Rohit Sharma: "ஹிட்மேன் அப்பவே அப்படி" விக்கெட் கீப்பிங் செய்யும் ரோகித்சர்மா - மிரட்டும் புகைப்படம்
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித்சர்மா கீப்பிங் செய்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித்சர்மா. ஹிட் மேன் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் சிக்ஸர்களை விளாசுவதில் கில்லாடியாக திகழ்கிறார். பேட்ஸ்மேனாக மட்டுமே கிரிக்கெட்டில் அசத்துபவர் ஐ.பி.எல். தொடரில் மற்றும் கடந்தாண்டு நடந்த ஒரு போட்டியில் பந்துவீசியது ரசிகர்களை நாம் பார்த்திருப்போம்.
கீப்பிங் செய்யும் ரோகித்சர்மா:
ஆனால், ரோகித் சர்மா தன்னுடைய இள வயதில் விக்கெட் கீப்பிங் செய்யும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்தியாவில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் ஒன்றின்போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ரோகித்சர்மாவின் பதின்ம வயதின்போது இந்த போட்டி நடைபெற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த போட்டி எந்த தொடர்? எப்போது நடைபெற்றது? என்ற தகவல் வெளியாகவில்லை.
இந்திய அணிக்காக அறிமுகமான பிறகு ரோகித்சர்மா ஒரு முறை கூட கீப்பிங் செய்ததே இல்லை. ரோகித்சர்மா விக்கெட் கீப்பிங் செய்வார் என்று கூட ரசிகர்கள் கருதியிருக்க மாட்டார்கள். தற்போது, ரோகித் சர்மா விக்கெட் கீப்பிங் செய்யும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கேப்டன்:
36 வயதான ரோகித் சர்மா கடந்த 2007ம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமானார். தனது சிறப்பான பேட்டிங் மற்றும் உழைப்பால் இந்திய அணியின் கேப்டனாக உயர்ந்துள்ளார். இதுவரை 54 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 10 சதங்கள், 1 இரட்டை சதம் மற்றும் 16 அரைசதங்களுடன் இணைந்து 3 ஆயிரத்து 738 ரன்களும், 262 ஒருநாள் போட்டிகளில் ஆடி 31 சதங்கள், 3 இரட்டை சதங்கள் மற்றும் 55 அரைசதங்களும் விளாசியுள்ளார். 151 டி20 போட்டிகளில் ஆடி 5 சதங்கள் மற்றும் 29 அரைசதங்கள் விளாசியுள்ளார்.
இதுமட்டுமின்றி 243 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 1 சதம், 42 அரைசதங்கள் உள்பட 6 ஆயிரத்து 211 ரன்களை எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 3 ஆயிரத்து 738 ரன்களையும், ஒருநாள் போட்டிகளில் 10 ஆயிரத்து 709 ரன்களையும், டி20 போட்டிகளில் 3 ஆயிரத்து 974 ரன்களையும் எடுத்துள்ளார்.
ஐ.பி.எல். தொடரில் ஹாட்ரிக்:
ஒரு பந்துவீச்சாளராக டெஸ்ட் போட்டிகளில் 2 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 9 விக்கெட்டுகளையும், டி20யில் 1 விக்கெட்டையும், ஐ.பி.எல். போட்டியில் 15 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். குறிப்பாக, மும்பை அணிக்காக 5 ஐ.பி.எல். கோப்பைகளை வென்று தந்த ரோகித் சர்மா, டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக ஆடியபோது மும்பை அணிக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றியது அசத்தியது குறிப்பிடத்தக்கது. ரோகித்சர்மா இந்தாண்டு நடைபெறும் டி20 உலகக்கோப்பை வரை ஆடுவார் என்று எதிர்பார்ககப்படுகிறது.
மேலும் படிக்க: Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்கும் கிரிக்கெட் பிரபலங்கள் யார்? யார்?
மேலும் படிக்க: ICC U19 WC: வெற்றியுடன் தொடங்கிய 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணி; வங்கதேசத்தை புரட்டி எடுத்து அபாரம்