Team India: பொறுமையே பெருமை.. விவேகத்தையும், நிதானத்தையும் இழக்கிறதா இளம் இந்தியா?
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி அதிரடி பாணியிலே அனைத்து போட்டிகளிலும் ஆட விரும்புவதால் சறுக்கலை சந்தித்து வருகிறது.

விளையாட்டு என்பது பொதுவாக திறமைக்கான சோதனையாக பலரும் கருதுகின்றனர். ஆனால், சில விளையாட்டு என்பது திறமைக்கான சோதனை மட்டுமின்றி பொறுமை மற்றும் சாதுர்யத்திற்கான சோதனையும் ஆகும். கிரிக்கெட் பிடிக்காத சிலர் அதை சோம்பேறிகள் ஆட்டம் என்றும், உடல் உழைப்பு இல்லாமல் ஆடும் விளையாட்டு என்றும் குறை கூறுவது உண்டு.
பொறுமைக்கும், சாதுர்யத்திற்குமான சோதனை:
ஆனால், கிரிக்கெட் விளையாடுபவர்களுக்குத்தான் அதன் அருமை தெரியும். கிரிக்கெட் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 வடிவங்களில் ஆடப்பட்டு வருகிறது. இந்த 3 வடிவங்களில் மிக மிக சவாலான கிரிக்கெட் என்பது டெஸ்ட் கிரிக்கெட் ஆகும். ஏனென்றால், டெஸ்ட் கிரிக்கெட் என்பது பொறுமைக்கும், சாதுர்யத்திற்கும் நடக்கும் சோதனை ஆகும்.
இந்த சோதனையை இந்திய கிரிக்கெட் அணி கடந்த அரை நூற்றாண்டுகளாக அபாரமாக வென்று உலக கிரிக்கெட்டில் தனக்கென தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளது. அதற்கு கவாஸ்கர், கபில்தேவ், சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், விவிஎஸ் லட்சுமணன், புஜாரா, விராட் கோலி, வாசிம் ஜாபர் என ஏராளமானோரை உதாரணமாக கூறலாம். ஆனால், அதன் அஸ்திவாரம் கடந்த சில ஆண்டுகளாக ஆட்டம் காண்பது என்பது போல உள்ளது.
டெஸ்ட் தோல்வி:
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 124 ரன்கள் கூட எடுக்க முடியாமல் தோல்வி அடைந்தது. இந்திய அணி இதுவரை 150 ரன்களுக்கும் குறைவான இலக்கை எட்ட முடியாமல் சொந்த மண்ணில் 2 முறை மட்டுமே தோல்வி அடைந்துள்ளது. அந்த இரண்டு தோல்விகளும் கடந்தாண்டும், நடப்பாண்டும் நடந்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட்டிற்கு முன்பு டெஸ்ட் கிரிக்கெட் என்பது பந்துவீச்சாளர்களின் ஆதிக்கமாகவும், ஒருநாள் போட்டி என்பது பந்துவீச்சு மற்றும் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கமாகவும் இருந்தது. ஆனால், ஐபிஎல்-க்கு பிறகு அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். குறிப்பாக, டெஸ்ட் கிரிக்கெட்டிலும் டி20 பாணியில் ஆட அனைவரும் முயற்சிப்பதே இந்த சறுக்கலுக்கு மிகப்பெரிய காரணமாக மாறியுள்ளது.
அதிரடி பாணி ஆரோக்கியமற்றது:
அதிரடி பாணியிலே டெஸ்ட் கிரிக்கெட்டில் அணுகுவது ஆரோக்கியமற்ற போக்காகும். ஏனென்றால் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் வெள்ளை நிற பந்தில் ஆடப்படும் கிரிக்கெட். ஆனால், டெஸ்ட் கிரிக்கெட் சிவப்பு நிற பந்தில் ஆடப்படும் கிரிக்கெட். இது பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான பந்து ஆகும். இன்ஸ்விங், அவுட் ஸ்விங், ஸ்பின், லைன், லென்த் என அனைத்திலும் பந்துவீச்சாளருக்கு சாதகமாக இந்த பந்து இருக்கும்.
இந்த பந்தில் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சவால் விடுத்தனர் அந்த காலத்தில் மெக்ராத், பொல்லாக், வாசிம் அக்ரம், ப்ரட் லீ, வார்னே, முரளிதரன், சமிந்தா வாஸ் என பெரிய பட்டாளமே இருந்தனர். அவர்களை திறம்பட எதிர்த்து சாதித்ததாலே சச்சின், லாரா, டிராவிட், லட்சுமணன், அலஸ்டயர் குக், பாண்டிங், போன்றோரை கொண்டாடுகிறோம்.
ஆனால், இன்று ரன் எடுக்க வேண்டும் என்ற மனநிலையிலே இருப்பதையே குறிக்கோளாக பேட்டை சுழற்றி விக்கெட்டை பறிகொடுத்து வருகின்றனர் இந்திய வீரர்கள். ஆனால், களத்தில் பொறுமையுடனும், சாதுர்யமாகவும் நின்று ஆட்டத்தை மெல்ல மெல்ல கட்டுப்பாட்டில் எடுக்கும் மனநிலையை மறந்து வருகின்றனர்.
பேட்டிங் பிட்ச்:
இதுமட்டுமின்றி சமீபகாலமாக பெரும்பாலான அணிகள் டெஸ்ட் போட்டியிலும் பேட்டிங்கிற்கு சாதகமான மைதானத்தை அமைத்து தருமாறு மைதான பராமரிப்பாளர்களிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். அதுபோன்ற மைதானங்களிலே ஆடி, ஆடி இந்திய அணி மட்டுமின்றி பெரும்பாலான அணிகள் பழகியதால் பந்துவீச்சுக்கு சாதகமான மைதானத்தில் ஆட தடுமாறி வருகின்றனர். இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி பேட்டிங்கில் ஆதிக்கமும், வெற்றியும் பெற்ற மைதானமும் பேட்டிங்கிற்கு சாதகமான மைதானமே ஆகும்.
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்டில் ஆடிய ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், ஜுரல், ரிஷப்பண்ட், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், அக்ஷர் படேல் அனைவரும் திறமையான பேட்ஸ்மேன்கள் என்பதில் சந்தேகம் இல்லை. இவர்களில் கே.எல்.ராகுலும், ஜடேஜாவும் அனுபவசாலிகள். அவர்கள் கிரிக்கெட்டின் வடிவத்திற்கு ஏற்ப தங்கள் ஆட்டத்தின் வேகத்தை மாற்றிக் கொள்கின்றனர்.
வாய் ஜம்பவத்தை குறைக்க வேண்டும்:
ஆனால், மற்ற வீரர்கள் சூழலுக்கு ஏற்ப தங்களை வடிவமைத்துக் கொள்ள வேண்டும். அதேசமயம், அணியில் நிலையான இடம் என்பதும் அவசியமானது ஆகும். துருவ் ஜுரல், சாய் சுதர்சன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு அவ்வப்போது மட்டும் அணியில் இடம் கிடைக்கிறது. ரிஷப் பண்ட் அடிக்கடி காயத்தில் சிக்கிக் கொள்கிறார். இந்திய அணியின் வீரர்கள் உடற்தகுதியை சரியாக பராமரிக்க வேண்டியது அவசியம்.
அதேசமயம் எதிரணியை தங்களது திறமையால் மட்டுமே வீழ்த்த வேண்டுமே தவிர, வாய் வார்த்தைகளால் வம்பிழுத்து வீழ்த்த முடியும் என்ற தவறான போக்கையும் கைவிட வேண்டும். தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்டில் கேப்டன் பவுமாவை இந்திய வீரர்கள் தரக்குறைவாக பேசியதற்கு அவர் இரண்டாவது இன்னிங்சில் அவுட்டாகாமல் 55 ரன்கள் எடுத்ததுடன் தனது அணியை வெற்றி பெற வைத்து பதிலடி தந்தார். இதை சரி செய்ய வேண்டிய கம்பீர் அணிக்குள் இதை சரி செய்யாமல் கோலி, ரோகித்தை எப்படி ஓரங்கட்டுவது? என்பதிலே குறியாக இருப்பதாக விமர்சனங்கள்தான் பரவலாக உள்ளது.
இந்திய அணி தனது தவறுகளை உடனடியாக சரி செய்யாவிட்டால் அரை நூற்றாண்டு சாம்ராஜ்யம் அடியோடு சரியும் அபாயம் உண்டாகும் என்பதில் சந்தேகம் இல்லை.



















