Emerging Asia Cup Final: பேட்டிங், பந்துவீச்சில் மிரட்டல்.. இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை கைப்பற்றிய பாகிஸ்தான்..!
எமர்ஜிங் ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய ஏ அணியை 128 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் ஏ அணி வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
எமர்ஜிங் ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய ஏ அணியை 128 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் ஏ அணி வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இலங்கையில் எமர்ஜிங் ஆசிய கோப்பை தொடரானது நடைபெற்று வருகிறது. இன்று கொழும்புவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா ஏ – பாகிஸ்தான் ஏ அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களம் கண்ட பாகிஸ்தான் அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியது.
தொடக்க வீரர்கள் சயீம் அயூப் – பர்ஹான் இருவரும் அரைசதம் விளாசிய நிலையில் ரன்கள் மிக வேகமாக உயர்ந்தது. சயீம் 59 ரன்களிலும், பர்ஹான் 65 ரன்களிலும் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். தொடர்ந்து ஓமர் 35 ரன்கள், கேப்டன் முகமது ஹாரிஸ் 2 ரன்களிலும், காசிம் அக்ரமும் டக் அவுட்டாகினர். இதனால் பாகிஸ்தான் அணி விரைவில் ஆல் அவுட்டாகும் என நினைத்த இந்திய அணிக்கு தய்யப் தாஹிர் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார்.
சிறப்பாக விளையாடிய அவர் தாஹிர் சதம் விளாசினார். கடைசி கட்டத்தில் மெஹ்ரன் மும்தாஜ், முகமது வாசிம் ஜூனியர் இருவரும் அதிரடி காட்ட பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்களை குவித்தது. இந்திய அணி தரப்பில் ரியான் பராஹ், ராஜ்வர்தன் ஹங்க்ரேகர் இருவரும் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
தொடர்ந்து 353 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் கண்ட இந்திய அணியில், அபிஷேக் ஷர்மா 61 ரன்களும், கேப்டன் யஷ் துல் 39 ரன்களும், சாய் சுதர்சன் 29 ரன்களும் அதிகப்பட்சமாக எடுத்தனர், மற்ற வீரர்கள் 20 ரன்களுக்குள் மட்டுமே எடுத்ததால் இந்திய அணி 40 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 224 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் அணி தரப்பில் சுஃபியான் முஹீம் அதிகப்பட்சமாக 3 விக்கெட்டுகளையும், அர்ஷத் இக்பால், மெஹ்ரான் மும்தாஸ், முகமது வாசிம் ஜூனியர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதன்மூலம் 128 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி சாம்பியன் கோப்பையை கைப்பற்றி அசத்தியது.