SA Vs AUS, Match Highlights: தென்னாப்பிரிக்காவின் போராட்டம் வீண்; 8வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா
SA Vs AUS, Match Highlights: உலகக்கோப்பையில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவுமே தங்களது முதல் போட்டியில் மோதிக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் நடைபெற்று வரும் 13வது உலகக் கோப்பை இறுதி கட்டத்தினை எட்டியுள்ளது. முதலாவது அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதையடுத்து இன்று அதாவது நவம்பர் 16ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இரண்டாவது அரையிறுதிப் போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது.
அதன்படி களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழக்க ஆரம்பித்தது. அதாவது போட்டியின் தொடக்கம் முதல் ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான ஸ்டார்க் மற்றும் ஹசில்வுட் கூட்டணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை அள்ளியது. அதாவது தென்னாப்பிரிக்காவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான டெம்பா பவுமா, டி காக், மார்க்ரம், வென் டர் டசன் என 4 விக்கெட்டுகளை மளமளவென அள்ளியது. நெருக்கடியில் களமிறங்கிய மில்லரின் சதத்தால் தென்னாப்பிரிக்கா அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டினை இழந்து 212 ரன்கள் சேர்த்தனர்.
அதன் பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி தொடக்கம் முதல் அதிரடியாக விளையாட ஆரம்பித்தது. ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான வார்னர் மற்றும் டிராவிஸ் ஹெட் கூட்டணி பவுண்டரிகளை தாறுமாறாக விளாசினர். இவர்களின் ஆட்டத்தினைப் பார்த்தபோது ஆஸ்திரேலியா அணி 15 முதல் 20 ஓவர்களில் வெற்றியை எட்டி இறுதிப் போட்டிக்கு எளிதில் தகுதி பெற்றுவிடும் என்ற எண்ணத்தை ரசிகர்களுக்கு ஏற்படுத்தினர்.
இந்த ஜோடியை மார்க்ரம் தான் வீசிய முதல் பந்தில் பிரித்தார். வார்னர் தனது விக்கெட்டினை 29 ரன்னில் இழக்க போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு முதல் சாதகமான முடிவு வந்தது. அடுத்த ஓவரில் ரபாடா பந்தில் மார்ஷ் டக் அவுட் ஆக போட்டியில் சுவாரஸ்யம் கூடியது. ஆனால் அதிரடியைக் குறைக்காத டிராவிஸ் ஹெட் ஹாட்ரிக் பவுண்டரி விளாசி தனது அரைசதத்தினை எட்டினார். ஆனால் அவரது விக்கெட்டினை கேசவ் மஹராஜ் தனது முதல் பந்தில் இழந்து வெளியேறினார்.
அதன் பின்னர் வந்த லபுசேன் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் விக்கெட்டினை ஷம்ஷி கைப்பற்ற போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெறவும் வாய்ப்புகள் உள்ளதைப் போல் சூழல் மாறியது. ஆனால் அதன் பின்னர் இணைந்த ஸ்மித் இங்லிஷ் கூட்டணி சீராக ரன்கள் சேர்க்க ஆஸ்திரேலியா அணி விக்கெட்டுகளை இழக்காமல் 10 ஓவர்கள் விளையாடியது. அதன் பின்னர் வந்த ஸ்டார்க் - இங்லிஷ் கூட்டணி வெற்றியை நோக்கி முன்னேற்றும் வேலைகளை சிறப்பாகச் செய்தது. 28 ரன்கள் சேர்த்த நிலையில் இங்லிஷ் தனது விக்கெட்டினை இழக்க, போட்டி பரபரப்பானது. இறுதி கட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 47.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் சேர்த்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றி மூலம் ஆஸ்திரேலியா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 8வது முறையாக உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதற்கு முன்னர் ஆஸ்திரேலியா 1975, 1987, 1996, 1999, 2003, 2007, 2015 மற்றும் 2023 என மொத்தம் 8 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஆஸ்திரேலியா வரும் 19ஆம் தேதி அதாவது ஞாயிற்றுக்கிழமை இந்தியாவை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் எதிர்கொள்ளவுள்ளது. இந்த உலகக்கோப்பையில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவுமே தங்களது முதல் போட்டியில் சென்னையில் மோதிக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.