India T20 World Cup Squad: உலகக்கோப்பை அணியில் தேர்வான இந்திய வீரர்கள்! ஐபிஎல்லில் அவர்களின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
India T20 World Cup Squad: வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் 1ஆம் தேதி தொடங்க உள்ளது டி20 உலகக் கோப்பை 2024.
டி20 உலகக் கோப்பை:
ஐ.பி.எல் சீசன் 17 கடந்த மார்ச் 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் தொடங்கியது. அந்த வகையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த சீசனில் இறுதிப் போட்டியும் சென்னை சேப்பாக்கத்தில் தான் நடைபெற உள்ளது. அதன்படி இறுதிப் போட்டி வரும் மே மாதம் 26 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் வரும் ஜூன் 1 ஆம் தேதி கோலாகலமாக தொடங்க உள்ளது டி20 உலகக் கோப்பை 2024 தொடர். இந்த உலகக் கோப்பைக்கான நியூசிலாந்து அணியின் வீரர்கள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் இந்திய அணியின் வீரர்கள் தொடர்பான தகவல்கள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்தது.
இந்திய அணி வீரர்கள்:
இந்நிலையில் தான் பிசிசிஐ இன்று (ஏப்ரல் 30) ஆம் தேதி டி20 உலகக் கோப்பையில் விளையாடப்போகும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தொடர்பான தகவலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி இந்திய அணியின் கேப்டனாக ஹிட்மேன் ரோகித் சர்மாவும், துணைக் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், இளம் வீரர் யஜஸ்வி ஜெய்ஸ்வாலுக்கும் அணியில் இடம் கிடைத்துள்ளது. இந்திய அணியின் அதிரடி பேட்டர் கிங் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோரும் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
விக்கெட் கீப்பருக்கான போட்டியில் ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், தினேஷ் கார்த்திக் மற்றும் துருவ் ஜூரெல் உள்ளிட்டோர் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், பிசிசிஐ சஞ்சு சாம்சன் மற்றும் ரிஷப் பண்டை அணியில் சேர்த்துள்ளது. அதேபோல், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்ஸர்படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங் வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ் உள்ளிட்டோருக்கு இந்த டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது. அதேபோல், சுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அகமது மற்றும் அவேஷ் கான் உள்ளிட்டோரை மாற்று வீரராக பிசிசிஐ தேர்வு செய்துள்ளது. பிசிசிஐ யின் இந்த தேர்வை பார்த்த ரசிகர்கள் ஐபிஎல் போட்டியின் அடிப்படையில் தான் பிசிசிஐ அணி வீரர்களை தேர்வு செய்துள்ளது என்பது போல் சமூக வலைதளங்களில் கூறிவருகின்றனர். அதன்டி இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வீரர்களின் ஐ.பி.எல் டி20யில் எப்படி தங்களது திறமையை வெளிப்படுத்தி உள்ளனர் என்பதை கீழே விரிவாக பார்ப்போம்:
ரோகித் சர்மா:
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் ரோகித் சர்மா இந்த சீசனில் 9 லீக் போட்டிகளில் விளையாடி உள்ளார். இதில், 311 ரன்களை குவித்துள்ள அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஒரு சதம் (105*) அடித்துள்ளார். 31 பவுண்டரிகள் மற்றும் 18 சிக்ஸர்களை விளாசி உள்ளார் ரோகித் சர்மா.
விராட் கோலி:
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி இந்த சீசனில் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் அதிக ரன்களை கடந்த வீரராக இருக்கிறார். 10 லீக் போட்டிகளில் ஆடியுள்ள விராட் 4 அரைசதம் மற்றும் 1 சதம் (113*) அடித்துள்ளார். அந்த வகையில் 500 ரன்களை குவித்துள்ள இவர் 46 பவுண்டரிகள் மற்றும் 20 சிக்ஸர்களை பறக்கவிட்டுள்ளார்.
ஹர்திக் பாண்டியா:
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருப்பவர் ஹர்திக் பாண்டியா. ஆல்ரவுண்டரான இவர் பேட்டிங்கை பொறுத்தவரை 9 லீக் போட்டிகளில் விளையாடி உள்ளார். மொத்தம் 197 ரன்கள் எடுத்துள்ளார். பந்து வீச்சை பொறுத்தவரை 4 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
யஜஸ்வி ஜெய்ஸ்வால்:
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டியில் விளையாடி வருபவர் யஜஸ்வி ஜெய்ஸ்வால். இந்த சீசனில் இதுவரை 9 லீக் போட்டிகள் விளையாடி உள்ள இவர் 1 சதம் (104*) விளாசி உள்ளார். 30 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 249 ரன்கள் எடுத்துள்ளார்.
சூர்யகுமார் யாதவ்:
மும்பை இந்தியன்ஸ் அணியில் ஐ.பி.எல் சீசனில் விளையாடி வருபவர் சூர்யகுமார் யாதவ். இந்த சீசனில் இதுவரை 6 லீக் போட்டிகள் விளையாடி உள்ள இவர் 2 அரைசதங்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 78 ரன்கள் எடுத்துள்ள இவர் மொத்தம் 166 ரன்களை இதுவரை பதிவு செய்துள்ளார்.
ரிஷப் பண்ட்:
ஐ.பி.எல்லில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக இருப்பவர் ரிஷப் பண்ட். இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்டரான இவர் இந்த ஐபிஎல் போட்டியில் 11 லீக் போட்டியில் விளையாடி உள்ளார். இதில் 3 அரைசதங்கள் எடுத்துள்ளார் ரிஷப் பண்ட். 88 ரன்கள் அதிகபட்சமாக எடுத்துள்ள ரிஷப் மொத்தம் 398 ரன்களை குவித்து அதிக ரன்கள் குவித்த டாப் 10 வீரர்களில் ஒருவராக இருக்கிறார். அதேபோல் 31 பவுண்டரிகள் மற்றும் 24 சிக்ஸர்களை பறக்கவிட்டுள்ளார்.
சஞ்சு சாம்சன்:
ராஜஸ்தான் ராயல் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன். அந்த அணியின் விக்கெட் கீப்பர் பேட்டராக உள்ள இவர் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் ஒருவராக இருக்கிறார். மொத்தம் 9 லீக் போட்டிகளில் விளையாடி உள்ள சஞ்சு 4 அரைசதங்கள் உட்பட மொத்தம் 385 ரன்கள் குவித்துள்ளார்.
ஷிவம் துபே:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐ.பி.எல் சீசனில் விளையாடி வருபவர் ஷிவம் துபே. இந்த சீசனில் சிக்ஸர் துபே என்ற அழைக்கப்படும் அளவிற்கு 26 சிக்ஸர்களை விளாசி உள்ளார். 9 லீக் போட்டிகளில் விளையாடி உள்ள ஷிவம் 66* என்ற அதிகபட்ச ரன்களுடன் மொத்தம் 350 ரன்களை குவித்துள்ளார்.
ரவீந்திர ஜடேஜா:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா. இதுவரை இந்த சீசனில் 9 லீக் போட்டிகளில் விளையாடி உள்ள இவர் 1 அரைசதம் அடித்திருக்கிறார். மொத்தம் 157 ரன்கள் எடுத்துள்ளார். பந்து வீச்சை பொறுத்தவரை 5 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இதில் 18 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை அதிகபட்சமாக எடுத்து அசத்தி இருக்கிறார் ரவீந்திர ஜடேஜா.
அக்ஸர் படேல்:
டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் வீரர் அக்ஸர் படேல். இந்த சீசனில் இதுவரை 11 லீக் போட்டிகளில் விளையாடி உள்ள இவர் 149 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஒரு அரைசதம் அடங்கும். பந்து வீச்சை பொறுத்தவரை 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் அக்ஸர் படேல்.
குல்தீப் யாதவ்:
டெல்லி கேபிடல்ஸ் அணியின் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ். இதுவரை 8 லீக் போட்டிகளில் விளையாடி உள்ள இவர் 12 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். இதில் அதிகபட்சமாக 55 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி உள்ளார் குல்தீப் யாதவ்.
யுஸ்வேந்திர சாஹல்:
ஐ.பி.எல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருபவர் யுஸ்வேந்திர சாஹல். சுழற்பந்து வீச்சாளரான இவர் 9 லீக் போட்டிகள் விளையாடி உள்ளார். இதில், 13 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 11 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியிருந்தார்.
அர்ஷ்தீப் சிங்:
பஞ்சாப் கிங்ஸ் அணியின் பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங். இளம் வீரரான இவர் இந்த ஐ.பி.எல் சீசனில் 9 லீக் போட்டிகளில் விளையாடி உள்ளார். இதில், 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதிகபட்சமாக 29 ரனக்ளை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்துள்ளார் அர்ஷ்தீப் சிங்.
ஜஸ்ப்ரித் பும்ரா:
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடி வருபவர் ஜஸ்ப்ரித் பும்ரா. இந்த சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக இருக்கிறார். அந்தவகையில், மொத்தம் 9 லீக் போட்டிகளில் விளையாடி உள்ள ஜஸ்ப்ரித் பும்ரா 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் அதிகபட்சமாக 21 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருக்கிறார் பும்ரா.
முகமது சிராஜ்:
ஐ.பி.எல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருபவர் முகமது சிராஜ். 9 லீக் போட்டிகளில் விளையாடி உள்ள இவர் 6 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதில் அதிகபட்சமாக 26 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். இந்த ஐ.பி.எல் சீசனில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி வீரர் உலகக் கோப்பை டி20 தொடரில் தங்களது திறமையை வெளிப்படுத்தி கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்பதே ரசிகர்கள் எண்ணமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.