மனைவிக்கு ஜீவனாம்சம் செலுத்த வேண்டும்… மாதாமாதம் ரூ.50,000 செலுத்த கிரிக்கெட் வீரருக்கு நீதிமன்றம் உத்தரவு!
அந்த வழக்கில் இப்போது அவருக்கு ஜீவனாம்சமாக 50,000 ரூபாய் கொடுக்க நீதிமன்றம் கூறியுள்ளது. இதுவரை 80,000 செலுத்தி வந்த ஷமி, இனி 50,000 ரூபாயையும் சேர்த்து செலுத்த வேண்டும்.
இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, தனது பிரிந்த மனைவி ஹசின் ஜஹான் மற்றும் அவரது மகளின் பராமரிப்புக்காக ஒவ்வொரு மாதமும் ரூ.1,30,000 செலுத்துமாறு மேற்கு வங்கத்தில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முகமது ஷமியின் விவாகரத்து
இந்திய கிரிக்கெட் அணியில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் முகமது ஷமி சமீபத்தில் நடந்த நியூசிலாந்து ஒரு நாள் போட்டியில் கூட தனது சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி இருந்தார். ஆனால் அவரது திருமண வாழ்வில் பல ஆண்டுகளாகவே பிரச்சனை நிலவி வருகிறது. முகமது ஷமி மற்றும் அவரது மனைவி ஹாசின் ஜஹானுக்கு இடையே சில ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
முகமது ஷமி மீது அவரது முன்னாள் மனைவி ஹாசின் ஜவஹான் பல்வேறு புகார்களை தெரவித்தார். வரதட்சணை கேட்டு ஷமி துன்புறுத்துவதாகவும், குடும்ப தகராறில் தன்னை தாக்கியதாக காவல்நிலையத்தில் பாலியல் மற்றும் குடும்ப துஷ்பிரயோக பிரிவுகளில் புகார் அளித்தார். ஆனால் ஹாசின் ஜஹானின் தொடர் புகார்களுக்கு முகமது ஷமி மறுப்பு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் முகமது ஷமி - ஹாசின் ஜஹான் விவகாரத்து கோரிய வழக்கு கொல்கத்தா குடும்பநல நீதிமன்றத்தில் தொடரப்பட்ட நிலையில், இருவருக்கும் விவாகரத்து ஆனது.
வழக்கறிஞர் பேட்டி
ஷமியின் வழக்கறிஞர் சலீம் ரஹ்மான் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "தனது குழந்தைக்கும் தனக்கும் பராமரிப்பு தொகை வழங்கக் கோரி ஹாசின் வழக்கு தொடர்ந்தார். குழந்தைக்கு, எனது கட்சிக்காரரான ஷமி 80,000 பராமரிப்புத் தொகையாக வழங்க ஒப்புதல் அளித்தார். எனது கட்சிக்காரர் அதை 2018 முதல் செலுத்தி வருகிறார். ஆனால் அவரது மனைவி ஷமிக்கு ஆண்டு வருமானம் 10 கோடி இருப்பதாக கூறி, எனது கட்சிக்காரரிடம் தனக்காக மாதாந்திர பராமரிப்புக்காக ரூ.7 லட்சம் கோரினார்.
2018இல் தொடரப்பட்ட அந்த வழக்கில் இப்போது அவருக்கு ஜீவனாம்சமாக 50,000 ரூபாய் கொடுக்க நீதிமன்றம் கூறியுள்ளது. இதுவரை 80,000 செலுத்தி வந்த ஷமி, இனி 50,000 ரூபாயையும் சேர்த்து செலுத்த வேண்டும். முன்பு தனக்கும் குழந்தையையும் சேர்த்து மொத்தம் ரூ.10 லட்சம் கேட்டிருந்தார். குழந்தைக்கு ரூ.3 லட்சம் தருவதாக கூறிய ஷமி, நீதிமன்றம் அனுமதித்த 80 ஆயிரம் ரூபாய்க்கு ஒப்புதல் அளித்திருந்தார்.
மனைவிக்கு ரூ. 50,000
கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதி, அலிப்பூரில் (தெற்கு 24 பரகானாஸ்) பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் கூறப்பட்ட, மகளின் பராமரிப்புக்காக மாதம் ரூ.80,000 செலுத்த வேண்டும் என்ற முந்தைய உத்தரவை மாற்றியமைத்து, இப்போது அவர் தனது பிரிந்த மனைவிக்கு கூடுதலாக ரூ.50,000 செலுத்தவேண்டும் என்று கூறியுள்ளது. ஒவ்வொரு மாதமும் 10 ஆம் தேதிக்குள் பணத்தை செலுத்துமாறு ஷமிக்கு நீதிமன்றம் மேலும் கூறியது.
நீதிமன்ற உத்தரவு
“ஷமியின் மனைவி/பாதிக்கப்பட்ட பெண்ணின் இடைக்காலப் பராமரிப்புக்காக மாதந்தோறும் ரூ. 50,000/-ஐ பண உதவியாக செலுத்துமாறும், அதைத் தொடர்ந்து வரும் ஒவ்வொரு ஆங்கில நாட்காட்டி மாதத்தின் 10வது நாளுக்குள் அதைச் செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. இடைக்கால விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்ட நாள் முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது.
எல்.டி விசாரணை நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி மைனர் குழந்தைக்கு இடைக்கால பராமரிப்பு வழங்க பிரதிவாதி எண் 1-ற்கு மேலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது, மேலும் அந்த உத்தரவு இடைக்கால விண்ணப்பத்தை தாக்கல் செய்த தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும்" என்று நீதிமன்றத்தின் உத்தரவு கூறுகிறது. ஜஹான் 2014 இல் ஷமியை திருமணம் செய்வதற்கு முன்பு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக மாடலாகவும் சியர்லீடராகவும் பணிபுரிந்தார். தம்பதியருக்கு 2015 இல் ஒரு பெண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.