World Cup 2023 Pakistan Squad: உள்ளே வந்த ஹசன் அலி.. தலைமை தாங்கும் பாபர் அசாம்.. அதிரடியாக அறிவிக்கப்பட்ட பாகிஸ்தான் அணி!
பாகிஸ்தான் அணிக்கு பாபர் அசாம் தலைமை தாங்குவார் என்றும், துணை கேப்டனாக ஷதாப் கான் செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வருகின்ற அக்டோபர் 5ம் தேதி 2023 ஒருநாள் உலகக் கோப்பை போட்டியானது இந்தியாவில் பிரமாண்டமாக தொடங்குகிறது. இந்த போட்டிக்கான அணிகளை ஏற்கனவே போட்டியில் பங்கேற்கும் நாடுகள் அறிவித்த நிலையில் இன்று, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் 2023 உலகக் கோப்பைக்கான அணியை அறிவித்துள்ளது.
அதன்படி, பாகிஸ்தான் அணிக்கு பாபர் அசாம் தலைமை தாங்குவார் என்றும், துணை கேப்டனாக ஷதாப் கான் செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், ஆசியக் கோப்பையின்போது காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷாவுக்கு பதிலாக ஹசன் அலி அணியில் இடம் பிடித்துள்ளார். ஹசன் அலி கடைசியாக ஜூன் 2022 முதல் பாகிஸ்தான் ஒருநாள் அணிக்காக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடினார். இவரும் பாகிஸ்தான் அணியின் அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர் ஆவார். இந்த நேரத்தில் நசீம் இல்லாத சூழலில் அணிக்கு மிகவும் தேவையாக இருப்பார் என்று நம்பலாம். ஹசன் அலி இதுவரை பாகிஸ்தான் அணிக்காக 60 ஒருநாள் போட்டிகளில் 91 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
2023 ஒருநாள் உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில் வித்தியாசமான முறையில் அறிவித்தது. 2023 உலகக் கோப்பையில் விளையாடும் வீரர்களின் பட்டியல் மற்றும் அவர்களின் வீடியோக்கள் இதில் சேர்க்கப்பட்டு சுவாரஸ்யத்தை கூட்டியுள்ளது.
🚨 Our squad for the ICC World Cup 2023 🚨#WeHaveWeWill | #CWC23 pic.twitter.com/pJjOOncm56
— Pakistan Cricket (@TheRealPCB) September 22, 2023
ஷதாப் கான் மற்றும் முகமது நவாஸ் ஆகிய இரு சுழல் பந்துவீச்சு ஆல்-ரவுண்டர்களுடன் பாகிஸ்தான் அணி இந்தமுறை களமிறங்கியுள்ளது. இதுபோக, சல்மான் ஆகா மற்றும் இப்திகார் அகமது ஆகியோர் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களாக பாபர் அசாமுக்கு துணை நிற்பர். தேவை ஏற்பட்டால் லெக் ஸ்பின்னர் உசாமா மிர் பந்துவீசலாம்.
பேட்டிங் நிலை எப்படி..?
ஃபகார் ஜமான், இமாம்-உல்-ஹக், அப்துல்லா ஷபீக், கேப்டன் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் ஆகியோர் பாகிஸ்தான் அணிக்காக தொடக்கம் முதல் மிடில் ஆர்டர் வரை வலுவான நிலையில் பேட்டிங் கூட்டணி அமைக்கும். இது தவிர பின் வரிசையில், வுத் ஷகீல், இப்திகார் அகமது, சல்மான் அலி ஆகா, ஷதாப் கான் விக்கெட்கள் விழுந்தால் பாகிஸ்தான் அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீட்பர்.
வேகப்பந்து வீச்சாளர்கள்:
பாகிஸ்தானின் புகழ்பெற்ற வேகப்பந்து வீச்சுக்கு ஷாஹீன் ஷா அப்ரிடி தலைமை தாங்க, அவருக்கு ஆதரவாக ஹரிஸ் ரவூப், முகமது வசீம் மற்றும் ஹசன் அலி ஆகியோர் உடன் இருப்பார்கள்.
உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணி : ஃபகார் ஜமான், இமாம்-உல்-ஹக், அப்துல்லா ஷபீக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான், சவுத் ஷகீல், இப்திகார் அகமது, சல்மான் அலி ஆகா, ஷதாப் கான், உசாமா மிர், முகமது நவாஸ், ஷஹீன் ஷா அப்ரிடி, ஹரிஸ் ரவுஃப், முகமது வாசிம் ஜூனியர், ஹசன் அலி
கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு முன்னதாக, பாகிஸ்தான் அணி முறையே நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது. அவர்கள் அக்டோபர் 6 ஆம் தேதி ஹைதராபாத்தில் நெதர்லாந்துக்கு எதிராக தங்கள் முதல் போட்டியில் விளையாடுவார்கள்.