Namibia cricket: டி-20 உலகக்கோப்பையில் மனங்களை வென்ற நமீபியா: கத்துக்குட்டி... கற்றுக் கொடுத்தது!
போட்டி முடிந்தபின் மற்ற அணி வீரர்களோடு உரையாடுவது, அனுபவங்களை பகிர்ந்து கொள்வது, கற்றுக் கொள்வது என ஏற்கனவே நமீபியா கிரிக்கெட் அணி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டது.
டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் சூப்பர் 12 சுற்றின் கடைசி நாள் இன்று. இந்த சுற்றின் கடைசி போட்டியில், இந்தியா - நமீபியா அணிகள் துபாய் கிரிக்கெட் மைதானத்தில் மோதி வருகின்றன. இந்நிலையில், க்ரூப்:2-ல் இடம் பிடித்திருந்ந்த இந்த இரு அணிகளும் அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெறாமல் சூப்பர் 12 சுற்றோடு வெளியேறியுள்ளது. இந்திய அணியைப் பொருத்தவரை, இது மிகுந்த ஏமாற்றத்தை தந்திருந்தாலும், நமீபியா அணிக்கு இதுவே ஆரம்பம்! நல்லதொரு ஆரம்பம்!
சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான முதல் சுற்று ஆட்டத்தில், அயர்லாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று கிரிக்கெட் உலகை திரும்பி பார்க்க வைத்தது நமீபியா அணி. இதன் மூலம், முதல் முறையாக டி-20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியது.
அடுத்த சுற்றுக்கு முன்னேறிய நமிபியா அணி, இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, ஸ்காட்லாந்து அணிகளை எதிர்கொண்டு விளையாடியது. இதில், ஸ்காட்லாந்துக்கு எதிரான முதல் போட்டியை வென்று அசத்திய நமீபியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டிகளில் தோல்வியை கண்டது. சூப்பர் 12 சுற்றில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் இருந்திருந்தாலும், கோப்பையை கைப்பற்றுவதைவிட, கிரிக்கெட்டின் முன்னணி அணிகளுடன் உலகக்கோப்பை போன்ற தொடர்களில் விளையாடி அனுபவத்தை பெற்றிருப்பதிலேயே நமீபியா வெற்றி கண்டுவிட்டது.
Namibia have certainly won lots of new fans at the #T20WorldCup 🙌
— ESPNcricinfo (@ESPNcricinfo) November 8, 2021
கடந்த 2019-ம் ஆண்டு முதல் நமீபியா கிரிக்கெட் அணியின் துணை பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார் முன்னாள் தென்னாப்ரிக்க கிரிக்கெட் வீரரும், முன்னாள் சிஎஸ்கே அணி வீரருமான ஆல்பி மார்கல். நமீபியா அணியின் தலைமை பயிற்சியாளர் பியரி டி ப்ரூன், ஆல்பி மார்கலுடன் இணைந்து நமிபியாவின் உலகக்கோப்பை கனவுக்கு விதை போட்டுள்ளனர். கடந்த 2019-ம் ஆண்டுதான் நமீபியா கிரிக்கெட் அணிக்கு ஒரு நாள் கிரிக்கெட் அணியாக அங்கீகாரம் வழங்கப்பட்டது. நமீபியா போன்ற கத்துக்குட்டி அணிக்கு இதுவே தொடக்கம். இனி, கிரிக்கெட் தளத்தில் மெதுவாக வளர்ச்சி காணும் என தெரிகிறது.
போட்டி முடிந்தபின் மற்ற அணி வீரர்களோடு உரையாடுவது, அனுபவங்களை பகிர்ந்து கொள்வது, கற்றுக் கொள்வது என ஏற்கனவே நமீபியா கிரிக்கெட் அணி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டது. வெற்றியோ, தோல்வியோ கிரிக்கெட் ரசிகர்களை கவனத்தை ஈர்த்த நமீபியா அணிக்கு இது வெறும் தொடக்கமே!
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்