Nitish Kumar Reddy: பாண்டியாவின் பணியை செய்வேன்..வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்! நிதிஷ் குமார் ரெட்டி
ஹர்திக் பாண்டியாவின் பணியை செய்வதற்காக கடுமையாக உழைத்து வருவதாக கூறியுள்ளார் இளம் வீரர்களில் ஒருவரான நிதிஷ்குமார் ரெட்டி
இலங்கை செல்லும் இந்திய அணி:
இந்திய அணி இலங்கையில் சுற்று பயணம் மேற்கொண்டு விளையாடி உள்ளது. இதற்கான வீரர்கள் பட்டியலை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. அதன்படி, இந்திய அணியின் டி20 கேப்டனாக சூர்யகுமார் யாதவும், ஒரு நாள் அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மாவும் செயல்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த முறை டி20 அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை அந்த பொறுப்பில் இருந்து நீக்கியுள்ள பிசிசிஐ சுப்மன் கில்லை துணைகேப்டனாக அறிவித்துள்ளது. அதே நேரம் ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் வீரராக தொடர்வார் என்றும் கூறப்பட்டுள்ளது.
பாண்டியாவின் பணியை செய்வேன்:
இந்நிலையில் இளம் வீரர்களில் ஒருவரான நிதிஷ்குமார் ரெட்டி ஹர்திக் பாண்டியாவின் பணியை செய்வதற்காக கடுமையாக உழைத்து வருவதாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், "பேட்டிங் வரிசையில் நம்பர் 6 அல்லது 7வது இடத்தில் விளையாட எனக்கு வாய்ப்பு இருப்பதாக கருதுகின்றேன். இன்னும் சொல்லப்போனால் அது ஹர்திக் பாண்டியாவின் பணி.
அதுபோன்ற வேலையை தான் செய்வதற்காக தயாராகி வருகின்றேன். கீழ் வரிசை மட்டுமல்ல நீங்கள் என்னை பேட்டிங் வரிசையில் எந்த இடத்தில் இறக்கினாலும் நான் அதை செய்வேன்.தொடக்க வீரராக இருந்தாலும் சரி, இல்லை நடுவரிசையாக இருந்தாலும் சரி வாய்ப்புக்காக தான் நான் காத்துக் கொண்டிருக்கின்றேன்.
ஆனால் டாப் வரிசையில் ஏற்கனவே பல அனுபவ வீரர்கள் இருப்பதால் அங்கு எனக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்காது என்று நினைக்கின்றேன். நீங்கள் எனக்கு எந்த ரோல் வழங்கினாலும் அதற்கு ஏற்ற வகையில் விளையாடுவதற்காக நான் இப்போது இருந்தே பயிற்சி செய்து வருகின்றேன்.
தற்போது விராட் கோலி , ஜடேஜா ஆகியோர் ஓய்வு பெற்றிருப்பதால் இளம் வீரர்களான எங்களுக்கு அதிக அளவுக்கு வாய்ப்பு வரும் என்று நினைக்கிறேன். அதனை நாங்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார். இலங்கை செல்லும் இந்திய அணியில் நிதிஷ் குமார் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவர் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த முறை ஜிம்பாப்வே அணிக்கு எதிரனா தொடரின் போது காயம் காரணமாக அவர் அணியில் இடம் பெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது.