Watch Video: ரெட் கார்டு காட்டிய அம்பயர்.. வெளியேற்றப்பட்ட சுனில் நரைன்.. வரலாற்றில் இதுவே முதன்முறை..
கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக ரெட் கார்டு காட்டப்பட்டு வெளியேற்றப்பட்ட வீரர் என்ற மோசமான சாதனைக்கு சுனில் நரைன் ஆளாகியுள்ளார்.
கிரிக்கெட் போட்டியானது நாம் வெறுமனே பார்ப்பதுபோல பேட்டிங், பவுலிங், பீல்டிங் என்பதற்குள் மட்டும் அடங்கிவிடுவது இல்லை. அதற்கு என்று ஏராளமான விதிகள் வகுக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் போட்டி, ஒருநாள் போட்டி மற்றும் டி20 என்று ஒவ்வொரு வடிவிலான போட்டிகளுக்கும் ஏராளமான விதிகள் உள்ளன.
ரெட் கார்டு:
கிரிக்கெட் போட்டிகளை பொறுத்தவரை ஓவர்களை மெதுவாக வீசுவதால் ஆட்ட நேரம் அதிகரிப்பது என்பது நீண்ட காலமாக இருந்து வருகிறது. இது தவிர்க்க முடியாத சூழல் காரணமாகவே நிகழ்கிறது. ஆனாலும், குறிப்பிட்ட நேரத்திற்குள் ஓவர்களை முடிக்காவிட்டால் கேப்டன்களுக்கும், அந்த அணிக்கும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
தற்போது, குறிப்பிட்ட நேரத்திற்குள் ஓவர்கள் முடிக்க வேண்டும் என்பதை இன்னும் கடுமையாக்க வேண்டும் என்பதற்காக சமீபத்தில் ரெட் கார்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. கால்பந்து ஆட்டங்களில் ரெட் கார்டு அதாவது கள நடுவர் சிவப்பு அட்டை காட்டினால் அந்த வீரர் வெளியே செல்ல வேண்டும். அதே விதியை கிரிக்கெட்டிலும் கடந்த மாதம் அமல்படுத்தினர்.
SENT OFF! The 1st ever red card in CPL history. Sunil Narine gets his marching orders 🚨 #CPL23 #SKNPvTKR #RedCard #CricketPlayedLouder #BiggestPartyInSport pic.twitter.com/YU1NqdOgEX
— CPL T20 (@CPL) August 28, 2023
சுனில் நரைன் வெளியேற்றம்:
கரீபியன் பிரிமியர் லீக்கில் இந்த முறை அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த தொடரின் 12வது ஆட்டமான டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் – செயின்ட் கிட்ஸ் அணிகள் இடையேயான ஆட்டத்தில் முதன் முறையாக ரெட் கார்டு விதி பயன்படுத்தப்பட்டது. இதன்படி, முதலில் பந்துவீசிய பொல்லார்ட் தலைமையிலான டிரின்பாகோ அணி குறிப்பிட்ட 20 ஓவர்களை திட்டமிட்ட நேரத்திற்குள் வீசவில்லை. இதனால், களநடுவர் 20வது ஓவர் வீசும்முன்பு மைதானத்தில் ரெட் கார்டை காட்டினார்,
இதனால், கடைசி ஓவரில் கேப்டன் பொல்லார்ட் சுழற்பந்துவீச்சாளர் சுனில் நரைசுனை வெளியில் அனுப்பினார். மேலும், அந்த அணி 2 அவுட் பீல்டர்களுடன் வெறும் 10 வீரர்களுடனே கடைசி ஓவரில் பீல்டிங் செய்தது. ஆனாலும், இந்த போட்டியில் பொல்லார்ட் தலைமையிலான டிரின்பாகோ அணி வெற்றி பெற்றது.
சிவப்பு அட்டை என்றால் என்ன?
அதாவது, குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு அணி பந்துவீசி முடிக்காவிட்டால் மைதானத்தின் உள்ளே இருக்கும் நடுவர் சிவப்பு அட்டை காட்டுவார். அதன்படி, அந்த அணியின் கேப்டன் யாராவது ஒரு வீரரை வெளியே அனுப்ப வேண்டும். மேலும், அவுட் ஃபீல்டில் 2 வீரர்களை மட்டுமே அதாவது 30 யார்டுக்கு வெளியே 2 வீரர்களை மட்டுமே நிறுத்த வேண்டும். அதாவது 10 வீரர்களுடன் மட்டுமே ஆட நேரிடும். இதுதான் விதி.
20 ஓவர்கள் போட்டியை பொறுத்தவரை ஒரு அணி பந்துவீச 85 நிமிடங்கள் ஒதுக்கப்படுகிறது. அதாவது, ஒரு ஓவருக்கு 4 நிமிடம் 15 நொடிகள் ஆகும். இதன்படி, 19வது ஓவரை ஒரு அணி 80 நிமிடம் 45 நொடிகளில் நிறைவு செய்திருக்க வேண்டும். அவ்வாறு நிறைவு செய்யாவிட்டால் கடைசி ஓவரில் ரெட் கார்டு விதி அமல்படுத்தப்படும்.
2005-ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக நடந்த போட்டியில் கடைசி ஓவரை வீசிய மெக்ராத் ஒரு பந்துக்கு 45 ரன்கள் எதிரணிக்கு தேவைப்பட்ட நிலையில், அந்த பந்தை தரையில் உருட்டிவிடுவதுபோல சைகை காட்டினார். அதற்கு பிரபலமான அம்பயர் பில்லி பவுடன் ரெட் கார்டை காட்டினார். ஆனால், அப்போது ரெட் கார்டு முறை அமலுக்கு இல்லாததால் அது நகைச்சுவையாகவே எடுத்துக்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.