(Source: ECI/ABP News/ABP Majha)
Shubman Gill: மருத்துவமனையில் இருந்து சுப்மன் கில் டிஸ்சார்ஜ்.. சரிந்த பிளேட் செல்ஸ் - பாகிஸ்தான் போட்டியில் மாற்று வீரர்?
Shubman Gill: உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
Shubman Gill: டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில், உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
டெங்கு காய்ச்சலால் பாதிப்பு:
2023 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்றாலும், முழு வலுவான பிளேயிங் லெவன் உடன் களமிறங்காதது குறிப்பிடத்தக்கது. தொடக்க ஆட்டக்காரரான சுப்மன் கில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணியின் லீக் போட்டியிலும் அவர் பங்கேற்கமாட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்நிலையில் தான் கில்லின் ரத்தத்தில் பிளேட்லெட் எண்ணிக்கை குறைந்ததால், சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் இருந்து சுப்மன் கில் டிஸ்சார்ஜ்:
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தத்தில் பிளேட்லெட்களின் எண்ணிக்கை, ஒரு லட்சத்திற்கும் குறைவாக இருந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும். ஏற்கனவே, காய்ச்சல் காரணமாக இந்திய அணியினருடன் டெல்லிக்கு செல்லாத கில், சென்னையில் தங்கி தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்தார். பிசிசிஐ மருத்துவர் ரிஸ்வான் சிகிச்சை அளித்து வந்தார். இந்நிலையில், சுப்மன் கில்லின் பிளேட்லெட் எண்ணிக்கை 70 ஆயிரம் வரை குறைந்ததால், அவர் உடனடியாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு உடனடியாக கில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் போட்டியில் கில் விளையாடுவாரா?
நாளை ஆப்கானிஸ்தான் உடனான போட்டியை தொடர்ந்து, வரும் 14ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் உடன் மோத உள்ளது. இந்த 3 நாட்களுக்குள் கில் குணமடைந்து விட்டால், நேரடியாக அகமதாபாத்திற்கு சென்று இந்திய அணியுடன் இணைந்து பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கலாம். ஆனால், தற்போதைய சூழலில் கில் குணமடைந்து உடனடியாக முழு உடல்தகுதி பெற்று போட்டியில் களமிறங்குவாரா என்பது சந்தேகமாக தான் உள்ளது. காரணம் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் நபர் மிகுந்த சோர்வை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். அதிலிருந்து மீண்டு வர குறைந்தபட்சம் ஒருவாரமாவது தேவைப்படும்.
இந்திய அணியில் மாற்று வீரர்:
சராசரியாக ஒரு மனிதனினுக்கான பிளேட்லெட்களின் எண்ணிக்கை என்பது, ஒரு மைக்ரோலிட்டர் ரத்தத்திற்கு 150,000 முதல் 450,000 வரை இருக்க வேண்டும். ஆனால், சுப்மன் கில்லின் பிளேட்லெட்களின் எண்ணிக்கை 70 ஆயிரம் வரை குறைந்துள்ளது. இதனால், அவர் இயல்பு நிலைக்கு திரும்புவது என்பது அடுத்த 3 நாட்களில் நிகழ சாத்தியமில்லை என கருதப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு ருதுராஜ் கெய்க்வாட் அல்லது யஷஷ்வி ஜெய்ஷ்வால் ஆகிய வீரர்களில், யாரேனும் ஒருவரை பேக்-அப் வீரராக இந்திய அணியுடன் அழைத்துச் செல்ல பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.