Ravichandran Ashwin: ஓய்வு முடிவு "யாரும் கட்டாயப்படுத்தவில்லை!" ரோஹித், விராட் பற்றி அஸ்வின் சொன்னது என்ன?
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது என்பது தனது தனிப்பட்ட முடிவு என்றும், கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய டெஸ்ட் சுற்றுப்பயணத்தின் நடுவில் ஓய்வு பெறுமாறு "யாரும் கட்டாயப்படுத்தவில்லை" என்று அஸ்வின்பேசினார்

நான் ஓய்வு பெறுமாறு யாரும் என்னை கட்டாயப்படுத்தவில்லை என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரவி அஸ்வின் தெளிவுப்படுத்தியுள்ளார்.
அஸ்வின் ஒய்வு:
இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது என்பது தனது தனிப்பட்ட முடிவு என்றும், கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய டெஸ்ட் சுற்றுப்பயணத்தின் நடுவில் ஓய்வு பெறுமாறு "யாரும் கட்டாயப்படுத்தவில்லை" என்று தனது யூடியுப் சேனலில் பேசியுள்ளார்.
39 வயதான அஸ்வின், கடந்த ஆண்டு பிரிஸ்பேனில் நடந்த 2024-25 பார்டர்-கவாஸ்கர் டிராபியின் மூன்றாவது டெஸ்டுக்குப் பிறகு ஓய்வு பெறுவதாக அறிவித்து கிரிக்கெட் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
அதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியன் பிரீமியர் லீக்கிலிருந்து (ஐபிஎல்) ஓய்வு பெறுவதாகவும் அறிவித்தார்.
”யாரும் கட்டாயப்படுத்தவில்லை”
"நீ போகணும்னு யாரும் சொல்லல, உனக்கு அணியில இடமில்லைன்னு யாரும் சொல்லல. நான் முடிவு எடுக்குறதுக்கு முன்னாடி 2-3 பேர் அதை எடுக்க வேண்டாம்னு சொன்னாங்க, ஆனா நான்தான் என் முடிவை எடுத்தேன். உண்மையில், நான் இன்னும் விளையாடணும்னு அவங்க விரும்பினாங்க," என்று அஸ்வின் தனது யூடியூப் சேனலில் தெரிவித்தார்.
மேலும் "ரோஹித் சர்மாவும் (அப்போதைய கேப்டன்) இதைப் பற்றி யோசிக்கச் சொன்னார், கௌதி பாய் (கவுதம் கம்பீர்) மீண்டும் யோசிக்கச் சொன்னார். ஆனால் நான் அதைப் பற்றி (ஓய்வு) அஜித் அகர்கருடன் (தேர்வுக்குழுத் தலைவர்) அதிகம் பேசவில்லை."
"ஓய்வு என்று வரும்போது இந்த முடிவு மிகவும் தனிப்பட்டது. இவை அனைத்தும் மிகவும் தனிப்பட்ட முடிவுகள்" என்று அவர் கூறினார்.அவரது கூற்று, அணி நிர்வாகத்தால் அவர் இந்த முடிவை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்ற ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது.இருப்பினும், ஆடும் லெவன் அணியில் இடம் பெறாவிட்டால், அணியுடன் பயணிக்க விரும்பவில்லை என்று அஸ்வின் முன்பு கூறியிருந்தார்.
”RO-KO இனி நிரூபிக்க எதுவும் இல்லை”
ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய மூத்த வீரர்களைப் பற்றிப் பேசுகையில், அணி நிர்வாகமும் தேர்வாளர்களும் அவர்களுடன் தெளிவான தொடர்பு வைத்திருக்க வேண்டும் என்று அஸ்வின் கருதினார்.ஆனால் ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக இருந்த ரோஹித்துக்குப் பதிலாக ஷுப்மான் கில் தலைமைப் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.
"விராட் கோலி ஒரு உண்மையான ஒருநாள் ஜாம்பவான். 2023 உலகக் கோப்பையில் அவரும் ரோஹித்தும் பேட்டிங் செய்த விதத்தை வைத்துப் பார்க்கும்போது, அவர்களிடம் நிரூபிக்க எதுவும் இல்லை. உரையாடல் நடந்திருக்கும் என்று நான் நம்புகிறேன். விராட் மற்றும் ரோஹித் சர்மாவுடன் விவாதிக்க வேண்டிய அனைத்தும் நடந்திருக்க வேண்டும். அவர்களுடன் தெளிவான தொடர்பு இருக்க வேண்டும்," என்று அஸ்வின் கூறினார்.
"விராட் மற்றும் ரோஹித்தின் சேவைகள் இனி தேவையில்லை என்று எந்த தேர்வாளரோ அல்லது பயிற்சியாளரோ கூறுவார்கள் என்று நான் நினைக்கவில்லை. அந்த அனுபவத்தை நீங்கள் கடையில் வாங்க முடியாது,"
"2027 உலகக் கோப்பை வரை அவர்களால் சாதிக்க முடியுமா என்பதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், அவர்கள் எடுத்திருக்கும் திசை நியாயமானது என்று நான் நினைக்கிறேன். இவ்வளவு கேள்விக்குறிகளுடன் உலகக் கோப்பைக்கு முன்னதாக நீங்கள் செல்ல முடியாது.
"ரோஹித் மற்றும் விராட் இருவரும் (2027 உலகக் கோப்பையில்) இருக்க விரும்புகிறார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர்களிடமிருந்து நாம் காணும் தயாரிப்பு, உலகக் கோப்பைக்குத் தயாராக இருக்க அவர்கள் தங்கள் உடலில் செலுத்தும் முதலீடாகும்," என்று அஸ்வின் கூறினார்.





















