(Source: ECI/ABP News/ABP Majha)
Ranji Trophy: 54 பந்துகளில் 53 பந்துகள் டாட்.. மணிப்பூரை மிரட்டி, சுருட்டி வீசிய விதர்பா வீரர்!
ரஞ்சி கிரிக்கெட்டில் மணிப்பூர் அணிக்கு எதிராக 54 பந்துகளில் 53 பந்துகளை டாட் பந்துகளாக வீசி விதர்பா வீரர் அசத்தியுள்ளார்.
இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் கிரிக்கெட்டில் மிகவும் பிரபலமான கிரிக்கெட் தொடர்களில் ஒன்று ரஞ்சி கிரிக்கெட் தொடர். ஐ.பி.எல்.க்கு முன்பு இந்தியாவில் நடத்தப்படும் ரசிகர்களால் அதிகம் கவனிக்கப்பட்ட தொடராக இந்த தொடர் இருந்து வந்தது. தற்போதும் கிரிக்கெட் வீரர்கள் ரஞ்சி தொடரில் ஆடுவது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
54 பந்துகளில் 53 பந்துகள் டாட்:
இந்த நிலையில், தற்போது ரஞ்சி கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் விதர்பா – மணிப்பூர் அணிகள் மோதின இதில் முதலில் ஆடிய மணிப்பூர் அணி 34.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 75 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்த இன்னிங்சில் விதர்பா அணிக்காக ஆதித்யா சர்வாடே பந்துவீசினார். அவர் 9 ஓவர்கள் வீசி 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். அதாவது, இந்த இன்னிங்சில் சர்வாடே 54 பந்துகள் வீசினார். அதில் ஒரு பந்தில் மட்டுமே அவர் ரன் விட்டுக்கொடுத்தார். மற்ற 53 பந்துகள் அவர் டாட் பந்துகளாக அதாவது ரன்கள் இல்லாத பந்துகளாக வீசி அசத்தினார். அவர் வீசிய 54 பந்துகளில் ரன்கள் எடுக்கப்பட்ட ஒரே பந்தும் சிக்ஸராக சென்றது. அந்த சிக்சரை மணிப்பூர் கிரிக்கெட் வீரர் பிகாஷ்சிங் அடித்தார். அவர் 41 பந்துகளில் 1 பவுண்டரி 1 சிகஸ்ருடன் 13 ரன்கள் எடுத்தபோது அவரை சர்வாடேவே அவுட்டாக்கினார்.
பேட்டிங்கிலும் மிரட்டல்:
மணிப்பூர் அணிக்கு எதிரான முதல் இன்னிங்சில் ஆதித்யா சர்வாடே வீசிய 9 ஓவர்களில் 8 ஓவர்கள் மெய்டனாகியது. 54 பந்துகளில் 53 பந்துகள் டாட் பந்துகளாக வீசிய சர்வாடேவை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய விதர்பா அணி 230 ரன்களுக்கு முதல் இன்னில் ஆல் அவுட்டானது. அபாரமாக பந்துவீசிய சர்வாடே பேட்டிங்கிலும் கலக்கினார்.
அவர் 82 பந்துகளில் 8 பவுண்டரி 1 சிக்ஸருடன் 69 ரன்கள் விளாசி அசத்தினார். அவரது பேட்டிங் உதவியாலே விதர்பா அணி 230 ரன்கள் விளாசியது. இரண்டாவது இன்னிங்சிலும் மணிப்பூர் அணி 65 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்த இன்னிங்சிலும் ஆதித்யா சர்வாடே மிரட்டலாக பந்துவீசினார். அவர் 11 ஓவர்கள் வீசி 6 ஓவர்கள் மெய்டனாக்கி 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். மணிப்பூர் அணி இந்த டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 90 ரன்கள் வித்தியாசத்தில் விதர்பா அணியிடம் தோல்வி அடைந்தது.
விதர்பா அபார வெற்றி:
ரஞ்சி கிரிக்கெட் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் அணிகளில் ஒன்றாக விதர்பா அணியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விதர்பா அணியில் இந்திய அணிக்காக முச்சதம் அடித்த கருண்நாயர், பஷல், தர்ஷன் நல்கண்டே முக்கிய வீரர்களாக உள்ளனர். சிறப்பாக ஆடிய ஆதித்ய சர்வாடேவிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் தமிழ்நாடு அணி தற்போது திரிபுரா அணியுடன் தற்போது ஆடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: IND Vs AFG T20I: வெல்லும் முனைப்பில் தீவிர பயிற்சி.. நாளை இந்தியா - ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக இரண்டாவது டி 20 போட்டி
மேலும் படிக்க: Ishan Kishan: இஷான் கிஷன் விஷயத்தில் என்ன நடக்கிறது? ராகுல் ட்ராவிட் சொன்னது இதுதான்!