Ranji Trophy 2024: கோப்பையை வென்ற மும்பை அணி...பெருமை பீத்திய பத்திரிகையாளர்! பதிலடி கொடுத்த இந்திய அணி வீரர்!
பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் கருத்துக்கு பதிலடி. ஒரு மாநிலத்தின் வெற்றியை மட்டும் வைத்து இந்திய அணியை உருவாக்க முடியாது என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் பார்திவ் படேல் கூறியுள்ளார்.
கோப்பையை வென்ற மும்பை அணி:
மும்பை - விதர்பா அணிகளுக்கு இடையே நடைபெற்ற ரஞ்சி கோப்பையின் இறுதிப் போட்டியில் மும்பை அணி 169 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி 42 வது முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் அஜிங்க்யா ரஹானே தலைமையிலான மும்பை அணிக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அதேபோல், இறுதிப் போட்டிவரை வந்த விதர்பா அணிக்கும் வாழ்த்து கூறி வருகின்றனர் ரசிகர்கள்.
மும்பை கிரிக்கெட்டால் தான் இந்திய அணி வலுவாக இருக்கிறது:
இச்சூழலில், மும்பை அணியின் வெற்றியை குறிக்கும் வகையில் பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அவர் வெளியிட்ட அந்த பதிவில், ”ரோகித் சர்மா , சர்பராஸ் அல்லது ஜெய்ஸ்வால் ஆகியோர் இல்லாமல் மும்பை அணி 42 வது முறையாக ரஞ்சி கோப்பையை வென்றுள்ளது. அஜிங்க்யா ரஹானே மற்றும் மும்பை அணி தொடரை நன்றாக முடித்துள்ளது. மும்பை கிரிக்கெட் வலுவாக இருக்கும்போது, இந்திய கிரிக்கெட் நல்ல கைகளில் உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இது ஒருபுறம் இருக்க: எனது தந்தை மும்பைக்காக 13 சீசன்களில் விளையாடினார், ஒருபோதும் அவர் தோல்வியுற்ற பக்கத்தில் இல்லை, இதை ஒருவித உலக சாதனை என்று நான் நினைக்கிறேன்! ஜெய் ஹோ மும்பை!” என்று கூறியுள்ளார்.
இதை வைத்து இந்திய அணியை உருவாக்க முடியாது:
The Indian team can’t be built on just one state’s success. Great season for Mumbai, of course. A big congrats to the squad. But Indian cricket is strongest when we have a strong, competitive Ranji.and in the 8 years since the last time mumbai won,the successes of… https://t.co/1yDoj6kwpK
— parthiv patel (@parthiv9) March 14, 2024
இந்நிலையில் தான் இவரின் இந்த கருத்துக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் பார்திவ் படேல் பதிலடி கொடுத்துள்ளார். அதாவது ஒரு மாநிலத்தின் வெற்றியை மட்டும் வைத்து இந்திய அணியை உருவாக்க முடியாது என்று கூறியுள்ளார். இது தொடர்பாக தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில், “ஒரு மாநிலத்தின் வெற்றியை மட்டும் வைத்து இந்திய அணியை உருவாக்க முடியாது. மும்பைக்கு சிறந்த சீசன், நிச்சயமாக. மும்பை அணிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். ஆனால், வலிமையான, போட்டித்தன்மை கொண்ட ரஞ்சி போட்டி இருக்கும் போது இந்திய கிரிக்கெட் வலிமையானது.
கடைசியாக மும்பை வெற்றி பெற்ற 8 ஆண்டுகளில், குஜராத், விதர்பா, சௌராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேச அணிகளின் வெற்றிகளும் இந்திய கிரிக்கெட் வலுவாக இருப்பதில் பெரும் பங்காற்றியுள்ளன” என்று கூறியுள்ளார். தற்போது பார்திவ் படேலின் இந்த கருத்துக்கு ரசிகர்கள் தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க: Virat Kohli IPL Record: IPL-ல் ஒரு சீரிஸில் அதிக ரன்களை விளாசிய வீரர்! விராட் கோலியின் சாதனை!
மேலும் படிக்க: Watch Video: என்ன ஹீரோயிசமா? சர்பராஸ் கானை கண்டித்த ரோகித் சர்மா - நடந்தது இதுதான்!