Joe Root Record: 147 ஆண்டுகால டெஸ்டில் முதன்முறை! புது சகாப்தம் படைத்த ஜோ ரூட் - என்ன?
147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்து அணிக்காக ஜோ ரூட் புது வரலாறு படைத்துள்ளார்.
உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக திகழ்பவர் ஜோ ரூட். இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான இவர் புது வரலாறு படைத்துள்ளார். ஒருநாள் போட்டியிலும் சிறந்த வீரரான இவர் டெஸ்ட் போட்டிகளில் உலகின் ஆகச்சிறந்த வீரர்களில் ஒருவராக திகழ்கிறார்.
147 ஆண்டுகாலத்தில் புது வரலாறு:
இங்கிலாந்து அணி தற்போது இலங்கை அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் ஆடி வருகிறது. இதில் இரு அணிகளும் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் சதம் அடித்து அசத்தியிருந்தார். இந்த நிலையில், இரண்டாவது இன்னிங்சிலும் தனி ஆளாக போராடிய ஜோ ரூட் சதம் அடித்து அசத்தினார். அவர் 103 ரன்கள் எடுத்து கடைசி ஆளாக அவுட்டானார்.
ஒரே டெஸ்ட்டில் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்து அசத்தியதுடன், இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் அடித்து விளாசியவர் என்ற புதிய வரலாறு படைத்துள்ளார். 147 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் இங்கிலாந்து அணிக்காக தனது 34வது சதத்தை நேற்று விளாசி இந்த புதிய சகாப்தத்தை ஜோ ரூட் படைத்துள்ளார்.
சச்சின் சாதனையை முறியடிப்பாரா?
இதற்கு முன்பு இந்த சாதனையை இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலெஸ்டர் குக் 33 சதங்களுடன் தன்வசம் வைத்திருந்தார். இந்த சாதனையை தற்போது ஜோ ரூட் தன்வசப்படுத்தியுள்ளார். மொத்தம் 145 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள ஜோ ரூட், மொத்தம் 1455 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 265 இன்னிங்சில் பேட் செய்து 34 சதங்கள், 5 இரட்டை சதங்கள், 64 அரைசதங்களுடன் 12 ஆயிரத்து 377 ரன்களை குவித்துள்ளார்.
தற்போது வரை டெஸ்ட் போட்டிகளில் 51 சதங்களுடன் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார். 33 வயதான ஜோ ரூட் அவரது சாதனையை முறியடிப்பதற்கான வாய்ப்புகள் சிறிதளவு இருந்தாலும், மேலும் பல வீரர்களை பின்னுக்குத் தள்ளி டெஸ்ட் போட்டிகளில் புது வரலாறு படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய வரலாறு படைத்துள்ள ஜோ ரூட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் அடிக்கும் 7வது சதம் இதுவாகும். லார்ட்ஸ் மைதானத்தில் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த 4வது வீரர் என்ற பெருமையையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன்பு வெஸ்ட் இண்டீஸ் ஜார்ஜ் ஹெட்லி ( 1939), இங்கிலாந்தின் கிரகாம் கூச் ( 1990) மற்றும் மைக்கேல் வாகன் (2004) ஆண்டுகளில் சதம் அடித்து அசத்தியுள்ளனர்.
டெஸ்ட் கிரிக்கெட் ஆடும் வீரர்களில் தற்போது டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரராக ஜோ ரூட் உலா வருகிறார். ஜோ ரூட் 171 ஒருநாள் போட்டிகளில் ஆடி 16 சதங்களும், 39 அரைசதங்களுடம் விளாசி 6 ஆயிரத்து 522 ரன்கள் எடுத்துள்ளார். 32 டி20 போட்டிகளில் ஆடி 5 அரைசதங்களுடன் 893 ரன்களும் எடுத்துள்ளார்.