IND vs WI: சீனியர் வீரர்களுக்கு ஓய்வு.. புதிய அணியில் ஜூனியர் வீரர்கள்.. எதிர்பார்க்கப்படும் இந்திய அணி..!
ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, டெஸ்ட் தொடரில் மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியை வருகின்ற ஜூன் 27 ம் தேதி அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தின்போது இந்திய அணி இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்தில் பணிச்சுமை காரணமாக பல சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெஸ்டில் மட்டும் விராட், ரோகித்:
ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, டெஸ்ட் தொடரில் மட்டுமே விளையாட இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல், தொடர்ந்து போட்டிகளில் களமிறங்கிய முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் பணிச்சுமையை கருத்தில் கொண்டு ஓய்வு அளிக்கப்படும். இதையடுத்து இந்தியாவின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பெற மாட்டார்கள்.
சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், உம்ரான் மாலிக் மற்றும் அர்ஷ்தீப் சிங் போன்ற அனுபவம் குறைந்த வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணிக்கு அழைக்கப்படலாம். சாம்சன் மற்றும் உம்ரான் மாலிக் ஆகியோர் ஒருநாள் மற்றும் டி20 வடிவத்திலும், ஜெய்ஸ்வால் மற்றும் அர்ஷ்தீப் ஆகியோர் டெஸ்ட் அணியில் இடம்பிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேப்டனாக ஹர்திக் பாண்டியா..?
இன்சைட் ஸ்போர்ட்ஸ் தனது அறிக்கை ஒன்றில் பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாக செய்தி வெளியிட்டு இருந்தது. அதில், ” வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு ஹர்திக் பாண்டியாதான் எங்களது முதல் விருப்பம். ஆனால், டெஸ்ட் போட்டிகளில் அவரது உடல்நிலை எவ்வளவு தூரம் ஒத்துழைக்கும் என்று தெரியவில்லை. பிசிசிஐ தேர்வாளர்கள் அவரை அவரை வெள்ளை ஜெர்சியில் பார்க்க விரும்புகிறார்கள். ஆனால் குறிப்பாக ஒருநாள் போட்டிகளில் அவர் முக்கியமான வீரர் என்பதை கருத்தில் கொண்டு, மூன்று வடிவங்களிலும் விளையாடும் நிலையில் அவர் இருக்கிறாரா என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும்.” என தெரிவித்தார்.
வெஸ்ட் இண்டீஸ் எதிரான இந்திய அணியின் போட்டி அட்டவணை:
டெஸ்ட் தொடர்
முதல் போட்டி - ஜூலை 12, புதன் முதல் ஜூலை 16 வரை, ஞாயிறு - வின்ட்சர் பார்க், ரோசோ, டொமினிகாவில்.
இரண்டாவது போட்டி - ஜூலை 20, வியாழன் முதல் ஜூலை 24 வரை, திங்கள் - குயின்ஸ் பார்க் ஓவல், போர்ட் ஆஃப் ஸ்பெயின், டிரினிடாட்டில்.
ஒரு நாள் தொடர்
முதல் போட்டி - வியாழன், ஜூலை 27 - கென்சிங்டன் ஓவல், பிரிட்ஜ்டவுன், பார்படாஸில்.
இரண்டாவது போட்டி - ஜூலை 29, வெள்ளிக்கிழமை - கென்சிங்டன் ஓவல், பிரிட்ஜ்டவுன், பார்படாஸில்.
மூன்றாவது போட்டி - ஆகஸ்ட் 1, செவ்வாய் - குயின்ஸ் பார்க் ஓவல், போர்ட் ஆஃப் ஸ்பெயின், டிரினிடாட்டில்.
டி20 தொடர்
முதல் போட்டி - ஆகஸ்ட் 4, வெள்ளிக்கிழமை - குயின்ஸ் பார்க் ஓவல், போர்ட் ஆஃப் ஸ்பெயின், டிரினிடாட்டில்.
இரண்டாவது போட்டி - ஆகஸ்ட் 6, ஞாயிறு - கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் மைதானம்
மூன்றாவது போட்டி - ஆகஸ்ட் 8, செவ்வாய் - கயானாவின் பிராவிடன்ஸ் மைதானம்
நான்காவது போட்டி - ஆகஸ்ட் 12, சனிக்கிழமை - புளோரிடாவின் லாடர்ஹில், சென்ட்ரல் ப்ரோவர்ட் ரீஜினல் பார்க் ஸ்டேடியம் டர்ஃப் மைதானம்
ஐந்தாவது போட்டி - ஆகஸ்ட் 13, ஞாயிறு - புளோரிடாவின் லாடர்ஹில், சென்ட்ரல் ப்ரோவர்ட் ரீஜினல் பார்க் ஸ்டேடியம் டர்ஃப் மைதானம்