Ind Vs SL, Test Series: மொகாலியில் நாளை முதல் டெஸ்ட் : தோல்வியே காணாத இந்தியா? வெற்றியே பெறுமா இலங்கை?
இந்தியா - இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை பஞ்சாபின் மொகாலி மைதானத்தில் தொடங்குகிறது.
இலங்கை நாட்டு கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ஆடி வருகிறது. டி20 தொடரில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டி நாளை பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொகாலியில் நாளை தொடங்குகிறது. இந்தியாவும், இலங்கை அணியும் இதுவரை 44 டெஸ்ட் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இவற்றில், இந்திய அணி 20 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இலங்கை அணி 7 போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் 17 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது.
இலங்கை அணி இந்திய அணியை ஒருமுறை கூட டெஸ்ட் போட்டியில் வென்றதே கிடையாது. இலங்கை அணி இந்திய மண்ணில் இதுவரை 20 டெஸ்ட் போட்டிகள் இந்தியாவிற்கு எதிராக ஆடியுள்ளது. இவற்றில் 11 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. 9 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது. இதனால், இந்தியா தனது பெருமையை தக்க வைக்க போராடும். இலங்கை அணி புதிய வரலாற்றை பதிவு செய்ய கடும் நெருக்கடி அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை போட்டி நடைபெற உள்ள பஞ்சாப்பின் மொகாலியில் உள்ள ஐ.எஸ். பிந்த்ரா மைதானத்தில் இரு அணிகளுக்கும் இடையே ஒரு டெஸ்ட் போட்டி நடைபெற்றுள்ளது. அந்த போட்டியும் டிராவில் முடிந்துள்ளது. இந்த போட்டியில் டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சையே பெரும்பாலும் தேர்வு செய்யும். இந்திய அணியும் டாஸ் வென்றால் இலங்கை அணியை குறைந்த ரன்களில் சுருட்டி, இமாலய இலக்கை குவிக்க முயற்சிக்கும். இலங்கை அணியும் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்யவே விரும்பும்.
நாளை 100வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் விராட்கோலிக்கு இந்த போட்டி மிகவும் முக்கியமான போட்டியாக அமைந்துள்ளது. டெஸ்ட் போட்டிகளில் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக சதமடிக்காத விராட்கோலி, இந்த போட்டியில் சதமடிப்பார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அதேபோல, இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டன் ரோகித்சர்மாவிற்கும் இதுவே டெஸ்ட் கேப்டனாக முதல் போட்டியாகும்.
இரு அணிகளுக்கும் கடைசியாக நடைபெற்ற 5 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இரண்டு போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது. இந்த மைதானத்தில் முதலில் பேட் செய்யும் அணி சராசரியாக 355 ரன்களையும், இரண்டாவது இன்னிங்சில் சராசரியாக 379 ரன்களையும், மூன்றாவது இன்னிங்சில் 270 ரன்களையும், 4வது இன்னிங்சில் 129 ரன்களையும் எடுக்கலாம் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
இந்த மைதானத்தில் அதிகபட்சமாக 630 ரன்களும், குறைந்தபட்ச ரன்னாக 83 ரன்களும் எடுக்கப்பட்டுள்ளது.