Watch Video: ஒரே பந்தில் 13 ரன்கள்! ஜெய்ஸ்வால் படைத்த புதிய உலக சாதனை - நீங்களே பாருங்க
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் ஜெய்ஸ்வால் ஒரே பந்தில் 12 ரன்கள் விளாசி புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
சுப்மன்கில் தலைமையிலான இந்திய அணி டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று ஆடியது. இதில், கடைசி டி20 போட்டி நேற்று ஹராரேவில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஒரே பந்தில் 12 ரன்கள்:
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணிக்காக ஜெய்ஸ்வால் – சுப்மன்கில் ஆட்டத்தை தொடங்கினர். சிக்கந்தர் ராசா வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரின் முதல் பந்திலே ஜெய்ஸ்வால் இமாலய சிக்ஸர் ஒன்றை விளாசினார். சிக்கந்தர் ராசா வீசிய அந்த பந்து நோ பாலாக அமைந்தது. இதனால், சிக்ஸருடன் சேர்ந்து 7 ரன்கள் இந்திய அணிக்கு கிடைத்தது.
மேலும், ப்ரீ- ஹிட்டும் கிடைத்தது. இதையடுத்து, சிக்கந்தர் ராசா வீசிய ப்ரீ-ஹிட் பந்தையும் ஜெய்ஸ்வால் சிக்கந்தர் ராசா தலைக்கு மேலே நேராக சிக்ஸருக்கு பறக்க விட்டார். இதன்மூலம் இந்திய அணிக்கு முதல் பந்திலே 13 ரன்கள் கிடைத்தது. சர்வதேச டி20 வரலாற்றில் ஒரு அணியாக ஆட்டத்தின் முதல் பந்திலே 13 ரன்கள் எடுத்த அணி என்ற பெருமை இந்திய அணிக்கு கிட்டியது. அதேபோல, ஒரு வீரராக சர்வதேச டி20 போட்டியில் ஆட்டத்தின் முதல் பந்திலே 12 ரன்கள் அடித்த வீரர் என்ற புதிய வரலாற்றுச் சாதனையை ஜெய்ஸ்வால் படைத்தார்.
.@ybj_19 started the final T20I of the Zimbabwe tour with a flourish 💥💥#SonySportsNetwork #ZIMvIND #TeamIndia | @BCCI pic.twitter.com/7dF3SR5Yg1
— Sony Sports Network (@SonySportsNetwk) July 14, 2024
இந்த தொடரில் சிறப்பாக பேட்டிங் செய்த ஜெய்ஸ்வால் நேற்றைய போட்டியில் 5 பந்துகளில் 2 சிக்ஸருடன் 12 ரன்கள் எடுத்து போல்டானார். இளம் வீரரான ஜெய்ஸ்வால் இந்திய அணியின் வருங்கால நட்சத்திரமாக கருதப்படுகிறார்.
தொடரை வென்ற இந்தியா:
நேற்றைய போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது. ஜெய்ஸ்வால், சுப்மன்கில், அபிஷேக் சர்மா அடுத்தடுத்து அவுட்டாக விக்கெட் கீப்பர் சாம்சன் பொறுப்புடன் ஆடி 58 ரன்கள் எடுத்தார். ரியான் பராக் 22 ரன்களும், ஷிவம் துபே 26 ரன்களும், ரிங்குசிங் 11 ரன்களும் எடுத்தனர்.
167 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய ஜிம்பாப்வே அணிக்காக மையர்ஸ் மட்டும் 34 ரன்கள் எடுத்தார். மருமனி, பராஸ் அக்ரம் தலா 27 ரன்கள் எடுத்தனர். ஆனாலும், அவர்கள் 125 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் இந்திய அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி இந்த டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றுள்ளது.
மேலும் படிக்க: Euro 2024 Final: யூரோ கால்பந்து போட்டி - தோல்வியே காணாத ஸ்பெயின் - இங்கிலாந்தை வீழ்த்தி 4வது முறையாக சாம்பியன்
மேலும் படிக்க: Copa America 2024: கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி - 16வது முறையாக பட்டம் வென்று மெஸ்ஸியின் அர்ஜெண்டினா சரித்திரம்1