IND vs SL: கையில் கருப்பு பட்டை! இலங்கைக்கு எதிராக இந்திய வீரர்கள் ஏன் அப்படி செய்தனர்?
இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணி வீரர்கள் கொழும்புவில் நடைபெற்று வரும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கையில் கருப்பு பட்டை அணிந்து ஆடி வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது. இதில் இந்திய அணி இலங்கை அணிக்கும் இடையே முதல் ஒருநாள் போட்டி இன்று கொழும்புவில் நடைபெற்று வருகிறது.
கையில் கருப்பு பட்டை ஏன்?
கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் இந்திய அணி வீரர்கள் தங்களது ஜெர்சியில் கையில் கருப்பு நிற பட்டை அணிந்து ஆடி வருகின்றனர். இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் தலைமை பயிற்சியாளர் அன்ஷூமான் கெய்க்வாட் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்திய வீரர்கள் தங்களது ஜெர்சியின் கையில் கருப்பு பட்டையை அணிந்து ஆடினர்.
முன்னாள் இந்திய வீரரான அன்ஷூமான் கெய்க்வாட் கடந்த மாதம் 31ம் தேதி புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 71 ஆகும். 1952ம் ஆண்டு மும்பையில் பிறந்த அன்ஷூமான் தத்தாஜிராவ் கெய்க்வாட் இந்திய அணிக்காக 1975ம் ஆண்டு முதல் 1987ம் ஆண்டு வரை விளையாடினார்.
Team India is wearing black armbands today in memory of Anshuman Gaekwad who passed away on Wednesday.
— Tanuj Singh (@ImTanujSingh) August 2, 2024
- Beautiful gesture by Team India.🇮🇳 pic.twitter.com/omdBixinKX
யார் இந்த கெய்க்வாட்?
டெஸ்ட் போட்டிகளில் ஆடி 2 சதங்கள், 10 அரைசதங்களுடன் 1985 ரன்கள் எடுத்துள்ளார். டெஸ்டில் அதிகபட்சமாக 201 ரன்கள் எடுத்துள்ளார். 15 ஒருநாள் போட்டிகளில் ஆடி 1 அரைசதத்துடன் 269 ரன்கள் எடுத்துள்ளார். இதுதவிர 206 முதல்தர போட்டிகளில் ஆடி 34 சதங்கள் மற்றும் 47 அரைசதங்களுடன் 12 ஆயிரத்து 136 ரன்கள் எடுத்துள்ளார். இதுதவிர லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் ஆடி 2 சதங்கள், 11 அரைசதங்களுடன் 1601 ரன்கள் எடுத்துள்ளார். வலது கைபந்துவீச்சாளரான அன்ஷூமான் கெய்க்வாட் டெஸ்டில் 2 விக்கெட்டும், ஒருநாள் போட்டியில் 1 விக்கெட்டும், முதல்தர கிரிக்கெட்டில் 143 விக்கெட்டும், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 22 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார்.
அன்ஷூமான் கெய்க்வாட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தபோது அவருக்கு உதவுமாறு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் உதவி கோரியதும், பி.சி.சி.ஐ. அவரது சிகிச்சைக்காக ரூபாய் 1 கோடி நிதி உதவி அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது. கொழும்புவில் நடைபெற்று வரும் முதல் போட்டியில் இந்திய அணி 231 ரன்கள் இலக்கை நோக்கி ஆடி வருகிறது.