Team India A Squad: நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான இந்திய ஏ அணி அறிவிப்பு..! ஐ.பி.எல்லில் கலக்கிய இளசுகள் யார், யார்..?
நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்திய ஏ அணிக்கு கேப்டனாக பிரியங்க் பஞ்சல் நியமிக்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து ஏ கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய ஏ அணியுடன் நான்கு நாள் போட்டி மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஆட உள்ளது. இந்த போட்டிக்கான இந்திய ஏ அணியை பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.
NEWS - India A squad for four-day matches against New Zealand A announced.@PKpanchal9 to lead the team for the same.
— BCCI (@BCCI) August 24, 2022
Full squad details here 👇https://t.co/myxdzItG9o
பெங்களூரில் செப்டம்பர் 1-ந் தேதி இந்த தொடர் தொடங்க உள்ளது. இந்த போட்டித் தொடருக்கான இந்திய ஏ அணிக்கு கேப்டனாக பிரியங்க் பஞ்சல் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியில் அபிமன்யு ஈஸ்வரன், ருதுராஜ் கெய்க்வாட், ரஜத்படிதார், சர்பாஸ் கான், திலக் வர்மா, கே.எஸ்.பரத், உபேந்திர யாதவ், குல்தீப்யாத், சவுரப் குமார், ராகுல்சாஹர், பிரசித்கிருஷ்ணா, உம்ரான் மாலிக், முகேஷ்குமார், யஷ்தயாள், அர்சான் நாக்வாஸ்வல்லா ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான இந்திய ஏ அணியில் இளம் வீரர்கள் பலருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆஸ்தான வீரர் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஐ.பி.எல்.லில் மும்பைக்காக அசத்திய திலக் வர்மா, புயல் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக், சுழலில் அசத்தும் ராகுல் சாஹர், பெங்களூர் அணிக்காக கடந்த ஐ.பி.எல்.லில் அசத்திய ரஜத்படிதார், கே.எஸ்.பரத் ஆகியோர் அசத்துவார்களா? என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இந்திய அணிக்காக ஆடிய அனுபவமிகுந்த குல்தீப்யாதவ், பிரசித்கிருஷ்ணா ஆகியோர் மீதும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூர் மற்றும் ஹூப்ளியில் நடைபெற உள்ள நான்கு நாள் டெஸ்ட் போட்டிக்கான அணி மட்டுமே தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெறும் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய ஏ அணி 3 நான்கு நாட்கள் நடைபெறும் டெஸ்ட் போட்டியிலும், மூன்று ஒருநாள் போட்டியிலும் விளையாட உள்ளது. செப்டம்பர் 1 –ந் தேதி போட்டி தொடங்கப்பட உள்ளது. செப்டம்பர் 1-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை முதல் டெஸ்ட் போட்டி பெங்களூரிலும், செப்டம்பர் 8-ந் தேதி முதல் செப்டம்பர் 11-ந் தேதி வரை இரண்டாவது டெஸ்ட் போட்டி ஹூப்ளியிலும், செப்டம்பர் 15-ந் தேதி முதல் செப்டம்பர் 18-ந் தேதி வரை பெங்களூரிலும் டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளது.
மூன்று ஒருநாள் போட்டிகளும் இந்தியாவில் நடைபெற உள்ளது. செப்டம்பர் 22-ந் தேதி முதல் ஒருநாள் போட்டியும், செப்டம்பர் 25-ந் தேதி இரண்டாவது ஒருநாள் போட்டியும், செப்டம்பர் 27-ந் தேதி மூன்றாவது போட்டியும் நடைபெற உள்ளது.