Timed-out controversy: போர்ல ஜெயிக்கணும்னா..! மேத்யூஸ் விக்கெட் குறித்து வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் விளக்கம்
Timed-out controversy: உலகக் கோப்பையில் இலங்கை வீரர் மேத்யூஸை சர்ச்சைக்குரிய வகையில், ஆட்டமிழக்கச் செய்தது தொடர்பாக, வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் விளக்கமளித்துள்ளார்.
Timed-out controversy: மேத்யூஸ் கூடுதல் நேரம் எடுத்துக்கொள்வதாக சக வீரர் கூறிய ஆலோசனையின்படி தான், நடுவரிடம் விக்கெட் கோரி முறையிட்டதாக வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார்.
சர்ச்சையை ஏற்படுத்திய வங்கதேசம்:
உலகக் கோப்பையில் நேற்று நடைபெற்ற லிக் போட்டியில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் மோதின. இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில், 5வது விக்கெட்டிற்கு களமிறங்கிய மேத்யூஸ் களத்திற்கு வந்து பந்தை எதிர்கொள்ள கூடுதல் நேரம் எடுத்துகொண்டதால் அவர் ஆட்டமிழந்ததாக அறிவிக்கக்கோரி, வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் நடுவர்களிடம் முறையிட்டார். இதனை பரிசீலித்த நடுவர்கள், மேத்யூஸ் டைம்ட் - அவுட் முறையில் ஆட்டமிழந்ததாக அறிவித்தனர். இது கிரிக்கெட் உலகில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வங்கதேச அணிக்கு எதிராக பலரும் கண்டனங்களையும், விமர்சனங்களையும் பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், சர்ச்சைக்குரிய விக்கெட் தொடர்பாக மேத்யூஸ் மற்றும் ஷகிப் அல் ஹசன் ஆகியோர் , போட்டி முடிந்த பிறகு தங்களது கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.
மேத்யூஸ் ஆவேசம்:
இந்த விக்கெட் தொடர்பாக பேசிய மேத்யூஸ், “ இந்த நிகழ்வு முற்றிலும் அவமானகரமானது. அனைவரும் வெற்றிக்காக விளையாடுகிறோம், ஆனால் ஒரு அணியோ அல்லது வீரரோ ஒரு விக்கெட்டைப் பெறுவதற்கு இந்த அளவிற்கு மோசமான நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. நான் எந்த தவறும் செய்யவில்லை. சரியான நேரத்தில் கிரீஸை அடைந்தேன். ஆனால் எனது ஹெல்மெட்டில் பிரச்னை இருந்தது. நான் நேரத்தை வீணாக்கவில்லை. அதன் மூலம் எந்த நன்மையையும் பெற நினைக்கவில்லை. இதனை புரிந்துகொள்ள பொது அறிவு மேலோங்கியிருக்க வேண்டும்
இரண்டு நிமிட கால அவகாசத்தில் இன்னும் ஐந்து வினாடிகள் இருக்கும் நிலையில் நான் பேட்டிங் செய்யத் தயாராக இருந்தேன் என்பதற்கான வீடியோ ஆதாரம் எங்களிடம் உள்ளது. முடிவை எடுப்பதற்கு முன் நடுவர்கள் நேரத்தை சரிபார்த்திருக்கலாம். நாம் அனைவரும் விளையாட்டின் தூதர்களாக உள்ளோம். இன்று வரை ஷாகிப் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருந்தது. முறையீட்டை திரும்பப் பெற அவருக்கு வாய்ப்பு இருந்தது. ஆனால் அவ்வாறு அவர் செய்யவில்லை. வங்கதேசம் செய்ததை வேறு எந்த அணியும் செய்திருக்கும் என்று நான் நினைக்கவில்லை” என மேத்யூஸ் தெரிவித்தார்.
ஷகிப் அல் ஹசன் விளக்கம்:
சர்ச்சை தொடர்பாக பேசிய வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன், “அந்த விக்கெட்டிற்காக முறையிட்டது குறித்து எனக்கு எந்த வருத்தமும் இல்லை. மேத்யூஸிற்கு நடந்தது துரதிர்ஷ்டவசமானது. ஆனால் விதிகளை பின்பற்றி தான் நாங்கள் நடந்துகொண்டோம். ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்பிற்கு உட்பட்டதாக கருத முடியுமா என்ற கேள்விக்கு, அப்படியானால் ஐசிசி விதிகளை தான் மாற்ற வேண்டும். கிரிக்கெட் போட்டி என்பது ஒரு விளையாட்டை விட மேலானது. இது ஒரு போர் மற்றும் அதில் எல்லாம் நியாயமானது. மேத்யூஸ் ஆட வரும்போது எங்கள் அணியின் வீரர் ஒருவர் இப்போது முறையீடு செய்தால் அவர் அவுட் ஆவார் என கூறினார். அதனடிப்படையில் நான் நடுவரிடம் முறையிட்டேன். இது சரியா, தவறா என எனக்கு தெரியவில்லை. ஆனால், அணியின் கேப்டனாக வெற்றிக்கு என்ன செய்ய வேண்டுமோ அந்த முடிவை எடுத்தேன், எடுப்பேன்” என ஷகிப் அல் ஹசன் கூறினார்.
என்ன பிரச்னை:
ஒரு விக்கெட் விழுந்த பிறகு புதியதாக களமிறங்கும் அல்லது ஏற்கனவே களத்தில் உள்ள வீரர், அடுத்த 2 நிமிடத்திற்குள் களத்திற்குள் பந்தை எதிர்கொள்ள வேண்டும். தவறினால் அவர் ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்படுவது உலகக் கோப்பையில் பின்பற்றப்படும் விதி. அந்த வகையில் சமரவிக்ரமா ஆட்டமிழந்த பிறகு, மேத்யூஸ் களமிறங்கினார். அவர் அணிந்து வந்த ஹெல்மெட் சரியில்லாததால், மேத்யூஸ் தனது ஹெல்மெட்டை மாற்ற முயன்றார். ஆனால், கிரீஸிற்கு வர மேத்யூஸ் கூடுதல் நேரத்தை எடுத்துக் கொண்டதாக வங்கதேச வீரர்கள் முறையிட, அவர் ஆட்டமிழந்ததாக நடுவர்கள் அறிவித்தனர்.