INDW vs AUSW: பந்துவீச்சு, பேட்டிங் என இரண்டிலும் கெத்து.. ஆஸ்திரேலியாவை கலங்கடிக்கும் இந்திய மகளிர் அணி..!
ஆஸ்திரேலியாவின் 219 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில் பதிலுக்கு பேட்டிங் செய்ய வந்த இந்திய அணி சிறப்பான தொடக்கத்தை பெற்றது.
மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இந்திய மகளிர் அணிக்கும் ஆஸ்திரேலியா மகளிர் அணிக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட்டின் முதல் நாளான நேற்று ஹர்மன்ப்ரீத் தலைமையிலான இந்திய அணி சிறப்பாகவே செயல்பட்டது. பலம் மிகுந்த ஆஸ்திரேலிய மகளிர் அணியை ஆல் அவுட் செய்து இந்திய பந்துவீச்சாளர் அசத்த, அதனை தொடர்ந்து முதல் நாளில் பேட்ஸ்மேன்கள் அபாரமாக பேட்டிங் செய்து விளையாடினர்.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் அலிசா ஹீலி பேட்டிங் செய்ய முடிவு செய்தார். முதலில் பேட் செய்ய வந்த ஆஸ்திரேலிய அணி 219 ரன்களுக்கு சுருண்டது. பதிலுக்கு, நேற்றைய நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 1 விக்கெட்டுக்கு 98 ரன்கள் எடுத்துள்ளது.
முதல் இன்னிங்ஸ் அடிப்படையில் ஆஸ்திரேலியாவை விட இந்திய அணி 121 ரன்கள் பின்தங்கியுள்ளது. தற்போது இந்திய அணியில் ஸ்மிருதி மந்தனா மற்றும் சினேகா ராணா ஆகியோர் அவுட்டாகாமல் களத்தில் உள்ளனர். தொடக்க வீரர் ஸ்மிருதி மந்தனா 43 ரன்களுடனும், சினே ராணா 4 ரன்களில் ஆட்டமிழக்காமல் நிற்கின்றனர். இதற்கு முன் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷெபாலி வர்மா 40 ரன்கள் எடுத்திருந்தபோது ஜெஸ் ஜான்சன் அவரை பெவிலியனுக்கு அனுப்பினார்.
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி:
முன்னதாக டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் அலிசா ஹீலி பேட்டிங் செய்ய முடிவு செய்தார். ஆஸ்திரேலியாவின் பேட்ஸ்மேன்கள் சீரான இடைவெளியில் பெவிலியன் திரும்பினர். தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய மூனி 40 ரன்கள் எடுத்து சிறப்பான தொடக்கம் தர, மற்றொரு தொடக்க வீரரான ஃபோப் லிட்ச்ஃபீல்ட் ரன் எதுவும் எடுக்காமல் நடையைக்கட்டினார். தொடர்ந்து, எலிஸ் பெரி 4 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சியளிக்க, கேப்டன் ஹீலி மற்றும் தஹிலியா மெக்ராத் ஆஸ்திரேலிய அணிக்காக நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருப்பினும், இருவரும் மூன்று இலக்க எண்ணை தொடாமல் போகவும், பின் வரிசை வீரர்கள் தொடர்ந்து சொதப்பவும் ஆஸ்திரேலிய அணி 219 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது.
ஆஸ்திரேலிய அணி சார்பில் அதிகபட்சமாக தஹிலா மெக்ராத் 50 ரன்களும், கேப்டன் ஹீலி 38 ரன்கள், மூனி 40 ரன்களும் எடுத்திருந்தனர்.
A brilliant bowling display from #TeamIndia! 🙌 🙌
— BCCI Women (@BCCIWomen) December 21, 2023
Australia all out for 219.
4⃣ wickets for @Vastrakarp25
3⃣ wickets for @SnehRana15
2⃣ wickets for @Deepti_Sharma06
Scorecard ▶️ https://t.co/8qTsM8XSpd #INDvAUS | @IDFCFIRSTBank pic.twitter.com/WVtphNFV2c
இந்திய அணியின் அதிகபட்சமாக பூஜா வஸ்த்ரகர் 4 விக்கெட்களை வீழ்த்தி இருந்தனர்.மேலும், சினேகா ராணாவுக்கு 3 விக்கெட்கலும், தீப்தி சர்மா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.
ஷெபாலி வர்மாவும், ஸ்மிருதி மந்தனாவும் எளிதாக ரன் குவித்தனர்:
ஆஸ்திரேலியாவின் 219 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில் பதிலுக்கு பேட்டிங் செய்ய வந்த இந்திய அணி சிறப்பான தொடக்கத்தை பெற்றது. இந்திய தொடக்க ஆட்டக்காரர்களான ஷெபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா முதல் விக்கெட்டுக்கு 90 ரன்கள் சேர்த்தனர். ஷெபாலி வர்மா 40 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார். ஆஸ்திரேலியா அணி சார்பில் ஜெஸ் ஜான்சன் மட்டுமே ஒரு விக்கெட்டை எடுத்துள்ளார்.