிய தேர்வுக்குழு தலைவர் இணைவார். அவரோடு சேர்ந்து ஒரு முடிவை எடுக்க முடியும்," என்றார்.
2022 ஜனவரியில் விராட் கோலி டெஸ்ட் கேப்டன் பதவியை ராஜினாமா செய்த பிறகு ரோஹித் அதனை ஏற்க தயக்கம் காட்டினார் என்றும், முன்னாள் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் கேஎல் ராகுல் மீது ஈர்க்கப்படாததால், அந்த பதவியை ஏற்க அவரை வற்புறுத்தியவர்கள் என்றும் அறிக்கை மேலும் வெளிப்படுத்தியது.
கேப்டன்சி ஏற்கத் தயங்கிய ரோஹித்
தென்னாப்பிரிக்காவில் நடந்த அந்த ஒரு ஆட்டத்தில் ராகுல் கேப்டன்சி மீது பெரிதாக பிசிசிஐ-க்கு நம்பிக்கை ஏற்படவில்லை. தென்னாப்பிரிக்காவில் கே.எல்.ராகுல் ஒரு கேப்டனாக ஈர்க்கத் தவறியதால், அந்த நேரத்தில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் ரோஹித்தை அந்த பாத்திரத்தை ஏற்கும்படி வற்புறுத்த வேண்டியிருந்தது," என்று அந்த வட்டாரம் பிடிஐயிடம் தெரிவித்தது.
ரோஹித் இதுவரை ஏழு டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவை வழிநடத்தியுள்ள நிலையில், அதில் மூன்றில் தோல்வியை சந்தித்துள்ளார். அந்த ஏழு போட்டிகளில், 14 இன்னிங்ஸ்களில், அவர் 35.45 சராசரியில் 390 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். நாக்பூரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 120 ரன்கள் எடுத்தது மட்டுமே அவரது ஒரே சிறந்த ஆட்டமாகும்.