Rohit Sharma: இலங்கை தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிப்பு! மீண்டும் வருகிறாரா ரோகித் சர்மா?
Rohit Sharma: இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
டி20 உலகக்கோப்பையை வென்ற பிறகு இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்றது. 5 போட்டிகளாக நடைபெற்ற இந்த தொடரில் சுப்மன் கில் தலைமையில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி களமிறங்கியது.
மீண்டும் வரும் ஹிட் மேன் ரோகித்?
இந்திய அணி இன்னும் சில நாட்களில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 போட்டிகள் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது. வரும் 27ம் தேதி இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி தொடங்குகிறது. சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஓய்வு பெற்றுவிட்டதால், இந்த தொடரிலும் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியே டி20 போட்டிகளில் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கைத் தொடரில் பங்கேற்க உள்ள டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒருநாள் போட்டிகளில் இந்திய கேப்டன் ரோகித்சர்மா பங்கேற்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
கோலி பங்கேற்பாரா?
இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியே ஒருநாள் தொடரில் பங்கேற்கும் என்று கருதப்பட்ட நிலையில், கேப்டன் ரோகித்சர்மா இந்திய அணியை வழிநடத்த உள்ளார் என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. இது இந்திய ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விராட் கோலி இந்த தொடரில் பங்கேற்பாரா? அல்லது அவருக்கு ஓய்வு அளிக்கப்படுமா? என்று இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. டி20 உலகக்கோப்பையை வென்ற பிறகு விராட் கோலி மற்றும் ரோகித்சர்மா அடுத்து வரும் மிகப்பெரிய தொடரிலே இந்திய அணிக்காக மீண்டும் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இலங்கை அணிக்கு எதிரான தொடரில் ரோகித் சர்மா பங்கேற்க உள்ளார் என்ற தகவல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டி20 யாருக்கு கேப்டன்?
மேலும், டி20 தொடருக்கான இந்திய அணியை சூர்யகுமார் யாதவ் வழிநடத்த உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ரோகித் சர்மா இந்திய அணியின் ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம்பெறாவிட்டால் ஹர்திக் பாண்ட்யா அல்லது கே.எல்.ராகுல் இந்திய அணியை வழிநடத்துவார்கள் என்று கருதப்படுகிறது. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்ற பிறகு இந்திய அணி எதிர்கொள்ளும் முதல் தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.