ENG Vs NZ Match Highlights: கான்வே ரவீந்திரா மிரட்டல் சதம்; நடப்புச் சாம்பியனை பழி தீர்த்து நியூசிலாந்து அபார வெற்றி
ENG Vs NZ Match Highlights: கான்வே மற்றும் ரவீந்திராவுக்கு இந்த உலகக் கோப்பைத் தொடர் அறிமுக உலகக் கோப்பைத் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து 283 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு தொடக்கத்தில் அதிர்ச்சி காத்து இருந்தது. நியூசிலாந்து அணி முதல் ஓவரில் 10 ரன்கள் சேர்த்தது. 2வது ஓவரை வீசிய சாம் கரன் முதல் பந்திலேயே விக்கெட் கைப்பற்றி அசத்தினார். இந்த ஓவரினை மெய்டனாக வீசினார். அதேபோல் போட்டியின் நான்கவது ஓவரையும் சாம் கரன் மெய்டனாக வீசினார். இது மட்டும்தான் இங்கிலாந்து அணிக்கு ஆறுதலான விஷயம்.
இதையடுத்து தொடக்க வீரர் கான்வேவுடன் இணைந்த டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ரச்சின் ரவீந்திரா இங்கிலாந்து அணியின் பந்து வீச்சினை துவம்சம் செய்தனர். இவர்களின் ஆட்டத்தினைப் பார்த்தபோது இங்கிலாந்து அணி வீரர்களுக்கு என்ன செய்வது எனத் தெரியவில்லை.
அதிரடியாக விளையாடி ரன்கள் குவிப்பதில் ஆர்வம் காட்டிய இரண்டு இடது கை பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை கைப்பற்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் தன்னிடம் இருந்த பந்து வீச்சாளர்கள் அனைவரையும் பயன்படுத்திப் பார்த்தார். ஆனால் அவருக்கு பலன் கிடைக்கவில்லை. இருவரும் அடுத்தடுத்து அரைசதம் கடந்து நியூசிலாந்து அணியை வெற்றியை நோக்கி அதிரடியாக முன்னேற்றிக் கொண்டு சென்றனர்.
ஓவருக்கு தவறாமல் பவுண்டரிகள் விளாசி வந்த இருவரும் சதத்தை நோக்கி சிறப்பாக முன்னேறி வந்தனர். இவர்களின் விக்கெட்டை கைப்பற்ற பட்லர் மூன்றாவது நடுவரையெல்லாம் நாடினார். ஆனால் அது பட்லருக்கு சாதகமான முடிவைப் பெற்றுத்தரவில்லை. சிறப்பாக ஆடிவந்த இருவரில் முதலில் கான்வே சதம் விளாசினார். இதையடுத்து ரவீந்திரா சதம் விளாசினார். இருவரும் அடுத்தடுத்து சதம் விளாசி அமர்க்களப்படுத்தினர். இருவருக்கும் இந்த உலகக் கோப்பைத் தொடர் அறிமுக உலகக் கோப்பைத் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.
இருவரும் இணைந்து நியூசிலாந்து அணியை எளிதில் வெற்றியை எட்ட தங்களது சிறப்பான பங்களிப்பை அளித்தனர். சிறப்பாக ஆடிய கான்வே 150 ரன்கள் குவித்தார். இறுதியில் நியூசிலாந்து அணி 36.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 283 ரன்களை எட்டி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கான்வே மற்றும் ரவீந்திரா சிறப்பாக விளையாடி 273 ரன்கள் குவித்து நியூசிலாந்து இமாலய வெற்றி பெற உதவினர். 96 பந்தில் 11 பவுண்டரி 5 சிக்ஸர் விளாசி 123 ரன்கள் குவித்து இறுதி வரை களத்தில் இருந்த ரச்சின் ரவீந்திராவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டுள்ளது. அறிமுக உலகக் கோப்பைப் போட்டியில் கான்வே 121 பந்துகளில் 19 பவுண்டரி 3 சிக்ஸர்கள் விளாசி 152 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
2019ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் நியூசிலாந்து அணி தோல்வியைத் தழுவியது. அதற்கு பழி தீர்க்கும் விதமாக 2023ஆம் ஆண்டுல் உலகக் கோப்பைத் தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றுள்ளது.