2024 T20 உலகக் கோப்பையை நடத்த வாடகை உபகரணங்களை வாங்கும் அமெரிக்கா.. ஐசிசி அதிர்ச்சி தகவல்!
T20 World Cup : 2024 டி20 உலகக் கோப்பையை நடத்த அமெரிக்கா தற்காலிக தயாரிப்புகளை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
2024 டி20 உலகக் கோப்பை போட்டியை இந்தாண்டு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இணைந்து நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெறவிருக்கும் டி20 உலகக் கோப்பை குறித்து ஐசிசி ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.
அதன்படி, இந்த டி20 உலகக் கோப்பையை நடத்த அமெரிக்கா தற்காலிக தயாரிப்புகளை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் ஆடுகளம் மெல்போர்னில் இருந்து கொண்டு வரப்படும் என்றும், பார்வையாளருக்கான நாற்காலிகள் லாஸ் வேகாஸிலிருந்து கொண்டு வரப்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்தியா - பாகிஸ்தான் போட்டி:
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024ல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஜூன் 9ம் தேதி நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி ஸ்டேடியத்தில் மோதுகிறது. இதற்காக 34,000 பார்வையாளர்கள் அமரக்கூடிய தற்காலிக கேலரி கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு பிறகு அகற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இங்கிலாந்தின் மைதானங்கள் மற்றும் மும்பையின் சின்னமான வான்கடே ஸ்டேடியம் உட்பட உலகெங்கிலும் உள்ள பல புகழ்பெற்ற கிரிக்கெட் ஸ்டேடியங்களை விஞ்சும் திறன் கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
மன்ஹாட்டனில் இருந்து கிழக்கே 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள நாசாவ் கவுண்டி மைதானத்தை ஒரு வரலாற்று கிரிக்கெட் நிகழ்வின் மையமாக நிலைநிறுத்துகிறது. எந்தவொரு கிரிக்கெட் போட்டியின் முக்கிய அங்கமான ஆடுகளம் சிறப்பு கவனம் பெறுகிறது. இதையடுத்து, அடிலெய்டு ஓவலின் கியூரேட்டரான டாமியன் ஹக், டிராப்-இன் பிட்ச்களை வடிவமைக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
டாமியன் ஹக் வழிகாட்டுதலின்படி, தற்போது புளோரிடாவில் ஆடுகளங்கள் சீரமைக்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் டி20 உலகக் கோப்பை விளையாட்டுகளுக்கான ஆடுகளங்கள் உலக முழுவதும் பிரபலமாக இருக்கும் கிரிக்கெட் ஆடுகளத்தின் தரத்திற்கு குறைவாக இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்காலிகம் - ஆனால் உலகத்தரம் வாய்ந்த வசதிகள்:
அடிலெய்டு ஓவல் கியூரேட்டர் டேமியன் ஹூக் தயாரித்த டி20 உலகக் கோப்பையில் அமெரிக்காவில் விளையாடுவதற்கு ட்ராப்-இன் பிட்ச்கள் பயன்படுத்தப்பட இருக்கிறது. ட்ராப் இன் பிட்ச்கள் என்பது ஏதோ ஒரு மைதானத்திலிருந்து உருவாக்கப்பட்ட பிட்சை, உடைத்து எடுத்து கொண்டு வந்து மற்றொரு மைதானத்தில் பொறுத்தப்பட்டு விளையாடப்படும்.
ஐசிசி நிகழ்வுகள் இயக்குனர் கிறிஸ் டெட்லி இதுகுறித்து கூறுகையில், "ஏற்கனவே கட்டமைக்கப்பட்ட டட்ராப்-இன் பிட்ச்களை நாங்கள் பயன்படுத்த இருக்கிறோம். இந்த விஷயத்தில் நிபுணரான அடிலெய்டு ஓவல் கியூரேட்டர் டேமியன் ஹக் அவர்களின் நிபுணத்துவத்தைப் பயன்படுத்த இருக்கிறோம். அவர் டிரேக்களை உருவாக்கி பராமரித்து வருகிறார். அவைகள் புளோரிடாவில் உள்ளன. அவை மைதானங்களில் பொறுத்தப்பட்டு பயிற்சி போட்டிகள் நடத்தப்பட்டு பிட்சி எப்படி உள்ளது என்று ஆய்வு நடத்தப்படும். போட்டிகள் விளையாடப்படும் பிட்சுகள் புத்தம் புதியது. இது தவிர, மழை பெய்தால் தண்ணீரை வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம்.” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர்" மற்ற நாடுகளில் நடத்தப்படும் விளையாட்டு போட்டிகளை போன்று அமெரிக்காவிலும் அனைத்து உள்கட்டமைப்புகளும் தற்காலிகமானதாக இருக்கும். சில கட்டமைப்புகளின் உபகரணங்கள் லாஸ் வேகாஸில் இருந்து கொண்டு வரப்படும். அவை அமைக்கப்பட்டு போட்டிக்குப் பிறகு அகற்றப்படும். அங்கு அமெரிக்காவில் 30 மில்லியன் கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளனர். கட்டமைப்புகளின் கட்டுமானம் பிப்ரவரியில் இருந்து தொடங்கும் மற்றும் மே மாதத்திற்குள் அவற்றின் பணிகள் நிறைவடையும்." என்று தெரிவித்தார்.