RCB Twitter Hack: முடக்கப்பட்டது ஆர்.சி.பி. ட்விட்டர் கணக்கு - கைவரிசை காட்டிய ஹேக்கர்கள்..!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் டிவிட்டர் கணக்கை மர்மநபர்கள் ஹேக் செய்துள்ளனர். இதனால், ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஐ.பி.எல். தொடரில் மிகவும் பிரபலமான அணிகளில் ஒன்று பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி. விராட் கோலி போன்ற நட்சத்திர வீரர்களை கொண்ட அந்த அணி, சக அணிகளை போன்றே சமூக வலைதளங்களில் அணி தொடர்பான பல்வேறு விவரங்களும் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது. அந்த அணி தொடர்பான புதுப்புது அப்டேட்களை அறிந்து கொள்ள, ரசிகர்கள் பலரும் பெங்களூரு அணியின் சமூக வலைதள கணக்குகளை பின் தொடர்ந்து வருகின்றனர்.
ஹேக் செய்யப்பட்ட ஆர்சிபி டிவிட்டர் கணக்கு:
இந்நிலையில் தான், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கிரிக்கெட் அணியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கமான ஆர்சிபிட்வீட்ஸ், ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளது. அந்த கணக்கை 64 லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகின்றனர்.
ஹேக் செய்த மர்ம நபர்கள் பெங்களூரு அணியின் டிவிட்டர் கணக்கின் முகப்புப் படத்தை மாற்றியுள்ளனர். அதன்படி, ஒரு சிரிக்கும் எலும்புக்கூடு முகம் போன்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, ஆர்சிபிட்வீட்ஸ் என்ற கணக்கின் பெயரையும் 'போர்ட் ஏர் யாட் க்ளப்' என்று மாற்றியுள்ளனர். தொடர்ந்து, NFT சம்பந்தமான ட்வீட்களை அதிகளவில் பதிவிட்டு வருகின்றனர். தொடர்ந்து, இந்தியா-நியூசிலாந்து இடையேயான ஒருநாள் போட்டி தொடர்பாகவும், பதிவிடப்பட்டு வருகிறது.
2வது முறையாக பாதிப்பு:
இணையவாசிகள் ஆர்சிபி ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டிருப்பதை அறிந்து உடனடியாக அது குறித்த பதிவுகளை ட்விட்டரில் வைரலாக்கினர். ஆர்சிபி ட்விட்டர் பக்கத்தை மர்ம நபர்களிடமிருந்து மீட்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அந்த கணக்கு ஹேக் செய்யப்படுவதற்கு முன்னதாக, கடைசியாக அதில் ஒரு புரோமோஷனல் வீடியோவை ஆர்சிபி பதிவு செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதமும், ஆர்சிபி அணியின் டிவிட்டர் கணக்கு மர்ம நபர்களால் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Official statement from RCB about their twitter handle. pic.twitter.com/79Y3giWLub
— Johns. (@CricCrazyJohns) January 21, 2023
ஆர்சிபி நிர்வாகம் கோரிக்கை:
இந்நிலையில் ஆர்சிபி நிர்வாகம், டிவிட்டர் நிறுவனத்திற்கு கோரிக்கை ஒன்று வைத்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையில், ”எங்களது கணக்கு 21ம் தேதி காலை 4மணி அளவில் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் இருந்து அந்த கணக்கை எங்களால் அணுக முடியவில்லை. டிவிட்டர் நிறுவனத்தால் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட பிறகும், எங்களது கட்டுப்பாட்டை மீறி இந்த எதிர்பாராத சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தங்களது கணக்கில் தற்போது வெளியிடப்பட்டு வரும் பதிவுகளை நாங்கள் எப்போதும் ஆதரிப்பதில்லை. இந்த நிகழ்வுக்காக நாங்கள் வருந்துகிறோம். டிவிட்டர் நிர்வாகத்துடன் சேர்ந்து நாங்கள், கணக்கை மீட்டெடுக்க பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். விரைவில் கணக்கு மீட்டு எடுக்கப்படும் என நம்புகிறோம். ஹலோ டிவிட்டர் கூடிய விரைவில் எங்கள் கணக்கு தொடர்பான பிரச்னையை நீங்கள் தீர்ப்பீர்கள் என நாங்கள் நம்புகிறோம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்.சி.பி. அணி நிர்வாகம் அணி தொடர்பான பல்வேறு தகவல்களை ட்விட் செய்யும் வகையில் அட்டவணைப்படுத்தி வைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.