Mohammed Shami: T20 உலகக் கோப்பை தொடரில் ஷமி பங்கேற்பதில் சிக்கலா? என்ன காரணம்?
இந்திய கிரிக்கெட் அணி வரும் அக்டோபர் 23ஆம் தேதி டி20 உலகக் கோப்பையின் முதல் போட்டியில் களமிறங்குகிறது.
இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது. இதைத் தொடர்ந்து இந்திய அணி அடுத்து இங்கிலாந்து அணியுடன் 3 டி20 மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இதைத் தொடர்ந்து டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி களமிறங்க உள்ளது.
இந்நிலையில் டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக இந்த 8 டி20 போட்டிகளில் இந்திய அணி வீரர்களை தேர்வு செய்ய பயன்படுத்தும் என்று கருதப்படுகிறது. இந்தச் சூழலில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி இந்திய அணியில் இடம்பெற வாய்ப்பு மிகவும் குறைவு என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து ஆங்கில தளம் ஒன்று வெளியிட்டுள்ள தகவலின்படி இந்திய அணியின் தேர்வுக்குழுவினர் முகமது ஷமியின் பெயரை பரிசீலிக்கவில்லை என்று தெரிகிறது. அவருடைய வயது மற்றும் ஃபார்ம் காரணமாக அவருடைய பெயரை எடுத்து கொள்ளவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு பதிலாக இளம் வேகப்பந்துவீச்சாளர்களை இந்திய அணி களமிறக்க திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. இதன்காரணமாக முகமது ஷமி அணியில் இடம்பெறும் வாய்ப்பு குறைவு என்று கருதப்படுகிறது.
இந்திய அணியில் முன்னணி வேகப்பந்துவீச்சாளர்புவனேஸ்வர் குமார் மட்டும் வைத்திருக்க போவதாக தெரிகிறது. அவர் தவிர அனுபவ வீரர் பும்ரா இடம்பெறுவார். இவர்களுடன் இளம் வேகப்பந்துவீச்சாளர்கள் அணியில் களமிறக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. முகமது ஷமி கடைசியாக கடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் நமீபியா அணிக்கு எதிராக டி20 போட்டியில் களமிறங்கினார். அதன்பின்னர் அவர் இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் களமிறங்கவில்லை. இந்தச் சூழலில் இந்த தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. முகமது ஷமி இந்திய அணிக்காக 17 டி20 போட்டிகளில் மட்டும் விளையாடி 18 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி கடந்த டி20 உலகக் கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. பாகிஸ்தான், நியூசிலாந்து உள்ளிட்ட அணிகளிடம் தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்தது. ஆகவே இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே ரசிகர்களின் எண்ணமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்