2016ல் நியூசிலாந்து; 2021ல் பாக்..- டி20 உலகக் கோப்பை முதல் போட்டியும் இந்தியாவின் மோசமான தோல்வியும் !
கடைசியாக நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரிலும் இந்திய அணி தன்னுடைய முதல் போட்டியில் மோசமான தோல்வியை தழுவியது.
டி20 உலகக் கோப்பையில் இன்று நடைபெற்ற சூப்பர் 12 போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி முதல் ஓவரிலேயே ரோகித் சர்மாவை இழந்தது. இதைத் தொடர்ந்து கே.எல் ராகுலும் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் விராட் கோலி மட்டும் அரைசதம் கடந்து 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகிய இருவரும் இந்திய பந்துவீச்சை சிதறடித்தனர். இருவரும் முதல் விக்கெட்டிற்கு 150 ரன்களுக்கு மேல் சேர்த்தனர். அத்துடன் இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். இறுதியில் பாகிஸ்தான் அணி 17.5 ஓவர்களில் 152 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இதன்மூலம் முதல் முறையாக இந்திய கிரிக்கெட் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் ஒரு டி20 போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. மேலும் பாகிஸ்தான் அணி முதல் முறையாக ஒரு டி20 போட்டியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இதன்மூலம் ஐசிசி டி20 உலகக் கோப்பையில் முதல் முறையாக பாகிஸ்தான் அணி இந்தியாவை தோற்கடித்துள்ளது. இதற்கு முன்பாக 5 முறை இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. அவை அனைத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று இருந்தது. இந்தச் சூழலில் இன்று வென்று பாகிஸ்தான் அணி தன்னுடைய முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
மேலும் டி20 உலகக் கோப்பை தொடக்க ஆட்டத்தில் இந்தியா அணியின் மோசமான தோல்வி முகம் தொடர்கிறது. ஏன்னெறால் இதற்கு முன்பாக 2016ஆம் ஆண்டு நடை பெற்ற டி20 உலகக் கோப்பை தொடரிலும் முதல் போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வியை அடைந்தது.
2016 டி20 உலகக் கோப்பை இந்தியாவின் முதல் போட்டி:
2016ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 10 சுற்றில் இந்தியா அணி தன்னுடைய முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாடியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி மல மல வென விக்கெட்டுகளை இழந்தது. 43 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்தது. இறுதியில் இந்திய அணி 79 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வி அடைந்தது. அதுவும் ஒரு மோசமான தோல்வியாக அமைந்தது. அதன்பின்னர் மீண்டு எழுந்த இந்திய அணி 2016ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் அரையிறுதிப் போட்டி வரை முன்னேறியது.
ஆகவே அதேபோன்று இந்த முறையும் இந்திய அணி இந்த மோசமான தோல்வியில் இருந்து மீண்டு எழுந்து அடுத்தடுத்து வெற்றி பெறுமா என்பதை பொருத்திருந்தான் பார்க்கவேண்டும்.
மேலும் படிக்க: டி20 உலகக் கோப்பையில் புதிய சாதனை படைத்த விராட் கோலி- அது எந்த சாதனை பட்டியல் ?