Kohli Rohit T20: ”கோலி & ரோஹித் ஒரே நேரத்தில் பிளேயிங் லெவனில் வேண்டாம்” : பிசிசிஐ தேர்வு குழுவால் ரசிகர்கள் ஷாக்
Kohli Rohit T20 World Cup: இந்திய டி-20 கிரிக்கெட் அணியின் பிளேயிங் லெவனில் ஒரே நேரத்தில் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகிய இருவரும் இடம்பெறுவதை, பிசிசிஐ தேர்வுக் குழு விரும்பவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
kohli Rohit T20 World Cup: ஐசிசி கிரிக்கெட் சம்மேளனத்தின் டி-20 உலகக் கோப்பை, வரும் ஜுன் 1ம் தேதி தொடங்க உள்ளது.
டி-20 அணியில் கோலி, ரோகித்:
தென்னாப்ரிக்காவில் நடந்து முடிந்த இந்தியாவின் சுற்றுப்பயணம் வெற்றிகரமாக அமைந்துள்ளது. அதேநேரம், கோலி மற்றும் ரோகித் சர்மா உலகக் கோப்பைக்கான டி-20 அணியில் இடம்பெறுவார்களா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் எழுந்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு இங்கிலாந்திற்கு எதிராக நடைபெற்ற டி-20 உலகக்கோப்பையின் அரையிறுதி போட்டிக்குப் பிறகு, எந்தவொரு சர்வதேச டி-20 போட்டியிலும் அவர்கள் இந்திய அணிக்காக களமிறங்கவில்லை. இதனால், வரும் ஜுன் 1ம் தேதி தொடங்க உள்ள டி-20 உலகக் கோப்பையில் கோலி மற்றும் ரோகித் மீண்டும் களமிறங்குவார்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவுகிறது. இதனிடையே, உலகக் கோப்பை போட்டியில் விளையாட தாங்கள் தயார் என, கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகிய இருவருமே பிசிசிஐ நிர்வாகத்திற்கு தெரிவித்துள்ளதாக பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அவர்கள் இருவரையும் தேர்வு செய்ய அணி நிர்வாகம் தயாராக உள்ளதா என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது.
ரோகித் இன்? கோலி அவுட்டா?
இந்திய அணியில் ரோகித்தின் இடம் என்பது எப்போதும் கேள்விக்குறியானதாக இருந்தது இல்லை என்று, தேர்வுக்குழு சார்பிலான தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையில் அவர் காட்டிய அணுகுமுறைக்குப் பிறகு, மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ள உலகக் கோப்பையில் அணியை வழிநடத்துவதற்கான முதல் தேர்வாக ரோகித் இருப்பதாக கூறப்படுகிறது. இடைக்காலங்களில் இந்தியாவை டி-20 போட்டிகளில் வழிநடத்திய ஹர்திக் பாண்டியாவின் காயமும், ரோகித் சர்மா மீண்டும் கேப்டனாக செயல்படுவதற்கான வாய்ப்பை மேலும் பிரகாசப்படுத்தியுள்ளதாக தெரிகிறது. ஆனால், இந்திய அணியில் கோலியின் இடம் தான் உறுதியாகவில்லை என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிசிசிஐ தேர்வுக் குழுவின் திட்டம்:
ஒயிட் பால் கிரிக்கெட்டில் கோலி தொடர்ந்து ரன் வேட்டை நடத்தினாலும், அவரது ஸ்ட்ரைக் ரேட் ஒரு சிக்கலாக மாறும் என கூறப்படுகிறது. அண்மையில் வெளியான பிடிஐ அறிக்கையின்படி, ”அஜித் அகர்கர் தலைமையிலான பிசிசிஐ தேர்வுக் குழு, ரோகித்தையும் கோலியையும் அணியில் சேர்ப்பதில் ஆர்வம் காட்டவில்லை” என கூறப்படுகிறது. இதன் காரணமாக தான், இன்னும் நான்கு நாட்களே இருந்தாலும் ஆப்கானிஸ்தான் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படாமல் உள்ளது. அணியின் பிளேயிங் லெவனில் சரியான பேலன்ஸை ஏற்படுத்த, கோலி மற்றும் ரோகித் ஆகிய இருவருமே அணியில் இருப்பது நல்ல முடிவாக இருக்காது எனவும் தேர்வுக் குழு கருதுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அணியில் உள்ள பிரச்னைகள் என்ன?
ரோகித், கோலி, சூர்யகுமார் யாதவ், சுப்மன் கில் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் டாப் ஆர்டரில் இடம்பெற்றால், இடது கை பேட்ஸ்மேன் என்பது அணியில் இல்லாமல் போகும். அதுவே கோலி அணியில் இல்லாவிட்டால், டோகித் சர்மா உடன் யஷஷ்வி ஜெய்ஷ்வால் தொடக்க வீரராக களமிறங்க, சுப்மன் கில் மூன்றாவது வீரராக களமிறங்கும் வாய்ப்பு உருவாகலாம் என பிசிசிஐ தேர்வுக்குழு விரும்புகிறது. அதோடு, கோலி மற்றும் ரோகித் ஆகிய இருவருமே பிளேயிங் லெவனில் இருந்தால், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் இஷான் கிஷனுக்கான வாய்ப்புகள் பறிபோகலாம். அதோடு, இளம் பினிஷர்களாக கருதப்படும் ஜிதேஷ் சர்மா மற்றும் ரிங்கு சிங் ஆகியோரும் வாய்ப்புகளை இழக்கலாம். இதனால், ஹர்திக் பாண்ட்யா உட்பட 5 பந்துவீச்சாளர்களுடன் களமிறங்க வேண்டிய சூழல் உருவாகலாம். அதோடு, ஹர்திக் பாண்ட்யா கட்டாயம் அனைத்து போட்டிகளிலும் தலா 4 ஓவர்களை வீச வேண்டியது இருக்கும்.
தேர்வுக்குழுவிற்கான அழுத்தம்:
இதனிடையே, விராட் கோலியின் புகைப்படத்துடன் டி-20 உலகக் கோப்பைக்கான விளம்பரங்களை, சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் தொடங்கியுள்ளது. மறுமுனையில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி தொடர்பாக, ரோகித் Vs சாஹின் ஷா அஃப்ரிடி அடங்கிய புகைப்படத்தை மும்பை இந்தியன்ஸ் அணி வெளியிட்டுள்ளது. இதனால், வெளிப்புறத்தில் இருந்தும் கோலி மற்றும் ரோகித்தை தேர்வு செய்வதற்கான அழுத்தம் பிசிசிஐ-க்கு தொடங்கியுள்ளது. இவை அனைத்தையும் கருதில் கொண்டு, கோலி மற்றும் ரோகித் சர்மாவை டி-20 அணியில் சேர்க்கும் இறுதி முடிவை பிசிசிஐ தலைமை எடுக்கும் என கூறப்படுகிறது.