“நீ புறக்கணி; நான் கொண்டாட வைக்கிறேன்” - சாதனைகளை குவிக்கும் ஜடேஜாவின் பிறந்தநாள் இன்று!
“முதலில் புறக்கணிப்பார்கள், பிறகு உன்னைப்பார்த்து சிரிப்பார்கள், உன்னுடன் சண்டையிடுவிடுவார்கள், பின்னர் நீ வெற்றி பெறுவாய்; கொண்டாடப்படுவாய்” - இந்த வசனம் ஜட்டு பாய்க்கு அப்படியே பொருந்தும்.
“முதலில் புறக்கணிப்பார்கள், பிறகு உன்னைப்பார்த்து சிரிப்பார்கள், உன்னுடன் சண்டையிடுவிடுவார்கள், பின்னர் நீ வெற்றி பெறுவாய்; கொண்டாடப்படுவாய்” - இந்த வசனம் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ ஜட்டு பாய்க்கு கண்டிப்பாக பொருந்தும். யார் இந்த ஜட்டு பாய். கிரிக்கெட் ரசிகர்கள் ரவீந்திர ஜடேஜாவை அப்படிதான் அன்பாக அழைப்பார்கள். விளையாட்டில் இருக்கும் சுறுசுறுப்பு, நையாண்டி, கிண்டல், ஆக்ரோஷம், கோபம், உதவி மனப்பான்மை என அனைத்தையும் வெளிக்காட்டி தன் ரசிகர்களின் மனதை கவர்ந்திழுத்து கட்டிப்போட்டு வைத்திருக்கிறார் ஜடேஜா என்றால் அது மிகையல்ல.
குஜராத் மாநிலம் நவகம் கேட் எனும் இடத்தில் 1988 ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி அனிருத் ஜடேஜா - லதா தம்பதியினருக்கு மகனாக பிறந்தவர்தான் ரவீந்திர ஜடேஜா. இவரின் தந்தை வாட்ச்மேனாக பணியாற்றியவர். தாய் செவிலியராக பணியாற்றினார். ஜடேஜாவுக்கு 17 வயது இருக்கும்போது அவரது தாய் தவறிவிட்டார். இதையடுத்து அவரின் பணி ஜடேஜாவின் சகோதரிக்கு வழங்கப்பட்டது. நடுத்தர குடும்பத்தில் பிறந்த ஜடேஜா முதன்முதலில் தனது இடதுகை சுழற்பந்துவீச்சால் கிரிக்கெட் தேர்வாளர்களால் புறக்கணிக்கப்பட்டார். கேலிக்கு ஆளானார். ஆனால் மனம் தளராமல் முயற்சி செய்து தனது கடின உழைப்பினால் தன்னை மேம்படுத்திக்கொண்ட ஜடேஜா, 2008 ஆம் ஆண்டில் மலேசியாவில் நடைபெற்ற 19 வயதிற்குட்பட்டோருக்கான அணியில் விராட் கோலியின் தலைமையில் கோப்பை வென்ற அணியில் இவர் இடம்பெற்றிருந்தார். 2008-09 ரஞ்சி சீசனில் 739 ரன்களும் 42 விக்கெட்டுகளும் எடுத்தார், ஜடேஜா. அதன்மூலம் இந்திய சீனியர் தேர்வு குழுவின் பார்வையைத் தனது பக்கம் திருப்பினார்.
பிப்ரவரி 8, 2009 ஆம் ஆண்டில் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் ஜடேஜா அறிமுகமானார். அந்தப்போட்டியில் 77 பந்துகளை எதிர்கொண்டு 60 ரன்களை எடுத்தார்.
2012-ம் ஆண்டு 23 வயதாக இருந்த ஜடேஜா, கிரிக்கெட் வரலாற்றில் ஒரு சாதனையைப் படைத்தார். அந்த ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் டிரிபிள் செஞ்சுரி அடித்து, உள்ளூர் கிரிக்கெட்டில் சாதனையைப் படைத்த உலகின் எட்டாவது, இந்தியாவின் முதல் வீரராக மிளிர்ந்தார் ஜட்டு. தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி நாக்பூரில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமனார் ஜடேஜா.
2013-ல் சாம்பியன் ட்ராபி தொடரில் 2 விக்கெட்டுகளை எடுத்து ‘கோல்டன் பால்’ பெற்றார் ஜட்டு. அதே ஆண்டு நடைபெற்ற ஒருநாள் போட்டியில் நம்பர் ஒன் பவுலர் என்ற பெருமையை கும்ப்ளேவுக்கு பிறகு ஜட்டு பெற்றார். ஐபிஎல் ஏலத்தில் சென்னை அணி போட்டிபோட்டுக்கொண்டு 10 கோடிக்கு ஜடேஜாவை ஏலத்தில் எடுத்தது. அதற்கு காரணம் அப்போது அவர் இருந்த ஃபார்ம். அனைத்து தேர்வாளர்களும் ஜடேஜாவை திரும்பி பார்த்தனர்.
அதுவரை பேட்டிங், பவுலிங் எனக் கவனத்தை ஈர்த்த ஜடேஜா ரன்அவுட் மூலம் சிறந்த ஃபீல்டராகவும் கவனம் ஈர்க்க ஆரம்பித்தார். அவர் ஆல்ரவுண்டராக செயல்பட்டு வேண்டுமென்றால் ரசிகர்களை கவனம் ஈர்த்திருக்கலாம். ஆனால் அதற்கு முன்னதாகவே தோனியின் பார்வை ஜடேஜா மீது இருந்தது. அவருக்கான வாய்ப்பை தொடர்ந்து தோனி கொடுத்துக்கொண்டே வந்தார். ஜடேஜா மீண்டும் மீண்டும் மிளிர ஆரம்பித்தார். அக்டோபர் 2019 இல், ஜடேஜா மிக வேகமாக 200 டெஸ்ட் விக்கெட்டுகளை எட்டிய இடது கை பந்துவீச்சாளர் ஆனார்.
கடந்த ஏப்ரல் மாதம் மும்பையில் நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 192 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அந்தப் போட்டியில் 20-வது ஓவரில் ஜடேஜா அடித்தது 37 ரன்கள். அரங்கமே அதிர்த்து போயின. எப்படிடா ஜெயிக்க முடியும் என எண்ணியவர்களுக்கு மிரட்டல் அடி மூலம் பதிலளித்தார் ஜடேஜா.
பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் கலக்கி வரும் ஜட்டு அடுத்த சிஎஸ்கேவின் கேப்டானாகலாம் என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். அதற்கு காரணம் இருக்கிறது. அடுத்த ஐபிஎல் போட்டி சென்னையில் நடைபெறும்போது தோனி கிரிக்கெட்டில் இருந்து விலகலாம் என பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த முறைக்கான ஏலத்தில் தோனியை விட ஜடேஜாவையே அதிக ஏலத்தில் எடுத்துள்ளது சிஎஸ்கே அணி.
ஜடேஜா இதுவரை 57 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 2195 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 19 முறை நாட்-அவுட்டாக இருந்துள்ளார். 232 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை 168 போட்டிகளில் விளையாடி 2411 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 39 முறை நாட் - அவுட்டாக இருந்ததோடு, 13 அரைசதங்களையும் 60 கேட்சுகளையும் பிடித்துள்ளார். மேலும், 188 விக்கெட்டுகளை வீழ்த்து அசத்தியுள்ளார்.
இந்நிலையில் இன்று ஜடேஜா தனது 33வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்த நாளுக்கு அவரது ரசிகர்கள் ட்விட்டரில் வாழ்த்துமழை பொழிந்து வருகின்றனர்