(Source: ECI/ABP News/ABP Majha)
Semi Final World Cup 2023: முட்டி மோதி உலகக் கோப்பை அரையிறுதிக்கு வந்த நியூசிலாந்து! லீக் சுற்றில் நடந்தது என்ன?
New Zealand Semi Final World Cup 2023: நடப்பு உலகக் கோப்பையின் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியாவுடன் விளையாட உள்ள நியூசிலாந்து, லீக் சுற்றில் எவ்வாறு செயல்பட்டது? என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
New Zealand Semi Final World Cup 2023: நடப்பு உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு எப்படி தகுதிபெற்றது என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
நியூசிலாந்தின் ஏற்றமும், இறக்கமும்..!
12 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் தொடங்கியது. எதிர்பார்த்ததை போன்றே நியூசிலாந்து அணி ஆரம்பத்தில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் முதல் நான்கு லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்றது. ஆனால், அடுத்த நான்கு லீக் போட்டிகளிலும் தொடர் தோல்வியை சந்தித்ததால், அணியின் அரையிறுதி வாய்ப்பே கேள்விக்குறியானது.
புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தை பிடிக்க நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் 10 புள்ளிகளுடன் கடைசி அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றது நியூசிலாந்து. இதையடுத்து வரும் 15ம் தேதி மும்பையில் நடைபெற உள்ள முதல் அரையிறுதிப் போட்டியில், நடப்பு உலகக் கோப்பையில் தோல்வியையே சந்திக்காத இந்திய அணியை நியூசிலாந்து எதிர்கொள்ள உள்ளது.
நியூசிலாந்தின் ஸ்டார் வீரரான ரச்சின் ரவிந்திரா:
நியூசிலாந்து தொடக்க ஆட்டக்காரர்களான கான்வே மற்றும் ரச்சின் ரவிந்திரா, அணிக்கான சிறப்பான அடித்தளம் அமைத்து கொடுப்பதில் வல்லவர்களாக உள்ளனர். இந்த ஜோடியின் ஆட்டத்த பொறுத்தே அணியில் உள்ள மற்ற வீரர்களின் செயல்பாடு அமைகிறது. டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ் ஆகியோர் அணியின் மிடில் ஆர்டர்களாக அதகளம் செய்கின்றனர். காயம் காரணமாக கேப்டன் வில்லியம்சன் குறிப்பிட்ட சில போட்டிகளில் மட்டுமே விளையாடியதும், அணியின் தொடர் தோல்விகளுக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. பல அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் இருப்பினும், இளம் வீரரான ரச்சின் ரவீந்திரா நடப்பு உலகக் கோப்பையில் நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக 565 ரன்களை குவித்துள்ளார்.
அடக்கி வாசிக்கும் பந்துவீச்சு:
நியூசிலாந்து அணியின் வெற்றிகளை போல தான், அந்த அணியின் பந்துவீச்சும். ஆரம்பத்தில் பந்துவீச்சாளர்கள் அசத்த வெற்றியும் எளிதில் கைகூடியது. ஆனால், லீக் சுற்றின் பிற்பாதியில் பந்துவீச்சாளர்களின் மோசமான செயல்பாடு தான், நியூசிலாந்து அணியின் தொடர் தோல்விக்கு காரணமாகவும் அமைந்தது. குறிப்பாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 400 ரன்களை கடந்தும், நியூசிலாந்து அணி தோல்வியையே தழுவியது. ஆரம்பத்தில் சாண்ட்னர் விக்கெட்டுகளை குவித்தாலும், லீக் சுற்றின் முடிவில் அதிக விக்கெட் எடுத்தவர்களுக்கான பட்டியலில் முதல் 5 இடங்களில் ஒரு நியூசிலாந்து வீரர் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
லீக் சுற்றில் நியூசிலாந்து அணியின் செயல்பாடு:
- முதல் போட்டி: இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 283 ரன்களை சேஸ் செய்த நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் - ரச்சின் ரவீந்திரா
- இரண்டாவது போட்டி: நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 322 ரன்களை குவித்து, 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் - சாண்ட்னர்
- மூன்றாவது போட்டி: வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியில் 246 ரன்களை சேஸ் செய்த நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் - பெர்கூசன்
- நான்காவது போட்டி: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 288 ரன்களை குவித்து, 149 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் - கிளென் பிலிப்ஸ்
- ஐந்தாவது போட்டி: இந்திய அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 273 ரன்களை சேர்த்தாலும், 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. ஆட்டநாயகன் - ஷமி
- ஆறாவது போட்டி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் 388 ரன்களை சேஸ் செய்த நியூசிலாந்து அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது. ஆட்டநாயகன் - டிராவிஸ் ஹெட்
- ஏழாவது போட்டி: தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் 357 ரன்களை சேஸ் செய்த நியூசிலாந்து அணி 190 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆட்டநாயகன் - வான் டெர் டுஸ்ஸென்
- எட்டாவது போட்டி: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 401 ரன்களை சேர்த்தாலும், டக்வர்த் லூயிஸ்படி 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. ஆட்டநாயகன் - ஃபகர் ஜமான்
- ஒன்பதாவது போட்டி: இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 172 ரன்களை சேஸ் நியூசிலாந்து அணி, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் - டிரெண்ட் போல்ட்