India Domestic Cricket New Rules: எந்த சாக்குபோக்கும் வேணாம்; கோலி, ரோஹித் விதிவிலக்கல்ல; பறந்த புது உத்தரவு: பிசிசிஐ அதிரடி
ரோஹித் சர்மா உள்பட அனைவரும் உள்நாட்டு முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்தார்.
மத்திய ஒப்பந்தம் கொண்ட வீரர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்று தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்திய அணிக்காக விளையாடும் மத்திய ஒப்பந்தம் கொண்ட கிரிக்கெட் வீரர்கள் உள்நாட்டு முதல் தர கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். இதில் விளையாட முடியாது என இனி எந்த வீரர்களும் சாக்குப்போக்குகளை சொல்லக்கூடாது என பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விராட் கோலி, முகமது ஷமி, ரோஹ்த் சர்மா போன்ற முன்னணி வீரர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடுவதை காணலாம்.
கந்தேரியில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் ஷா தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். இந்த மைதானத்திற்கு தற்போது முன்னாள் கிரிக்கெட் வீரரும், செயலாளருமான நிரஞ்சன் ஷா பெயர் சூட்டப்பட்டுள்ளது. நிகழ்ச்சியின் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜெய் ஷா, “ இந்தியாவின் மத்திய ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர்கள் உள்நாட்டு போட்டிகளிலும் கட்டாயமாக விளையாட வேண்டும். இதற்கு பிசிசிஐ எந்தவித சாக்குபோக்குகளையும் பொறுத்துக்கொள்ளாது.
அப்படி அணி நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களை எந்த வீரரும் ஏற்க மறுத்தால், தலைமைத் தேர்வுக்குழு தலைவர் அந்த வீரர் தொடர்பான எந்த முடிவையும் எடுக்க சுதந்திரம் வழங்கப்படும். இதுகுறித்து ஏற்கனவே தொலைபேசியில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர், தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு நான் கடிதம் எழுத வேண்டும். ரோஹித் சர்மா உள்பட அனைவரும் உள்நாட்டு முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும்” என்று தெரிவித்தார்.
கிரேடு A+ வீரர்கள்: ரோஹித் ஷர்மா, விராட் கோலி, ஜஸ்பிரிட் பும்ரா, ரவீந்திர ஜடேஜா
கிரேடு A : ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி, ரிஷப் பந்த், அக்சர் படேல்
கிரேடு B : சேதேஷ்வர் புஜாரா, கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், முகமது சிராஜ், சூர்யகுமார் யாதவ், சுப்மான் கில்
கிரேடு C : உமேஷ் யாதவ், ஷிகர் தவான், ஷர்துல் தாக்கூர், இஷான் கிஷன், தீபக் ஹூடா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், கே.எஸ்.பாரத்
இதன்மூலம் ஐபிஎல் 2024 சீசனில் நேரடியாக விளையாட வரலாம் என்று இருக்கும் இஷான் கிஷன், க்ருனால் பாண்டியா மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் தங்களது சொந்த மாநிலங்களுக்கான அணிகளில் விளையாட வேண்டும் என்பது தெளிவாகிறது. கிரிக்கெட் ஆர்வாளர்கள், இந்த புதிய விதி குறித்து பாராட்டி வருகின்றனர். ஏனெனில் உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் நட்சத்திர வீரர்கள் ஆர்வம் குறைந்து வருவதை சரிசெய்யும் என தெரிவித்தனர்.
விராட், ஷமி பற்றி பேசிய ஜெய் ஷா:
தொடர்ந்து விராட்கோலி மற்றும் முகமது ஷமி குறித்து பேசிய ஜெய் ஷா, “15 வருடங்களில் யாராவது தனிப்பட்ட விடுப்பு கேட்டால் அதை கேட்பது அவருடைய உரிமை. விராட் காரணமே இல்லாமல் லீவு கேட்கும் வீரர் அல்ல. நாங்கள் எங்கள் வீரர்களை ஆதரிக்க வேண்டும், அவர்களை நம்ப வேண்டும்.
காயங்களுக்குப் பிறகு இந்திய அணியின் மீண்டும் வருவதற்கான பாதையில் இருக்கும் வீரர்களில் முகமது ஷமியும் ஒருவர். அவர் இப்போது காயம் காரணமாக ஓய்வில் இருக்கிறார். முகமது ஷமி குணமடைந்ததும் அவரது உடல் தகுதி குறித்து தெரிவிப்போம்” என்றார்.