Rohit Sharma: இன்னும் 3 சிக்ஸர்கள்.. ஒரு கேப்டனாக தோனியின் சாதனையை முறியடிப்பாரா ஹிட்மேன் ரோஹித் சர்மா?
சர்வதேச கிரிக்கெட்டில் இன்னும் 3 சிக்ஸர்கள் அடித்தால் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய கேப்டன் என்ற சாதனையை படைக்க உள்ளார் ரோகித் சர்மா.

ஹிட்மேன் ரோகித் சர்மா:
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கடந்த 2007 ஆம் ஆண்டு அயர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். இதுவரை 262 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 10,709 ரன்களை குவித்துள்ளார். இதில், 3 இரட்டை சதம், 31 சதம், 51 அரைசதங்கள் அடங்கும். அதேபோல் தனிநபர் அதிகபட்ச ரன்னாக 264 ரன்கள் எடுத்துள்ளார்.
மேலும், டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரை கடந்த 2013 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அறிமுகமாகி இதுவரை 54 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில், 3738 ரன்கள் எடுத்துள்ள ரோகித் சர்மா 1 இரட்டை சதம், 10 சதங்கள் மற்றும் 16 அரைசதங்கள் எடுத்துள்ளார். அதேபோல், டி20 போட்டிகளை பொறுத்தவரை151 போட்டிகள் விளையாடி 3974 ரன்கள் குவித்துள்ளார். இதில் 5 சதங்கள் மற்றும் 21 அரைசதங்கள் அடங்கும்.
இச்சூழலில்தான், இந்தியா வந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் மூலமாக இந்திய அணியின் கேப்டனாக 14 மாதங்களுக்கு பிறகு இடம் பெற்று விளையாடினார். இதில் முதல் டி20 போட்டியில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். 2-வது டி20 போட்டியில் கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்து அதிக முறை (12) கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்து மோசமான சாதனை படைத்தார்.
தோனியின் சாதனையை முறியடிப்பாரா?
இந்த நிலையில், தான் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு கேப்டனாக 116 இன்னிங்ஸ் விளையாடிய ரோகித் சர்மா 209 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். இன்னும், 3 சிக்ஸர்கள் அடித்தால், 212 சிக்ஸர்கள் அடித்து எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்து அதிக சிக்ஸர்கள் முதல் இந்திய கேப்டன் என்ற சாதனையை படைப்பார்.
முன்னதாக சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு கேப்டனாக 233 சிக்ஸர்கள் அடித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் இயான் மோர்கன் முதலிடத்தில் இருக்கிறார். இரண்டாவது இடத்தில் 212 சிக்ஸர்களுடன் தோனியும், மூன்றாவது இடத்தில் 209 சிக்ஸர்களுடன் ரோகித் சர்மாவும், நான்கவது இடத்தில் 171 சிக்ஸர்களுடன் ரிக்கி பாண்டிங்கும், ஐந்தாவது இடத்தில் 170 சிக்ஸர்களுடன் மெக்கல்லம் இடம்பெற்றுள்ளனர். அதேபோல், இந்திய அணி வீரர் விராட் கோலி 138 சிக்ஸர்கள் உடன் ஆறாவது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஆரோன் பிஞ்ச் 136 சிக்ஸர்கள் உடன் ஏழாவது இடத்திலும், டிவிலியர்ஸ் 135 சிக்ஸர்கள் உடன் எட்டாவது இடத்திலும் உள்ளனர். இச்சூழலில் தான் தோனியின் சாதனையை ரோகித் சர்மா முறியடிப்பார் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
மேலும் படிக்க: Sania Mirza: சானியா மிர்சாவை பிரிந்த சோயப் மாலிக்... மகளின் விவாகரத்து குறித்து பேசிய தந்தை
மேலும் படிக்க: IPL 2024: ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சரை கைப்பற்றிய டாடா நிறுவனம்...எத்தனை கோடிக்கு தெரியுமா?



















