Ruturaj Gaikwad: நமக்கென்று நேரம் வரும்.. ருதுராஜ் இந்திய அணியில் தேர்வாகாதது குறித்து லட்சுமிபதி பாலாஜி ஓபன் டாக்!
விரைவில் வாய்ப்புக்கான கதவை உடைத்து கெய்க்வாட், நடராஜன் உள்ளே செல்வார்கள் என்கிற நம்பிக்கை உள்ளதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் லட்சுமிபதி பாலாஜி தெரிவித்துள்ளார்.
இந்தியா - இலங்கை:
இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இதில் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடரில் பங்கேற்க இந்திய அணி தற்போது இலங்கை புறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் ருதுராஜ் கெய்வாட் இடம்பெறாதது பலருக்கு ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ருதுராஜ்க்காக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், பத்ரிநாத் உள்ளிட்டோர் ஆதரவு குரல் கொடுத்து வருகின்றனர்.
பொறுமையாக இருக்க வேண்டும்:
இச்சூழலில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் நடைபெற்ற கிரிக்கெட் தொடர் நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் லட்சுமிபதி பாலாஜியிடம் ருதுராஜ் மற்றும் நடராஜன் இந்திய அணியில் இடம்பெறாதது குறித்து கேள்வி எழுப்பட்டது. அதற்கு பதில் அளித்த பாலாஜி, “ இந்திய அணியில் தேர்வு ஆகாமல் இருக்கும் முதல் வீரரும் இவர் கிடையாது, கடைசி வீரரும் இவர் கிடையாது;
View this post on Instagram
சவுரவ் கங்குலி, கவாஸ்கர், கபில்தேவ் என அனைவரும் இதுபோன்று நடைபெற்றுள்ளது; விளையாட்டைப்பொறுத்தவரை அணியின் தேர்வு நம் கையில் இல்லை; நமது வேலை சிறப்பாக செயல்படுவது மட்டும்தான்; சிலநேரங்களில் அதை நியாப்படுத்த முடியாது; அணியில் தேர்வாவதற்கு நாம் பொறுமையாக இருந்துதான் ஆகவேண்டும்; நமக்கென்று நேரம் வரும்.
அந்தநேரத்தில் இன்னும் சிறப்பாக செயல்பட்டு அந்த கதவை உடைக்கதான் பார்க்கவேண்டும். தேர்வாக கதவு திறக்க வேண்டும் என்று பார்க்க கூடாது. கூடிய விரைவில் ருதுராஜ் கெய்க்வாட், நடராஜன் வாய்ப்புக்கான கதவை உடைத்து உள்ளே செல்வார்கள் என்று நான் நம்புகிறேன்.” என்று கூறியுள்ளார்
-ஸ்ரீலிபிரியா