Ind vs SA T20I Preview: உலக சாதனை படைக்குமா இந்திய அணி...? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெறும் முதல் டி20 போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி உலக அரிய உலக சாதனையை படைக்கும்.
ஐ.பி.எல். தொடர் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்க அணியுடன் மோத உள்ளது. இந்திய அணியுடன் டி20 கிரிக்கெட் தொடரில் மோதுவதற்காக தெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி இந்தியா வந்துள்ளது.
இரு அணிகளும் மோதும் முதல் டி20 கிரிக்கெட் டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தொடர்ச்சியாக 13 டி20 கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற முதல் அணி என்ற அரிய சாதனையை இந்தியா படைக்கும். இந்திய அணி கடந்தாண்டு உலககோப்பை டி20 போட்டியில் நியூசிலாந்து அணியுடன் தோல்வியடைந்த பிறகு தன்னை எதிர்த்து ஆடிய ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமீபியா, நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள், இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிராக தொடர்ச்சியாக 12 வெற்றிகளை பதிவு செய்துள்ளது.
டி20 தொடரில் தொடர்ச்சியாக 12 வெற்றிகளை பெற்ற அணி என்ற பெருமை இந்தியாவுடன் ஆப்கானிஸ்தான் தற்போது வரை பகிர்ந்து கொண்டுள்ளது. 2018ம் ஆண்டு பிப்ரவரி முதல் 2019ம் ஆண்டு செப்டம்பர் வரைக்குள் ஆப்கானிஸ்தான் இந்த சாதனையை படைத்திருந்திந்தது. இந்த சாதனையை அதிகம் அறியப்படாத ரோமானிய கிரிக்கெட் அணியும் அக்டோபர் 2020ம் ஆண்டு முதல் செப்டம்பர் 2021ம் ஆண்டு வரை செய்து ஆப்கானிஸ்தானுடன் சமநிலையில் உள்ளது.
ஆனால், சர்வதேச கிரிக்கெட் கணக்கின்படி ஆப்கானிஸ்தானும், இந்தியாவும்தான் தற்போது தொடர்ச்சியான வெற்றிகள் என்ற வரிசையில் முதலிடத்தில் உள்ளன. வரும் ஜூன் 9-ந் தேதி நடைபெற உள்ள கிரிக்கெட் போட்டியில் இந்தியா தென்னாப்பிரக்காவை வீழ்த்தினால் புதிய உலக சாதனையை படைக்கும்.
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் கே.எல்.ராகுல் தலைமையில் இந்திய அணி களமிறங்க உள்ளது. இந்த தொடரில் மூத்த வீரர்கள் விராட்கோலி, ரோகித்சர்மா, பும்ரா, ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இளம் வீரர்கள் தீபக் ஹூடா, ருதுராஜ் கெய்க்வாட், ரவி பிஷ்னோய், உம்ரான் மாலிக் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்க அணியில் குயின்டின் டி காக், மார்க்ரம், டேவிட் மில்லர், ரபாடா ஆகியோர் களமிறங்குகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்