ODI WC 2023 ENG vs SL: கட்டாய வெற்றி நெருக்கடி! பெங்களூரில் ஆதிக்கம் செலுத்தப்போவது இங்கிலாந்தா? இலங்கையா?
உலகக்கோப்பைத் தொடரில் இன்று நடக்கும் போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் இங்கிலாந்து - இலங்கை அணிகள் மோதுகின்றன.
உலகக் கோப்பைத் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடக்கும் 25வது போட்டி நடக்கிறது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியும், முன்னாள் சாம்பியன் இலங்கை அணியும் மோத உள்ளன. பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற உள்ள இந்த போட்டி இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாகும்.
இங்கிலாந்து - இலங்கை:
நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு இந்த தொடர் தொடங்கியது முதலே சோதனை என்றே சொல்ல வேண்டும். தோல்வியுடன் இந்த தொடரை தொடங்கிய இங்கிலாந்து ஆப்கானிஸ்தானுடன் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. அதையடுத்து, தென்னாப்பிரிக்கா அணியுடன் நடந்த கடந்த போட்டியில் படுதோல்வி அடைந்தது.
தொடர் தோல்விகளால் துவண்டுள்ள இங்கிலாந்து அணி இன்றைய போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய சூழலில் களமிறங்குகிறது. பேட்டிங், பவுலிங் என்று எதுவுமே இங்கிலாந்து அணிக்கு சாதகமாக அமையாததால் அவர்களால் வெற்றி பெற இயலவில்லை. இன்றைய போட்டியில் கேப்டன் பட்லர், பார்ஸ்டோ, மலன், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ப்ரூக் ஆகியோர் கண்டிப்பாக சிறப்பாக பேட்டிங் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
பலம், பலவீனம்:
சாம் கரன், மார்க் வுட், அட்கின்சன், கிறிஸ் வோக்ஸ், ப்ரைடன் கார்ஸ், மொயின் அலி, லிவிங்ஸ்டன், ரஷித் கண்டிப்பாக நன்றாக பந்துவீச வேண்டியது அவசியம் ஆகும். இந்த போட்டியில் மிகப்பெரிய வெற்றி பெற்றால் மட்டுமே இங்கிலாந்து அணி நல்ல ரன்ரேட் பெறும்.
இலங்கை அணியும் தொடர் தோல்விகளை சந்தித்தாலும் கடந்த போட்டியில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி வெற்றிப்பாதைக்கு திரும்பியது. அந்த அணியில் கேப்டன் மெண்டிஸ், நிசங்கா, சமரவிக்ரமா, அசலங்கா சிறப்பாக பேட்டிங் செய்கின்றனர். அவர்கள் இன்றைய போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்ய வேண்டியது அவசியம் ஆகும். அவர்களுடன் பெரரா, டி சில்வா நன்றாக ஆட வேண்டும்.
கட்டாய வெற்றி தேவை:
பந்துவீச்சைப் பொறுத்தவரை இலங்கையின் பந்துவீச்சு கவலைக்குரிய வகையில் உள்ளது. இதனால், கருணரத்னே, தீக்ஷனா, மதுஷங்கா, வெல்லலகே சிறப்பாக பந்துவீச வேண்டியது அவசியம் ஆகும். இன்றைய போட்டியில் இரு அணிகளும் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். அப்போதுதான் நல்ல ரன்ரேட்டுடன் புள்ளிப்பட்டியலில் முன்னேற முடியும்.
தற்போதைய நிலவரப்படி, இலங்கை அணி 4 போட்டிகளில் ஆடி 1 வெற்றி 3 தோல்வியுடன் 2 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து அணி 4 போட்டிகளில் ஆடி 1 வெற்றி 3 தோல்வியுடன் 2 புள்ளிகளுடன் 8வது இடத்தில் உள்ளது. இனி வரும் அனைத்து போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெறுவதுடன் நல்ல ரன் ரேட்டுடன் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பை இரு அணிகளும் பிரகாசப்படுத்திக் கொள்ள முடியும்.
பெங்களூர் மைதானம் சிறியது என்பதாலும் பேட்டிங்கிற்கு மிகவும் உகந்தது என்பதாலும் நிச்சயம் இரு அணிகளும் இமாலய ரன்குவிப்பில் இறங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும் படிக்க: ODI WC 2023: உலகக்கோப்பையிலே மிகப்பெரிய வெற்றி! 309 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா!
மேலும் படிக்க: ODI WC 2023 Maxwell: உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அதிவேக சதம்! 40 பந்துகளில் வரலாறு படைத்த மேக்ஸ்வெல்!