IND vs AUS: அவருக்கு வாய்ப்பு இல்லேன்னு யாரு சொன்னா..? அஸ்வின் குறித்து பேசிய ரோஹித் சர்மா..! இந்திய அணியில் இடம்!
உலகக் கோப்பை 2023 போட்டியில் ஆஃப் ஸ்பின்னர் ரவிசந்திரன் அஸ்வினுக்கு கதவுகள் திறக்கப்படலாம் என்று ரோஹித் சர்மா குறிப்பிட்டுள்ளார்.
உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் போட்டி செப்டம்பர் 22ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதே சமயம் ஆஸ்திரேலிய தொடருக்கு முன் அக்சர் படேலின் உடற்தகுதி குறித்து பெரிய செய்திகள் வெளியாகி வருகின்றன. உண்மையில், ஆஸ்திரேலிய தொடரில் அக்சர் படேலின் உடற்தகுதி குறித்து இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
அக்சர் படேலின் உடற்தகுதி குறித்து ரோஹித் சர்மா கூறியது என்ன?
இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில், அக்சர் படேல் முழு உடல் தகுதி பெற 7-10 நாட்கள் ஆகலாம், இதை உறுதியாக நான் சொல்லவில்லை. சில வீரர்கள் காயத்திற்குப் பிறகு வேகமாக குணமடைந்து வருகின்றனர். அக்சர் படேலுக்கும் அதுவே நடக்கும் என்று நம்புகிறேன். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் 2 ஆட்டங்களில் அக்சர் படேல் விளையாடுவாரா இல்லையா என்பதை தற்போதைக்கு என்னால் உறுதியாக கூற முடியாது. அதே நேரத்தில், ஆஃப் ஸ்பின்னர் ரவிசந்திரன் அஸ்வினுக்கு கதவுகள் திறக்கப்படலாம்” என்று ரோஹித் சர்மா குறிப்பிட்டுள்ளார்.
ரவி அஸ்வின் அல்லது வாஷிங்டன் சுந்தரா?
ஆஸ்திரேலிய தொடர் மற்றும் வரவிருக்கும் உலகக் கோப்பைக்கு ஆஃப் ஸ்பின்னரை அணியில் வைத்திருப்பது குறித்து அணி நிர்வாகம் பரிசீலித்து வருவதாக ரோஹித் சர்மா கூறினார். இதுகுறித்து பேசிய அவர், “ரவி அஸ்வினா அல்லது வாஷிங்டன் சுந்தரா? எந்த ஆஃப் ஸ்பின்னருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது தற்போது தெரியவில்லை. இருப்பினும், உலகக் கோப்பை போன்ற பெரிய போட்டிக்கு ரவி அஸ்வினின் அனுபவம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உலகக் கோப்பை போட்டிகள் நடக்கும்போது ஆடுகளம் மெதுவாக மாறும். இது நடந்தால் ரவி அஸ்வின் மிக முக்கியமான தேர்வாக இருப்பார்.” என்று தெரிவித்தார்.
அஸ்வின் சொன்னது என்ன..?
"கடந்த 14-15 வருடங்களாக நான் இந்திய அணிக்காக விளையாடி வருகிறேன். எனது சிறப்பான தருணங்களை நான் அனுபவித்து விளையாடினேன். இந்திய அணி தோற்ற போட்டிகளிலும் எனக்கு நியாயமான பங்கு உண்டு. ஆனால் இந்திய கிரிக்கெட்டை என் இதயத்திற்கு நெருக்கமாக பச்சை குத்தியுள்ளேன். அவர்களுக்கு எனது சேவை தேவைப்பட்டால் கூட. நாளை, நான் தயாராக இருப்பேன், எனது 100 சதவீதத்தை தருவேன்," என்று அஸ்வின் சமீபத்தில் ஒரு யூடியூப் வீடியோவில் உலகக் கோப்பை அழைப்பு குறித்து பேசினார்.
ரவிசந்திரன் அஸ்வின் கடைசியாக இந்திய அணிக்காக 18 மாதங்களுக்கு முன்பு விளையாடினார். கடைசியாக அஸ்வின், 2022 ம் ஆண்டு ஜனவரி மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக களமிறங்கினார். இந்திய அணி கடந்த 2017 சாம்பியன்ஸ் டிராபி தோல்விக்குப் பிறகு விளையாடவில்லை. ரவிசந்திரன் அஸ்வின் கடந்த ஆறு ஆண்டுகளில் இரண்டு ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.
ரவிசந்திரன் அஸ்வின் இந்திய அணிக்காக மொத்தம் 113 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 151 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடந்த 2011 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் அஸ்வின் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, 12 ஆண்டுகளுக்கு முன்பு கோப்பையை வென்ற அணியில் விராட் கோலி மட்டுமே 2023 உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றுள்ளார். ரவிசந்திரன் அஸ்வின் 2015 உலகக் கோப்பையில் விளையாடினார்.
தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டியில் அஸ்வின் இடம்பெற்று, 18 மாதங்களுக்கு பிறகு இந்திய ஒருநாள் அணிக்கு திரும்பியுள்ளார்.