INDvsNZ 2ND ODI: விடாமல் துரத்திய மழை...! ரத்தான இந்தியா - நியூசி. ஆட்டம்..! ரசிகர்கள் ஏமாற்றம்..
ஹாமில்டனில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
நியூசிலாந்தின் ஹாமில்டன் நகரில் செடன் பார்க்கில் இன்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த போட்டி அவுட்ஃபீல்ட் ஈரப்பதமாக இருந்த காரணத்தால் டாஸ் போடுவது தாமதம் ஆனது. பின்னர், நான்கு ஓவர்கள் மட்டுமே இந்திய அணி பேட்டிங் செய்த நிலையில், மீண்டும் ஆட்டம் மழையால் பாதியிலே நிறுத்தப்பட்டது.
பின்னர், சுமார் 4 மணி நேரம் இடைவேளைக்கு பிறகு ஆட்டம் 29 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்டு தொடங்கியது. 4.5 ஓவர்களில் 22 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணியில் கேப்டன் ஷிகர்தவான் 3 ரன்களில் அவுட்டாகினார்.
இதையடுத்து, சுப்மன்கில்லுடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். வெறும் 29 ஓவர்கள் மட்டுமே ஆட்டம் என்பதால் இருவரும் அதிரடியாக ஆடத் தொடங்கினர். சுப்மன்கில் பவுண்டரிகளாக விளாச, சூர்யகுமார் யாதவ் சிக்ஸர்களாக விளாசினார்.
இருவரும் இணைந்து 12.5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் மீண்டும் தொடங்கியது. சுப்மன்கில் 42 பந்துகளில் 4 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 45 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 25 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்ளுடன் 34 ரன்கள் எடுத்திருந்த நிலையில் களத்தில் இருந்தனர்.
Handshakes 🤝 all around after the second ODI is called off due to rain.
— BCCI (@BCCI) November 27, 2022
Scorecard 👉 https://t.co/frOtF82cQ4 #TeamIndia | #NZvIND pic.twitter.com/pTMVahxCgg
மழையால் மீண்டும் ஆட்டம் பாதிக்கப்பட்டதால் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் விரக்தியடைந்தனர். மழை விடாமல் பெய்து கொண்டே இருந்ததால் போட்டி நடுவர்கள் இந்த போட்டியை கைவிடுவதாக அறிவித்தனர். இதையடுத்து, ஹாமில்டன் நகரில் நடைபெற்ற இந்த இரண்டாவது போட்டி எந்த முடிவுமின்றி கைவிடப்பட்டது. இரு அணிகளின் அதிரடியையும் காணலாம் என்று வந்த இரு நாட்டு ரசிகர்களும் ஏமாற்றத்துடன் சென்றனர்.
இதனால், இரு அணிகளும் மோதும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. அந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும். அவ்வாறு போட்டி நடைபெற வேண்டும் என்றால், ஆட்டம் நடைபெறும் கிறைஸ்ட்சர்ச் மைதானத்தில் போட்டி தினமான வரும் 30-ந் தேதி மழை பெய்யாமல் இருக்க வேண்டும்.