Watch video: முதலில் உடைந்தது பேட், அடுத்தது பறந்தது ஸ்டம்ப்ஸ்..! பாகிஸ்தான் வீரர்களையே பதம் பார்த்த ஷாகின் அஃப்ரீடி..!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் ஷாகின் அஃப்ரிடி பந்துவீச்சில் எதிரணியை திணறடித்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் ஷாஹின் அஃப்ரிடி பந்துவீச்சில் எதிரணியை திணறடித்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஷாஹின் அஃப்ரிடி:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஷாகின் அஃப்ரிடி, மீண்டும் தனது ஃபார்முக்கு திரும்பி வருகிறார். இதை உறுதி செய்யும் விதமாக பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில், அவரது பந்துவீச்சு எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக உள்ளது. குறிப்பாக பெஷாவர் ஜால்மி அணிக்கு எதிராக அவர் வீசிய இரண்டாவது இன்னிங்ஸின் முதல் ஓவர் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது,
மிரட்டலான பந்துவீச்சு:
242 ரன்கள் எனும் கடினமான இலக்கை நோக்கி பெஷாவர் அணி களமிறங்கியது. அப்போது, லாகூர் அணி தரப்பில் அஃப்ரிடி முதல் ஓவரை வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட ஹாரிஸின் பேட் இரண்டு துண்டாக உடைந்தது. இந்த பந்து சுமார் 138 கிலோமீட்டர் வேகத்தில் வீசப்பட்டது. இதையடுத்து புதிய பேட்டை மாற்றிக்கொண்டு, இரண்டாவது பந்தை எதிர்கொண்டார். அதில், அஃப்ரிடி வீசிய பந்து பேட்டுக்கும், பேட்ஸ்மேனின் காலுக்கும் இடையில் அதிவேகமாக சென்று ஸ்டம்புகளை சிதறடித்தது. இந்த பந்தை அஃப்ரிடி மணிக்கு 140 கிலோமீட்டர் எனும் வேகத்தில் வீசினார். இந்த இரண்டு பந்துகள் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
First ball: Bat broken ⚡
— PakistanSuperLeague (@thePSLt20) February 26, 2023
Second ball: Stumps rattled 🎯
PACE IS PACE, YAAR 🔥🔥#HBLPSL8 | #SabSitarayHumaray | #LQvPZ pic.twitter.com/VetxGXVZqY
பாபர் ஆசமை வீழ்த்தினார்:
அதைதொடர்ந்து, பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசமும், அஃப்ரிடியின் பந்துவீச்சில் போல்டாகி விக்கெட்டை பறிகொடுத்தார். போட்டிக்கு முன்னதாக செய்தியாளரை சந்தித்தபோது, அனைவரையும் சிரித்த முகத்துடன் எதிர்கொள்ளும் நீங்கள், அஃப்ரிடியை எவ்வாறு எதிர்கொள்ள இருக்கிறீர்கள் என பாபர் ஆசமிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, அஃப்ரிடியை எதிர்கொள்ள இருப்பதால் நான் சிரிக்க வேண்டுமா? இல்லை அழ வேண்டுமா? என பதிலளித்தார். இதனால், அந்த போட்டியில் பாபர் ஆசம் மற்றும் அஃப்ரிடியின் மோதல் எப்படி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதில், அஃப்ரிடி வெற்றி பெற்றார்.
லாகூர் அணி வெற்றி:
இந்த போட்டியில் 4 ஓவர்களை வீசிய அஃப்ரிடி 40 ரன்களை விட்டுக் கொடுத்து, மொகமது ஹாரிஸ், பாபர் ஆசம், ஜேம்ஸ் நீஷம், வஹாப் ரியாஸ் மற்றும் சாட் மசூத் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் அந்த அணி, 40 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.