ரசிகர்களே! கோவையில் லண்டன் லார்ட்ஸ் மைதான தரத்தில் கிரிக்கெட் ஸ்டேடியம்! இதோ விவரம்..
புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தின் தரத்தில் கோவையில் சர்வதேச அளவிலான கிரிக்கெட் ஸ்டேடியம் கட்ட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டிற்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். நாட்டின் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானங்களில் ஒன்று தமிழ்நாட்டிலும் உள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானம் நாட்டின் பழமையான மைதானங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.
கோவையில் கிரிக்கெட் மைதானம்:
சென்னை மட்டுமின்றி மற்ற பெரிய நகரங்களிலும் சர்வதேச அளவிலான கிரிக்கெட் போட்டிகள் நடத்துவதற்காக கிரிக்கெட் மைதானம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வந்தது. இதையடுத்து, தமிழ்நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான கோயம்புத்தூரில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கான பணிகள் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோரின் மேற்பார்வையில் நடைபெற உள்ளது. இந்த மைதானத்தை நாட்டிலே மிகப்பெரிய அளவிலான மைதானமாக கட்டுவதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.
எங்கு அமைகிறது?
கோவையில் புதிய கிரிக்கெட் மைதானத்தை கட்டுவதற்கு தேசிய நெடுஞ்சாலையான என்.எச்.44ல் கோவை நகரத்தில் இருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடத்தை அரசு தேர்வு செய்துள்ளது.. கோவையில் கட்டப்பட உள்ள இந்த புதிய மைதானத்தில் இருக்கைகள் நாட்டில் உள்ள மற்ற மைதானத்தை காட்டிலும் அதிகளவில் இருக்கும் வகையில் கட்டப்பட உள்ளது. இந்த புதிய கிரிக்கெட் மைதானத்திற்கான விரிவான திட்ட அறிக்கை மற்றும் வடிவமைப்பு ஆலோசனைகளுக்கான டெண்டர்களை மாநில அரசு ஏற்கனவே தொடங்கிவிட்டது.
லார்ட்ஸ் மைதான தரம்:
உலகின் மிக பழமையான கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றான புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தின் தரத்தில் இந்த மைதானத்தை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. மைதானத்தில் பார்வையாளர்களுக்கான அனைத்து வசதிகளுடன், வி.ஐ.பி. இருக்கைகள் வசதிகள், வீரர்களுக்கான அறைகள், ஊடகங்களுக்கான அறைகள், பொதுமக்கள் உணவகங்கள், கிரிக்கெட் அருங்காட்சியகம் என பல வசதிகளுடன், வீரர்கள் பயிற்சி செய்வதற்கான இடங்கள் என அனைத்து வித வசதிகளுடன் இந்த மைதானத்தை கட்டமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது வரை சென்னையில் மட்டுமே சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. டி.என்.பி.எல். போட்டிகள் மட்டுமே தமிழ்நாட்டின் மற்ற நகரங்களில் நடத்தப்படுகிறது. கோவையில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்தை கட்டுவதன் மூலமாக கோவையை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு நகர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கோவையில் சர்வதேச தரத்திலான மைதானம் அமைய இருப்பது கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.