(Source: ECI/ABP News/ABP Majha)
Harbhajan Singh: ’ஆஸ்திரேலியா மனதளவில் பலவீனமான அணி..’ கடுமையாக விமர்சித்த ஹர்பஜன் சிங்..! ஏன் தெரியுமா?
Harbhajan: ஆஸ்திரேலிய அணி மனதளவில் மிகவும் பலவீனமான அணியாக உள்ளது என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் மிகவும் காட்டமாக விமர்சித்துள்ளார்.
"இந்தியாவுக்கு இதற்கு முன்னர் சுற்றுப்பயணம் செய்த மற்ற ஆஸ்திரேலிய அணிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் 30-40 ஆண்டுகள் பின்னோக்கிச் செல்ல வேண்டாம், ஆனால் அவ்வளவு தூரம் சென்றாலும் - இது தான் பலவீனமான அணி என்று நான் நினைக்கிறேன். திறமை அடிப்படையில் அல்ல, மனரீதியாக அவர்கள் மிகவும் பலவீனமானவர்கள். ஆஸ்திரேலிய அணிகள் முன்பு இருந்ததைப் போல அவர்களால் அழுத்தத்தைக் கையாள முடியவில்லை. நாங்கள் பார்த்த அல்லது எதிர்த்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி இதுவல்ல என்று கூறுவது நியாயமாக இருக்கும்" என்று ஹர்பஜன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த ஹர்பஜன், ஆஸ்திரேலியா எப்போதுமே தந்திரமாக செயல்படும் சிறந்த கிரிக்கெட் அணியாக இருந்து வருகிறது என கூறியிருந்தார். ஆனால் தற்போதைய ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு வந்ததிலிருந்து தெளிவற்றதாக இருப்பதாகக் கூறினார்.
"எந்த ஒரு நாட்டுக்கும் சுற்றுப்பயணம் செய்வதற்கு முன்பு ஆஸ்திரேலிய வீரர்கள் நிறைய திட்டங்களை வைத்திருப்பார்கள். மற்ற அணிகளை விட அவர்கள் நிலைமைகளை நன்கு புரிந்து கொண்டவர்களாக இருப்பார்கள், அதனால்தான் அவர்கள் மற்றவர்களை விட, இந்தியாவிலும் கூட, கொஞ்சம் வெற்றி பெற்றனர். ஆனால் தற்போதுள்ள ஆஸ்திரேலிய அணி, குறிப்பாக, எந்த திட்டமும் இல்லாமல் குழப்ப மனநிலையில் உள்ளது. ஆனால் கடந்த கால ஆட்டங்களில் அவர்கள் சிறப்பாக விளையாடினர். இந்திய ஆடுகளத்தின் நிலைமைகள் எந்த ஒரு பேட்டருக்கும் சவாலாக இருக்கும் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். முதல் பந்திலிருந்தே பந்து சுழலும் என்பதை அவர்கள் தெரிந்து வைத்து இருந்தார்கள். கடந்த 8-10 ஆண்டுகளில், 2012-13 ல், இதேபோன்ற விக்கெட்டுகளை இழந்தனர். ஆனால் அந்த நேரத்தில் அவர்கள் இதை விட சிறப்பாக போராடினர். ஆனால், தற்போது உள்ள அணியில், அந்த சவால்களை எதிர்கொண்டு விளையாடி அணிக்கு சாதகமான சூழலை உருவாக்கும் யாரையும் நான் பார்க்கவில்லை" என்று அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.