Shreyas Iyer: அச்சச்சோ..! ஸ்ரேயாஸ் அய்யர் ஐசியுவில் அட்மிட் - ரத்தக்கசிவு? மருத்துவர்கள் சொல்வது என்ன?
Shreyas Iyer: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Shreyas Iyer: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், ஸ்ரேயாஸ் அய்யருக்கு உள்காயம் ஏற்பட்டுள்ளது.
ஐசியுவில் ஸ்ரேயாஸ் அய்யர்:
இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டிகளுக்கான துணை கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், சிட்னியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது, விலா எலும்பு பகுதியில் ஏற்பட்ட காயத்தால் உட்புறத்தில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதே இதற்கு காரணமாக தெரிகிறது.
காயம் ஏற்பட்டது எப்படி?
போடிட்யின் போது அலெக்ஸ் கேரி அடித்த பந்தை பிடிக்க, பின்னோக்கி ஓடியபடி சென்று லாவகமாக கேட்ச் பிடித்து அசத்தினார். ஆனால், அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தரையில் பலமாக மோத, விலா எலும்பு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. வலி தாங்க முடியாமல் மைதானத்திலேயே அவர் கடுமையாக சிரமப்பட்டார். தொடர்ந்து சக வீரர்களின் உதவியுடன் அங்கிருந்தெ வெளியேறிய ஸ்ரேயாஸ் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
மருத்துவர்கள் சொல்வது என்ன?
ஸ்ரேயாஸின் உடல்நிலை குறித்து அறிந்த நபர்கள் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, “கடந்த இரண்டு நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ஸ்ரேயாஸ் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார். பரிசோதனைகளின் முடிவில் அவருக்கு உட்புறத்தில் ரத்தக்கசிவு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ரத்தக்கசிவு காரணமாக தொற்று பரவுவதை தடுக்க, ஸ்ரேயாஸ் மீண்டு வருவதன் அடிப்படையில் அதிகபட்சமாக 7 நாட்கள் வரை அவர் மருத்துவர் கண்காணிப்பில் இருப்பார்” என கூறப்படுகிறது.
பிசிசிஐ சொல்வது என்ன?
மைதானத்தில் இருந்து ட்ரெஸ்ஸிங் அறைக்கு ஸ்ரேயாஸ் வந்ததுமே, அவரது உடல்நிலையில் இருந்த மாற்றத்தை உணர்ந்து, உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக பிசிசிஐ தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவர் விரைவில் குணமடைந்து வருவார் என்றும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதலில் அவர் சுமார் 3 வாரங்கள் வரை ஓய்வெடுக்க வேண்டி இருக்கும் என கூறப்பட்டது. ஆனால், காயத்தின் தீவிரம் காரணமாக எதிர்பார்த்ததை காட்டிலும் நீண்ட நாட்கள் அவர் ஓய்வெடுக்க வேண்டி உள்ளதாம்.
இந்தியா திரும்புவது எப்போது?
இந்தியாவிற்கு பயணிப்பதற்கான உடல்தகுதியை பெறும்வரை, குறைந்தபட்சம் ஒரு வாரத்திற்கு சிட்னியே மருத்துவமனையிலேயே ஸ்ரேயாஸ் சிகிச்சை பெறுவார் என கூறப்படுகிறது. 31 வயதான அவர் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் முறையே 11 மற்றும் 61 ரன்களை சேர்த்தார். வரும் 29ம் தேதி தொடங்க உள்ள டி20 போட்டிக்கான இந்திய அணியில், ஸ்ரேயாஸ் அய்யர் இடம்பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




















