IND vs WI 1st ODI: பயம் காட்டிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்... 3 ரன்களில் த்ரில் வெற்றி பெற்ற இந்திய அணி!
ஒரு கட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று விடுமோ என இந்திய ரசிகர்களே நினைத்திருப்பார்கள். அந்த அளவுக்கு அவர்கள் ஆட்டம் இருந்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷிகர்தவான் தலைமையிலான இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி டிரினிடாட்டில் நடந்தது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணியில் அதிரடியாக ஆடி சுப்மன் கில் 6 பவுண்டரி 2 சிக்ஸருடன் 64 ரன்களில் கேப்டன் நிகோலஸ் பூரணின் அபாரமாக ரன் அவுட்டால் வெளியேறினார்.
மறுபுறம் நிதானமாக ஆடிய கேப்டன் ஷிகர் தவான் - ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை வெளுத்து வாங்கியது.தவான் சதமடிப்பார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவர் அணியின் ஸ்கோர் 213 ரன்களை எட்டியபோது 99 பந்துகளில் 10 பவுண்டரி 3 சிக்ஸருடன் 97 ரன்களில் அவுட்டானார். ஸ்ரேயாஸ் அய்யரும் 54 ரன்கள் எடுத்தார். பின்னால் வந்த வீரர்கள் தங்கள் பங்களிப்பை அளிக்க 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் அல்ஜாரி ஜோசப், மோட்டி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் 309 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களம் கண்ட வெஸ்ட் இண்டீஸ் அணியினர் தாங்கள் ஒன்றும் சளைத்தவர்கள் இல்லை என்பது போல இந்திய அணியின் பந்துவீச்சை விளாச தொடங்கினர். அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர் கேல் மேயர்ஸ் 75, ஷர்மா புரூக்ஸ் 46, பிராண்டன் கிங் 54 ரன்கள் விளாச ஒரு கட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று விடுமோ என இந்திய ரசிகர்களே நினைத்திருப்பார்கள்.
ஆனால் 50 ஓவர்கள் முடிவில் அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 305 ரன்களே எடுத்தது. இதனால் 3 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் முகம்மது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்,ஷர்துல் தாகூர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 2வது போட்டி நாளை (ஜூலை 24) இதே மைதானத்தில் நடக்கவுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்