ICC T20I Rankings: ஐசிசி வெளியிட்ட டி20 தரவரிசை பட்டியல்.. டாப் 10 க்குள் நுழைந்த ருதுராஜ், பிஷ்னோய்!
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடருக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 தரவரிசை பட்டியலை வெளியிட்டது.
இந்தியா மற்றும ஆஸ்திரேலியா இடையேயான டி20 தொடர் சமீபத்தில் முடிவடைந்தது. இந்த தொடருக்கு பிறகு இந்திய அணி, தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு மூன்று வடிவிலான தொடர்களிலும் விளையாட இருக்கிறது.
இந்தநிலையில், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடருக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இதில், நம்பமுடியாத வகையில் இந்திய அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் லெக் ஸ்பின்னர் ரவி பிஷ்னோய் டாப் 10 பட்டியலுக்குள் இடம் பிடித்துள்ளனர். தற்போது பேட்ஸ்மேன்கள் பட்டியலில் 673 புள்ளிகளுடன் ருதுராஜ் கெய்க்வாட் ஏழாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த ஆஸ்திரேலியா தொடருக்கு முன்னதாக, ருதுராஜ் கெய்க்வாட் தரவரிசை பட்டியலில் 79வது இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Ruturaj Gaikwad moves to number 7 in ICC T20I batters ranking.
— Johns. (@CricCrazyJohns) December 5, 2023
- Rutu has arrived. 💪 pic.twitter.com/p8l4QpPARd
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரில் கெய்க்வாட் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார். இந்த தொடரில் அவர் ஆட்டமிழக்காமல் ஒரு சதம் உட்பட மொத்தம் 223 ரன்கள் எடுத்தார். டி20 டாப் 10 தரவரிசையில் தற்போது இரண்டு இந்திய பேட்ஸ்மேன்கள் மட்டுமே உள்ளனர். அதில், சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து 881 புள்ளிகளுடன் நம்பர் 1 இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் சூர்யகுமார் யாதவுக்கு அடுத்தபடியாக பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் 787 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். ஐடன் மார்க்ரம் (756), பாபர் அசாம் (734), ரிலே ரோசோவ் (702), டேவிட் மலான் (691) ஆகியோர் முறையே மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்தில் உள்ளனர்.
பந்துவீச்சாளர்கள் தரவரிசை:
Ravi Bishnoi moves to No.5 position in the ICC T20I Bowling rankings.
— CricketMAN2 (@ImTanujSingh) December 5, 2023
He is the highest Ranked Indian bowler - Bishnoi is the star..!!! ⭐ pic.twitter.com/VAyjKi3Rfl
டி20 பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் ரவி பிஷ்னோய் ஐந்தாவது இடத்தை எட்டியுள்ளார். முன்னதாக, இந்திய பந்துவீச்சாளர்கள் ஒருவர் கூட டாப் 10 பட்டியலில் இடம் பிடிக்கவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அபாரமாக பந்துவீசி தொடர் ஆட்டநாயகன் விருதை வென்றார். முதல் போட்டியை தவிர அனைத்து போட்டிகளிலும் எகானமி அளவில் பந்துவீசி மொத்தம் 9 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இந்த பட்டியலில் 692 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருப்பவர் ஆப்கானிஸ்தான் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான். இவருக்கு அடுத்தபடியாக இலங்கையின் வனிந்து ஹசரங்க 679 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். தொடர்ந்து, இங்கிலாந்து வீரர் அடில் ரஷித் (679), இலங்கை வீரர் மகேஷ் தீக்ஷனா (677) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.