IND W vs IRE W: 23 வயசுல இப்படி ஒரு திறமையா? தடுமாறிய அயர்லாந்து! தாங்கிப் பிடித்த கேப்டன் கேபி!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அயர்லாந்து கேப்டன் கேபி லீவிஸ் அபாரமான பேட்டிங்கால் இந்திய அணிக்கு 233 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் ஆடி வருகிறது. இரு அணிகளும் முதல் ஒருநாள் போட்டி குஜராத்தில் உள்ள ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
தடுமாறிய அயர்லாந்து:
ஆட்டத்தைத் தொடங்கிய அயர்லாந்து அணிக்கு இந்திய பந்துவீச்சாளர்கள் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தந்தனர். தொடக்க வீராங்கனை சாரா போர்ப்ஸ் 9 ரன்னிலும், அடுத்து வந்த உனா ரேமண்ட் 5 ரன்னிலும், ஓர்லா 9 ரன்னிலும், லாரா டக் அவுட்டும் ஆகினர். அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால் அயர்லாந்து அணி தடுமாறியது.
13.3 ஓவர்களில் அயர்லாந்து அணி 54 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில், தொடக்க வீராங்கனையாக வந்த கேப்டன் கேபி லீவிசுடன் லீ பால் ஜோடி சேர்ந்தார். இருவரும் இணைந்து நிதானமாக ஆடினார். அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த அயர்லாந்து 100 ரன்களுக்குள் சுருண்டு விழும் என்று எதிர்பார்த்த இந்திய அணிக்கு அதிர்ச்சி தரும் விதமாக களத்தில் நங்கூரமிட்டனர்.
தாங்கிப் பிடித்த கேபி லீவிஸ்:
இருவரும் இணைந்து நிதானமாகவும், ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கும் அடித்தனர். இதனால் 100 ரன்களை கடந்தது. இவர்களைப் பிரிக்க கேப்டன் மந்தனா டிடாஸ் சது, சாயாலி சத்கரே, சைமா தாக்கூர், பிரியா மிஸ்ரா, தீப்தி ஷர்சா மற்று் பிரதிகா ராவல் என பலரையும் பயன்படுத்தினார். ஆனால், உடனடியாக அதற்கு பலன் கிடைக்கவில்லை. 54 ரன்களில் 5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். இவர்களின் பார்ட்னர்ஷிப் 100 ரன்களை கடந்தது.
கடைசியில் அபாரமாக ஆடிய லீ பால் ரன் அவுட்டானார். அவர் 73 பந்துகளில் 7 பவுண்டரியுடன் 59 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார். அதன்பின்னரே இந்திய அணி நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்திய அணிக்கு குடைச்சல் தந்த கேப்டன் கேபி லீவிஸ் தீப்தி ஷர்மா சுழலில் சிக்கினார். நெருக்கடியான நேரத்தில் அபாரமாக ஆடிய கேபி லீவிஸ் 129 பந்துகளில் 15 பவுண்டரியுடன் 92 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
அயர்லாந்து கேப்டனுக்கு குவியும் பாராட்டு:
கடைசியில் வந்த அர்லீனே கெல்லி அதிரடியாக 28 ரன்களை எடுக்க அயர்லாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 232 ரன்களை எடுத்தது. இந்திய அணிக்காக பிரியா மிஸ்ரா 2 விக்கெட்டுகளையும், டிடாஸ் சது, சாயாலி, தீப்தி ஷர்மா தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
23 வயதே ஆன கேபி லீவிஸ் அயர்லாந்து அணியின் தலைசிறந்த வீராங்கனையாக உள்ளார். அவர் இதுவரை 49 ஒருநாள் போட்டிகளில் ஆடி 1322 ரன்களையும், 94 டி20 போட்டிகளில் ஆடி 2 ஆயிரத்து 318 ரன்களையும் எடுத்துள்ளார். டி20யில் இரண்டு சதங்களும், 13 அரைசதங்களையும், ஒருநாள் போட்டியில் 10 அரைசதங்களையும் விளாசியுள்ளார். நெருக்கடியான நேரத்தில் தனி ஆளாக அணியை காப்பாற்றிய கேபி லீவீசுக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.