Vijay hazare trophy: வேட்டையாடவே வெறியோரு சுத்துறான்... விஜய் ஹசாரே ட்ராபி; சதம் விளாசிய சஞ்சு சாம்சன்!
விஜய் ஹசாரே டிராபியில் ரயில்வே அணிக்கு எதிராக இன்று (டிசம்பர் 5) போட்டியில் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி சதம் அடித்துள்ளார்.
தென்னாப்பிரிக்கா செல்லும் இந்திய அணி அங்கு டி20, ஒருநாள், டெஸ்ட் தொடர்களில் பங்கேற்று விளையாடவுள்ளது. இதில், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர், டிசம்பர் 10, 12, 14 ஆகிய தேதிகளில் நடைபெறும். அடுத்து, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், டிசம்பர் 17, 19, 21 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
இறுதியாக, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 26 முதல் 30ஆம் தேதி வரையும், ஜனவரி 3 முதல் 7ஆம் தேதி வரையும் நடைபெறும். இதில் ஒரு நாள் போட்டியில் விளையாடுவதற்கு மட்டும் சஞ்சு சாம்சன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
அதிரடி வீரர் சஞ்சு சாம்சன்:
சஞ்சு சாம்சன் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்தவர். இவர், கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை 19 ஆம் தேதி நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டியின் மூலம் இந்திய அணியில் அறிமுகமானார். அந்த போட்டியில் 8வது வீரராக களம் இறங்கிய இவர் 24 பந்துகளில் 19 ரன்கள் எடுத்தார்.
அதேபோல், சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் தேதி நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமானர். அதில் மூன்றாவது வீரராக களம் கண்ட சஞ்சு சாம்சன் 46 பந்துகளில் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸர் என மொத்தம் 46 ரன்களை எடுத்தார். அதேநேரம், இவர் இன்னும் ஒரு டெஸ்ட் போட்டிகளில் கூட விளையாடவில்லை.
கடைசியாக இந்த ஆண்டு நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியிலும், அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டியிலும் இடம் பெற்றார். அதன் பிறகு ஆசிய கோப்பை 2023, உலகக் கோப்பை 2023, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடர் என்று எதிலும் அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.
தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் சஞ்சு சாம்சன் ஐபிஎல் தொடர்களில் மட்டுமே இடம் பெற்று விளையாடி வருகிறார். இப்படிபட்ட சூழ்நிலையில், அவரை அனைத்து வடிவிலான போட்டிகளிலும் விளையாட அனுமதிக்க வேண்டும் என்று ரசிகர்கள் பிசிசிஐ யிடம் கோரிக்கை வைத்து வந்தனர். இதனால், அவர் தென்னாப்பிரிக்கா செல்லும் இந்திய அணியில் ஒரு நாள் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றிருக்கிறார்.
இந்நிலையில், தான் விஜய் ஹசாரே டிராபியில் ரயில்வே அணிக்கு எதிராக இன்று (டிசம்பர் 5) போட்டியில் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி சதம் அடித்துள்ளார்.
சதம் விளாசிய சஞ்சு:
அதன்படி, இன்று நடைபெற்ற விஜய் ஹசாரே போட்டியில் கேரளாஅணி ரெயில்வே அணியை எதிர்கொண்டு விளையாடியது. இந்த போட்டியில், முதலில் களம் இறங்கிய ரயில்வே அணியினர் 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 255 ரன்கள் எடுத்தது.
பின்னர், இலக்கை நோக்கி களமிறங்கிய கேரளா அணியில் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடினார். அந்த வகையில், ஆறாவது வீரராக களம் இறங்கிய சஞ்சு சாம்சன் 139 பந்துகள் களத்தில் நின்று 8 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் என மொத்தம் 128 ரன்களை விளாசினார். தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இடம்பெற்றுள்ள நிலையில் சஞ்சு சாம்சனின் இந்த சதம் முக்கியமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், இந்த போட்டியில் ரயில்வே அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் கேரளா அணியை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.