SA Vs NED Match Highlights: ’மீண்டும் ஒரு அதிர்ச்சி ஆட்டம்’ தட்டித்தூக்க நினைத்த தென்னாப்பிரிக்காவை தவிடி பொடியாக்கிய நெதர்லாந்து வெற்றி
SA Vs NED Match Highlights: 50 ரன்களில் 4 விக்கெட்டினை இழந்திருந்த நெதர்லாந்தை அந்த அணியை கேப்டன் எட்வர்ட்ஸின் பொறுப்பான ஆட்டத்தினால் சவாலான ஸ்கோரான 245 ரன்களை எட்ட வைத்தார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருகின்றது. அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் நவம்பர் மாதம் 19ஆம் தேதி வரை நடைபெறுகின்றது. மொத்தம் 10 அணிகள் களமிறங்கிய இந்த தொடரில் லீக் போட்டிகளின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள்தான் அரையிறுதிக்கு முன்னேறும்.
மழையால் குறைக்கப்பட்ட ஓவர்கள்
இந்நிலையில், இந்த தொடரின் 15வது லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியும் நெதர்லாந்து அணியும் தர்மசாலாவில் மோதிக் கொண்டன. இந்த போட்டி இமாச்சல் பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், இந்த போட்டி திட்டமிடப்பட்ட நேரத்தில் கனமழை காரணமாக தொடங்கப்படவில்லை. மழை நின்ற பின்னர் இந்த போட்டி 43 ஓவர்களாக குறைக்கப்பட்டு தொடங்கப்பட்டது. அதேபோல் பவர்ப்ளேவும் 9 ஓவர்களாக குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா பந்து வீச முடிவு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 8 விக்கெட்டினை இழந்து 245 ரன்கள் சேர்த்தது. 50 ரன்களில் 4 விக்கெட்டினை இழந்திருந்த நெதர்லாந்து அணியை கேப்டன் எட்வர்ட்ஸ் தனது பொறுப்பான ஆட்டத்தினால் 245 ரன்கள் என்ற சவாலான ஸ்கோரை எட்ட வைத்தார்.
43 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்தால் இந்த தொடரில் ஹாட்ரிக் வெற்றி பெறுவதுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறும் முனைப்பில் களமிறங்கிய தென்னாப்பிரிக்காவுக்கு தொடக்கம் முதல் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது அந்த அணியின் அபாயகரமான பேட்ஸ்மேனகளான டி காக், பவுமா, மார்க்ரம் மற்றும் டஷென் ஆகியோர் அணியின் ஸ்கோர் 44 ரன்களாக இருந்தபோதே தங்களது விக்கெட்டினை இழந்து வெளியேறினர். அதன் பின்னர் இணைந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனகளான மில்லர் மற்றும் க்ளாசென் கூட்டணி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் க்ளாசென் பவுண்டரி விளாச முயற்சி செய்து எல்லைக் கோட்டின் அருகே கேட்ச் ஆகி வெளியேறினார்.
தடுமாறிய தென்னாப்பிரிக்கா
89 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை தென்னாப்பிரிக்கா அணி இழந்ததால் அணியை வெற்றி பெறவைக்க வேண்டிய பொறுப்பு முழுவதும் மில்லர் கரங்களில் ஒப்படைக்கப்பட்டது. அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால் நிதானமாக ஆடிக்கொண்டு இருந்த மில்லர், ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடியாக பவுண்டரிகள் விளாசி வந்தார். இதனால் தென்னாப்பிரிக்காவின் ரன்ரேட் மளமளவென உயர்ந்தது. சிறப்பாக ஆடி வந்த இவர் போட்டியின் 31வது ஓவரின் கடைசி பந்தில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இதன் பின்னர் நெதர்லாந்தின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியானது. இதையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா வீரர்களால் போட்டியில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்த முடியவில்லை.
நெதர்லாந்து வெற்றி
இறுதியில் தென்னாப்பிரிக்கா அணி 42.5 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் நெதர்லாந்து அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி இந்த தொடரில் நெதர்லாந்து அணியின் முதல் வெற்றியாக பதிவாகியுள்ளது. இந்த வெற்றி மூலம் நெதர்லாந்து அணி புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியாவை பின்னுக்குத் தள்ளி 8வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. அதேபோல் தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் இந்த தோல்வி ஹாட்ரிக் வெற்றி வாய்ப்பை பறித்துள்ளது. இந்த தோல்வி பலமான தென்னாப்பிரிக்கா அணிக்கு அரையிறுதிக்கு முன்னேறுவதைத் தடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.