T20 Highest Runs : மீண்டும் நம்பர் 1..! ரோகித் சர்மாவை பின்னுக்கு தள்ளிய மார்டின் கப்தில்..!
டி20 போட்டிகளில் அதிக ரன்கள் விளாசிய வீரர் என்ற பெருமையை நியூசிலாந்தின் மார்டின் கப்தில் மீண்டும் அடைந்துள்ளார்.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் ஆடி வருகிறது. இரு அணிகளும் மோதிய மூன்றாவது டி20 போட்டி ஜமைக்காவில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி தோற்றாலும், அந்த அணியின் தொடக்க வீரர் மார்டின் கப்தில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
அதாவது, டி20 கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். அந்த இடத்தில் இருந்த இந்திய கேப்டன் ரோகித்சர்மாவை பின்னுக்கு தள்ளியுள்ளார். நேற்று ஜமைக்காவில் நடைபெற்ற போட்டியில் கப்தில் 13 பந்துகளில் 1 பவுண்டரி 1 சிக்ஸருடன் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
Martin Guptill to the top!
— ICC (@ICC) August 15, 2022
The @BLACKCAPS opener goes to No.1, though there is an Asia Cup around the corner for two batters in the chasing pack 🏏
More on Guptill's record and #WIvNZ: https://t.co/aws5Z9q9hL pic.twitter.com/cTijVVXjPY
இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் மார்டின் கப்தில் 3 ஆயிரத்து 497 ரன்களை விளாசி முதலிடத்திற்கு முன்னேறினார். இதற்கு முன்பு அந்த இடத்தில் இருந்த இந்திய கேப்டன் ரோகித்சர்மா 3 ஆயிரத்து 487 ரன்களுடன் இரண்டாவது இடத்திற்கு சரிந்தார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட்கோலி 3 ஆயிரத்து 308 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
மார்டின் கப்தில் 121 போட்டிகளில் ஆடி 3 ஆயிரத்து 497 ரன்களுடன் உள்ளார். அவர் இதுவரை டி20 போட்டியில் 2 சதங்களையும், 20 அரைசதங்களையும் விளாசியுள்ளார். ரோகித் சர்மாவை போல ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் விளாசிய பெருமையும் மார்டின் கப்திலுக்கு உண்டு. மார்டின் கப்தில் 193 போட்டிகளில் 7 ஆயிரத்து 254 ரன்களையும் விளாசியுள்ளார். 18 சதங்களும், 1 இரட்டை சதமும், 38 அரைசதமும் விளாசியுள்ளார்.
ரோகித்சர்மா 132 டி20 போட்டிகளில் ஆடி 3 ஆயிரத்து 487 ரன்களை விளாசியுள்ளார். ரோகித் சர்மா 4 சதங்களையம், 27 அரைசதங்களையும் விளாசியுள்ளார். ரோகித் சர்மாவும், மார்டின் கப்திலும் அடுத்தடுத்து ஏராளமான டி20 போட்டிகளில் ஆட உள்ளதால் முதலிடத்திற்கான இடத்தில் இருவரும் அடுத்தடுத்து மாறி, மாறி வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க : Independence Day 2022: ஜிம்பாப்வேயில் சுதந்திர தினத்தை கொண்டாட உள்ள இந்திய வீரர்கள்.. எங்கே தெரியுமா?
மேலும் படிக்க : Pujara 174 : என்னா அடி..! ருத்ரதாண்டவம் ஆடிய புஜாரா..! ஒருநாள் போட்டியில் 174 ரன்களை விளாசி மிரட்டல்..!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்